ஆசை அவசியம்

மாவீரன் அலெக்சாண்டர் மரணப்படுக்கையில் இருந்தபோது, உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
 ஆசை அவசியம்

தன்னிலை உயர்த்து! 34
 மாவீரன் அலெக்சாண்டர் மரணப்படுக்கையில் இருந்தபோது, உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், அவை பலனளிக்கவில்லை. இறக்கும் தறுவாயில் தனது அதிகாரிகளை அழைத்து, மூன்று ஆணைகளிட்டார்.
 "முதலாவதாக, நான் இறந்த பிறகு எனது சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த தலைசிறந்த நான்கு மருத்துவர்களே சுமந்து செல்ல வேண்டும். அப்பொழுதுதான் மரணத்தை உலகின் எத்தகைய மருத்துவர்களாலும் வெல்ல முடியாது என்று உலகிற்குப் புரியும். இரண்டாவதாக, எனது கைகள் சவப்பெட்டியின் வெளியில் தெரியுமாறு எடுத்துச் செல்ல வேண்டும். இது வெறும் கையோடு பிறந்த மனிதர்கள் இறுதியில் வெறுங்கையோடுதான் செல்வோம் என்பதை அறிந்து கொள்ளட்டும். மூன்றாவதாக, என்னை கல்லறைக்கு எடுத்துச் செல்கின்ற வழியில் எனது கருவூலத்தில் சேர்த்து வைத்திருக்கும், பொன், பொருள் மற்றும் நவரத்தினங்களை, வழிநெடுக தூவிக்கொண்டே செல்லுங்கள். நாம் ஆசையாய் எவ்வளவு செல்வங்களைச் சேர்த்தாலும் இறுதியில் அவை நம்முடன் வாராது. மண்ணில் விளைந்த அனைத்தும் இம்மண்ணிற்கே சொந்தம் என்று இந்த உலகிற்கு புரியும்'' என்றார்.
 ஆசை ஆசையாய் பல நாடுகளை வென்றார். இயற்கையின் நியதி அவரை வென்றபோது அவரது ஆசைகள் அனைத்தும் மாயை என்பதை மானுடத்திற்கு தனது கடைசிப் பயணத்தில் அதை சொல்லி முடித்தார். "ஒவ்வொரு மனிதனின் தேவைக்கும் இந்த உலகம் போதுமானது. ஆனால், மனிதனின் பேராசைக்கு இந்த உலகம் போதுமானதாக இல்லை" என்பார் மகாத்மா காந்தியடிகள்.
 இந்த உலகத்தில் நாம் அனைவரும் பயணிகளே. கருவறை என்னும் முதற்புள்ளியில் தொடங்கி, கல்லறை என்னும் கடைசிப் புள்ளிகளுக்கு இடையே பயணிப்பதுதான் வாழ்க்கை. வாழ்க்கை என்னும் பயணத்திற்கு தேவையானதை மட்டும் தேடிப் பெற்றுக் கொள்பவரே நல்ல மனிதர். அதே நேரத்தில், தனது தேவைகளுக்காக பிறரின் தேவைகளின் மீது கை வைப்பவர் ஒரு வகையில் திருடரே. இந்த பயணத்தில் முழுவதுமாய் இவ்வுலகை ரசிப்பவரே மகிழ்ச்சியான மனிதர்.
 இந்த உலகம் அழகானது, அற்புதமானது. தனக்கென்று ஓர் ஒழுங்கோடு பயணிக்கிறது. தன்னை தினமும் ஒருமுறை சுற்றிப் பார்த்துக்கொண்டு ஒரு நீள்வட்டப் பாதையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதில் உருவாகும் பருவ மாறுபாடுகளும் ஓர் ஒழுங்கின் வடிவோடு, இவ்வுலகிற்கு தேவையான அளவோடு இருக்கும்போது அது ரசிக்கப்படும். அளவோடு இருத்தலே ஆசை. காற்று ஆசையோடு வீசும் போது தென்றல். சற்று பேராசை கொண்டால் அது புயல். நீர் ஆசையாய் ஓடிக்கொண்டிருக்கும்போது நதி. வேகத்தில் பேராசை கொண்டால் அது வெள்ளம். ஆசையாய் எரியும்போது அது ஜோதி. அது பேராசை கொண்டு விரிந்தால் காட்டுத் தீ. எனவே, மிஞ்சுகின்ற ஆசைகள் அனைத்தும் ஆபத்தே. பேராசை ஆபத்தின் மறுவடிவமே.
 ஆசை என்பது மனதால் முதிர்ச்சிடையவது. ஆனால் அது முயற்சியை விடுவதல்ல. மண் மீது ஆசை கொண்டால் அது பேராசை, விண்ணைத் தொட விரும்பினால் அது முயற்சி. தேவைக்கு வாழ்வது ஆசை. ஆனால் பிறர் தேவையையும் அபகரிப்பது பேராசை. வாழ்வின் பொருளை தேடிச் செல்வது ஆசை, வாழ்க்கை முழுவதும் பொருள் சேர்க்க துடிப்பது பேராசை. ஆசை அவசியம், பேராசை அநாவசியம். பேரின்பம் நோக்குவது ஆசை, சிற்றின்பத்தில் உழலுதல் பேராசை. பயனுள்ளவற்றின் மீது விருப்பம் ஆசை; பயனற்றவற்றின் மீது விருப்பம் பேராசை; சாதிக்க துடிப்பது ஆசை, வீழ்த்த துடிப்பது பேராசை, முயற்சிகள் ஏணிப்படிகளாய் இருந்தால் அது ஆசை, முயற்சிகள் மற்றவர்களுக்கு முட்டுக்கட்டையாய் இருந்தால் அது பேராசை; அமெரிக்க நாட்டு எழுத்தாளர் நெப்போலியன் ஹில் "எல்லா சாதனைகளின் ஆரம்பப் புள்ளி ஆசை' என்கிறார் . ஆசை மேல் ஆசை வைத்தால் சலிப்பு ஒன்றே மிஞ்சும். ஆசைதான் உலக வளர்ச்சியின் அஸ்திவாரம்.
 துறவி ஒருவர் பொருட்காட்சிக்கு வந்தார். உள்ளே நிறைய பொருட்கள். எல்லாரும் பலவற்றை வாங்கிச் சென்றனர். ஆனால் அவர் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் திரும்பி வந்தார். வெளியே வந்தவரிடம் ஒருவர், "சுவாமி! நீங்கள் அனைத்து கடைகளுக்கும் சென்றீர்கள். ஆனால் எல்லா பொருட்களைப் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டீர்கள். ஆனால் எந்தப் பொருளையும் வாங்கவில்லை. உங்கள் கையில் பணம் இல்லையா?'' என்று கேட்டார். அதற்கு துறவி, "இந்த உலகில் எனக்கு தேவையில்லாத பொருட்கள் எத்தனை என்பதை தெரிந்து கொள்வதற்காவே இங்கு வந்தேன். இவ்வளவு பொருட்கள் இல்லாமல் நான் வாழ முடியும் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்'' என்றார். பொருட்கள் மகிழ்ச்சியல்ல. வாழ்வின் பொருளை அறிவதுதான் மகிழ்ச்சி.
 மண்ணில் விழும் மழைத்துளிகளில் தாமரை இலையில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் நீர்த்திவலையே அழகு. அதுபோல, உலக பொருட்களில் உலவி, அதில் ஒட்டாமல் வாழும் மனிதனே மனிதத்தின் அற்புதம். இவ்வுலகப் பொருட்கள் அனைத்தும் துன்பத்தைத் தன்னோடு அரவணைத்துக் கொண்டே வருகிறது. எனவே, பற்றுக்கொள்ளும் ஆசை விடுவதே ஆனந்தத்தின் அரும்பு.
 யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
 அதனின் அதனின் இலன்
 என்ற திருக்குறளில் பொருட்களிலிருந்து விலகி இருக்கும் வரை அப்பொருளால் துன்பமில்லை என உலகப் பற்றுகளில் ஒட்டிக்கொள்ளாமலிருக்க, இரு உதடுகளையும் ஒட்டாமல் பாடிச் சென்றார் திருவள்ளுவர்.
 இந்த உலகம் நிலையானது. இங்கு வாழ்க்கை மட்டும் நிலையில்லாதது. நிலையற்ற வாழ்க்கையில் நிலையானவற்றைத் தேடிப்போவது ஆசை. அதில் நிலையில்லாதவற்றை தேடிக் கொண்டிருந்தால் அது நிராசை. அந்தத் தேடுதல் தொடர்ந்தால் அது பேராசை.
 ஆசை என்றதும் ஒவ்வொரு மனிதனின் அடிமனதைத் தொடும் வரிகள் புத்தரின் வரிகளே. புத்த சமயத்தை விளக்கும் சுத்த பிதகத்தில், மனிதன் துன்பங்களிலிருந்து விடுபட "ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்று குறிப்பிடவில்லை. "சிற்றின்ப ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசையை ஒழித்தால் ஒழிய துன்பத்தை ஒழிக்க முடியாது' என்றார் புத்தர். "துன்பத்திற்கு தீர்வு நன்னம்பிக்கை, நல்லெண்ணம், நற்சொல், நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்சாட்சி மற்றும் நல்ல தியானம் என்னும் எட்டு வழிகளால் வாழ்வதே' என்றார். எண் வழிகளை யார் ஒருவர் "என்வழி" என்று பின்பற்றுகிறாரோ அவர்களுக்கு எந்நாளும் இன்பமே அன்றி துன்பம் இல்லை.
 பொய்மைப் பொம்மையை உயிரென ஆசைப்பட்டு வாங்கும் குழந்தை; தன் உடன்பிறந்தவனை விட தான் அதிகம் பெறவேண்டும் என்று ஆசைகொள்ளும் சிறுவர், சிறுமியர்; வளர்சிதை மாற்றத்தில் விட்டில் பூச்சிகளாய் விதவிதமான ஆசைகளில் வீழும் இளைஞர்கள்; அனுபவம் பெற்ற பின்பும் பேராசையால் பொருளின் பின்னால் ஓடும் பெரியவர்கள்; இவையனைத்தும் பேராசையின் பெயர் சொல்லும் வடிவங்கள். இருப்பினும் பேராசைகளையும், நிராசைகளையும் ஆசைகளாகவே சித்திரித்துவிட்டது உலகம். ஆகவேதான், பேராசைகள் நிறைந்தும் ஆசைகள் அளவாகவே தென்படுகின்றன.
 வாழ்க்கையின் வாசமே சுவாசம் தான். சுவாசம் மனிதனின் அத்தியாவசியம். அளவாய் சுவாசிக்க வேண்டும். ஆற்றலோடு சுவாசிக்க வேண்டும். சுவாசிக்கிறோம் என்று தெரிந்து சுவாசிக்க வேண்டும். சுவாசிக்க விரும்புவது ஆசை. தான் மட்டுமே சுவாசிக்கத் துடிப்பது பேராசை. சுவாசிப்பதற்கு காற்றறைகளைக் கட்டிக்கொள்ள ஆசைப்பட்டால் இந்த உலகம் கேலியாய் பார்க்கும். அதிக வீட்டறைகளைத் தேவையில்லாமல் கட்டிக்கொண்டாலும் இந்த உலகம் வித்தியாசமாகவே பார்க்கும்.
 மனிதன் இம்மண்ணில் பிறக்கின்ற பொழுது, ஏதோ ஒரு நற்காரியத்தை, செயல்படுத்துவதற்காகவே பிறக்கின்றான். ஒவ்வொரு மனிதனும் தெய்வத்தின் மறு உருவம். அத்தகைய புனிதமானவன், தன் வாழ்க்கைப் பயணத்தில் தன்னை அறியாமலேயே மாசுகளைச் சேர்த்து கொள்கிறான். தன்னை உருக்கிக் கொள்ளாத தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகளை போல், மாசுள்ளவர்கள் தங்களது உண்மைத்தன்மையை வெளிக்கொணர்வது இல்லை. சிற்றின்ப ஆசையே மனித அழுக்கின் அரசன். மனதில் பேராசை குடிகொண்டால் எத்தகைய மனிதானாலும் தனது வாழ்க்கையின் உன்னதத்தை அடைந்துவிட முடிவதில்லை. அது யயாதி மன்னனை போல, இவ்வுலகில் எத்தனை நூறு வருடங்கள் வாழ்ந்தாலும் சிற்றின்ப ஆசையில் மூழ்கித் தவித்து வாழ்க்கை இன்னும் தேவை என்று அழுவாரே தவிர, வாழ்க்கையின் தேவை என்ன என்பதை அறியார்.
 "தனிமனித நடவடிக்கை மூன்று முக்கிய ஆதாரங்களான ஆசை, உணர்ச்சி மற்றும் அறிவைச் சார்ந்தது' என்பார் பிளாட்டோ. வாழ்க்கையின் இலட்சியம் மிக உயர்ந்தது. இவ்வுலக வாழ்க்கையை விட்டுவிட்டு இறைவனோடு ஒன்று சேர்வது. இறைவனைச் சேர்ந்த பின்பும் உலக ஆசைகளைத் துறக்கவில்லையெனில் வாழ்வு சிறக்காது என்பதை "ஆசை அறுமின்! ஆசை அறுமின்! ஈசனோடாவது ஆசை அறுமின்கள்!' என்கிறார் திருமந்திரத்து திருமூலர்.
 ஒரு ஞானி காட்டில் தவம் செய்துகொண்டிருந்தார். அவ்வழியில் ஒரு மன்னர் தனது படையுடன் குதிரையில் வந்தார். ஞானியைக் கண்டதும் குதிரையிலிருந்து இறங்கி, அவரைப் பணிந்தார். "சுவாமி! நான் இந்நாட்டு மன்னன். அண்டை நாட்டுடன் போர் செய்து அந்நாட்டின் வளங்களையெல்லாம் கொண்டுவரச் செல்கிறேன். ஆதலால் என்னை ஆசீர்வதியுங்கள்''" என்றார். "அப்படியா!'' என்று சொல்லி தனது கையிலிருந்த ஒரு நாணயத்தை மன்னரிடம் தந்தார் ஞானி. மன்னர், ""சுவாமி! என்னிடம் பொன்னும், பொருளும் நிறைய உள்ளன. இந்த நாணயம் எதற்கு?'' என்றார்.
 "மன்னா! இந்த நாணயம் நான் வரும் வழியில் கிழே கிடந்தது. அது எனக்கு பயன்படாது. பணம் தேவைப்படுபவருக்கு இது பயன்படும். எனவே, இந்த நாணயத்தை யாருக்காவது கொடுத்துவிடவேண்டும் என்று முடிவு செய்தேன். வழிநெடுகிலும் நான் பார்த்த மக்களெல்லாம் தங்களுக்குக் கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாகவே இருந்தனர். நீங்கள்தான் பொன்னும் பொருளும் தேவைக்கு மேல் இருந்தும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறாய். அண்டை நாட்டு செல்வத்தின் மீது ஆசைகொண்டு படையெடுத்துச் செல்கிறாய். ஆதலால் தான், உனக்கு இந்த நாணயத்தைத் தருகிறேன்'" என்றார். மன்னர் தனது பேராசையின் தவறை உணர்ந்து அண்டை நாட்டின் மீதான தனது பேராசையையும் தவிர்த்தார்.
 உழைத்து உயரும் ஆசை, சேவை!
 உழைக்காமல் உயரும் ஆசை, பேராசை!
 (தொடரும்)
 கட்டுரையாசிரியர்:
 காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com