உருவாக்கு உன் வாய்ப்பை! விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

ஒரு சிறு கிராமத்தில், இசையால் பிழைக்கும் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தான் ஒரு சிறுவன். நல்ல குடும்பம், அன்பான பெற்றோர்.
உருவாக்கு உன் வாய்ப்பை! விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

மிச்சமெல்லாம் உச்சம் தொடு - 7
ஒரு சிறு கிராமத்தில், இசையால் பிழைக்கும் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தான் ஒரு சிறுவன். நல்ல குடும்பம், அன்பான பெற்றோர். ஆனால் அவன் பிறப்பில் அழகானவனாக இல்லை. சில பேர் முகத்தைப் பார்த்தாலே சிலருக்குப் பிடிக்காது. அவனைப் பெரும்பாலான மாணவர்களுக்குப் பிடிக்காது. அழகாய் இல்லை என்று மற்றவர்கள் அவனை ஒதுக்கினாலும், பெற்றோர் அவனை ஒதுக்கவில்லை. 
"அழகைப் பற்றி கனவு காணாதீர்கள். அது உங்கள் கடமையைப் பாழாக்கிவிடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்'" என்றார் அப்துல்கலாம். 
பள்ளிக்கல்வியே அவனுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. அவனது ஆரம்பப் பள்ளியில் இரண்டு முறை தோல்வியடைந்தான். நடுநிலைப்பள்ளியில் மூன்று முறை தோல்வியடைந்தான். பல்கலைக்கழக தகுதித்தேர்வில் மூன்று முறை தோல்வியடைந்தான். ஹார்வர்டு பல்கலைக்கழக தகுதித் தேர்வில் 10 முறை முயற்சித்து ஒவ்வொரு முறையும் தோல்வி. அந்த ஊரில் 4 ஆவது தரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்று, அங்கு தான் அவருக்கு படிக்க வாய்ப்புக் கிடைத்தது. இத்தனை தோல்விகளையும் தன் மகன் சந்திக்கும் போது, மற்ற மாணவர்களோடு ஒப்பிட்டு, அவனைத் திட்டி, அவனது பெற்றோர், அவனது ஆளுமையை ஒழிக்கவில்லை. அதனால் தாழ்வு மனப்பான்மை அவனைத் தழுவவில்லை. முயற்சியின் பலனையும், நம்பிக்கையின் விதையையும் விதைத்தார்கள். 
நமது மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் நம் பெற்றோர்கள், "2 மதிப்பெண் குறைந்து விட்டது; 10 மற்றும் 12 ஆம் வகுப்பு உனக்கு ஒரு பெரிய மலை; இதை தாண்ட வேண்டும்'' என்று பயமுறுத்தி, பொதுத் தேர்வைப்பார்த்தாலே மாணவர்களின் நெஞ்சங்களில் வெறுப்பை விதைத்து விட்டார்கள். 
எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு படி. "இப்போது நீட் தேர்வும் வந்து விட்டது. மெடிக்கல் சீட் கிடைக்க வில்லை. ஐஐடியில் சீட் கிடைக்கவில்லை என்று நம் குழந்தைகளைத் திட்டி, அந்த வாய்ப்பு போச்சு, இந்த வாய்ப்பு போச்சு எப்படி உன்னை படிக்க வைப்பது, எங்கு போய் கடன் வாங்குவது, அதை எப்படிக் கட்டுவது?' என்று சொல்லி அவர்களின் தன்னம்பிக்கையை பெற்றோர்கள் அழித்து விடுகிறார்கள். 
ஒரு மனிதனை அழிக்க வேண்டும் என்றால், முதலில் அவனது ஆளுமையை அழிக்க வேண்டும். ஆளுமையை அழிக்க தன்னம்பிக்கையைத் தகர்க்க வேண்டும். அதைத் தகர்த்தால் மற்றவர்களை சார்ந்து வாழும் ஒட்டுண்ணி போல் வாழும் நிலைக்கு கொண்டு வந்து விடலாம். 
அலைபேசி மூலம் இன்டெர்நெட் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி, 24 மணி நேரத்தில் பெரும்பாலான நேரங்களை வீணான அற்பத்தனமான சிற்றின்பங்களுக்கு இரையாகி நல்ல பொழுதை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். பெற்றோர் குழந்தைகளை நம்புவதில்லை. குழந்தைகளுக்கு பெற்றோர்களின் அன்பு கிடைக்கவில்லை. பெற்றோர் தரும் சுதந்திரத்தை தனது சகவாசத்தால் தவறாகப் பயன்படுத்தி தனது எதிர்காலத்தை தொலைக்கும் குழந்தைகளை உருவாக்கும் சமூகமாக நம் சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது. இருவருக்குமான நட்பின் இடைவெளியை சில தவறான நண்பர்கள் பயன்படுத்துகிறார்கள். தொழில்நுட்பம் நம்மை, நம் குழந்தைகளைச் சிற்றின்பத்திற்கு அடிமைப்படுத்துகிறது. தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவன், தன் குடும்பத்திற்கும், தன் நாட்டிற்கும் பெருமையைக் கொடுக்கிறான். நல்ல தொழில்நுட்பத்தை ஆக்கத்திற்குப் பயன்படுத்துபவன் நாட்டில் நல்லாட்சி கொடுக்கிறான். அதை அற்பத்திற்கு பயன்படுத்துபவன் அதற்கு அடிமையாகிறான்; அழிவைத் தேடுகிறான். ஆனால் இந்த கதையின் கதாநாயகன் அதே இன்டர்நெட் தொழில்நுட்பத்தில் சாதனை படைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
நம் கதையின் சிறுவன், பல்கலைக்கழக படிப்பு முடிந்தும் 30 முறை பல்வேறு வேலைகளுக்கு முயற்சி செய்தும் தோல்விதான் கிடைத்தது. மாதத்திற்கு 10 டாலரில் பல்கலைக்கழகத்தில் ஆங்கில ஆசிரியராக தற்காலிக வேலைக்குச் சேர்ந்தான். அதிலும் ஒரு பிடிப்பு இல்லை. வருமானத்திற்கும் சாப்பாட்டிற்கும் மிகப்பெரிய இடைவெளி, எடுத்ததில் எல்லாம் தோல்வி, இவருக்கு வாழ்க்கை வெறுக்கத் தொடங்கியது. 
"வாழ்க்கையே வெறுத்துவிட்டது, வாழ்க்கையில் எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. எதிலும் வெற்றியில்லை; எல்லாம் தோல்வி. படித்த படிப்பிற்கேற்ற வேலை இல்லை; வருமானம் இல்லை; செய்யும் வேலையில் பிடிப்பு இல்லை; தேவையற்ற வயதில் காதல், அதிலும் தோல்வி; வேலையில்லாததினால் மதிப்பில்லை; சுற்றமும், நட்பும் எள்ளி நகையாடுகிறது; யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை; வாழ்க்கையில் விரக்தி; வாழ்க்கையே வெறுத்து விட்டது; வா தண்ணியடிக்க போகலாம்'' என்று எத்தனை இளைஞர்கள் இப்போது நம் கண் முன்னே சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். 
இன்டர்நெட் மூலம் B2B வர்த்தகத்தில் உற்பத்தி கம்பெனிகளையும், அவற்றின் உற்பத்தி பொருள்களை மொத்தமாக விற்று வியாபாரம் செய்யும் கம்பெனிகளையும் இன்டெர்நெட் மூலம் இணைக்கப் போகிறேன் என்று திட்டமிட்டார். எப்போது இந்த சிந்தனை வந்தது? 1994- இல் இன்டர்நெட் என்றால் என்ன என்று இந்த உலகம் அறியாத வேளையில் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்தார். அதில் நான் இறங்க போகிறேன் என்று சொன்னார். நண்பர்கள் கேலி செய்தார்கள். "உனக்கு கணினி என்றாலே என்னவென்று தெரியாதே, உனக்கு எதற்கு வீண் வேலை?'' என்றார்கள். "இவனுக்கு வேறு வேலையில்லை எது நடக்காதோ அதைப்பற்றிதான் இவன் பேசுவான்'' என்றார்கள். ஒரு நாள் இல்லையென்றாலும் ஒரு நாள் இந்த ஐடியா மிகப்பெரியதாக வளரும் என்ற ஒற்றை நம்பிக்கை மட்டும் இருந்தது. தன் திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்தார். 
3000 டாலர் கடன் வாங்குவதற்கு வழியின்றி தவித்து, 1000 முதலீட்டாளர்களைப் பார்த்து, 80 பேரிடம் 50,000 டாலர் மூதலீடு வாங்கி, தன்னை நம்பாத இந்த சமூகத்தில், தன்னம்பிக்கையை மட்டுமே நம்பிய அந்த ஏழை மாணவன், ஏளனம் செய்யப்பட்டான்; ஏமாற்றப்பட்டான். அவனது கனவு சிதைக்கப்பட்டது. ஆனால் தனது தொடர் முயற்சியால், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சிறிது சிறிதாகப் பெற்றான். மிகப்பெரும் சவால்களுக்கு பின்பு, தனது திட்டத்தைச் செயல்படுத்தும் சாஃப்ட்வேர் அப்ளிகேஷனை உருவாக்கினான். 1999-இல் தொடங்கிய அந்த கம்பெனி அடுத்த 16 வருடத்தில் 30 பில்லியன் டாலர் கம்பெனியாக இன்றைக்கு உயர்த்தியிருக்கிறார் அவர். அவர்தான் ஜாக் மா. இவரது கம்பெனிதான் சீனாவின் "அலிபாபா' என்ற கம்பெனி. 
ஐ.ஐ.டியில் படித்த பின்னி பன்சால், சச்சின் பன்சால் என்ற இருவர் அமேசான் நிறுவனத்தில் வேலை செய்து வெளியே வந்து இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் "பிளிப்கார்ட்' என்ற கம்பெனியை உருவாக்கினார்கள். இன்றைக்கு அதை வால்மார்ட் என்ற உலகத்தில் பெரிய ரீடெயில் வர்த்தக கம்பெனி 16 பில்லியன் டாலருக்கு வாங்கியது. மைக்ரோசாப்ஃட் பில்கேட்ஸ், உலக முதலீட்டாளர் வாரன் பப்பட், GE கம்பெனியின் ஜாக்வெல்ஜ், கூகுளின் லாரி பேஜ், முகநூலின் மார்க் ஜீகர் பர்க், இப்படி பலபேர் வாழ்க்கையின் விளிம்பில் சென்று தங்களது முயற்சியால் வெற்றி பெற்றவர்கள் பலர், இவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? 
சோதனைகளைத் தாண்டி வெற்றி பெற்ற இவர்கள், வரும் காலத்தை பற்றிய நம்பிக்கை கொண்டவர்கள், தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்தவர்கள், அடுத்தவர்களை எப்போதும் குறை கூறிக் கொண்டிராமல் தனது உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், மக்களின் பிரச்னைகளைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து, அதற்கான தீர்வை தனது அறிவால் உருவாக்கியவர்கள். அதை நம்பிக்கையோடு உலகத்திற்குக் கொண்டு சென்றவர்கள். உனக்கு நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் இந்த உலகம் வாய்ப்பை தொடர்ந்து உருவாக்கி கொடுத்துக்கொண்டிருக்கும். அதை உனக்கான வாய்ப்பாக மாற்றுவது உனது இலட்சியத்தில், முயற்சியில், தோல்வியை தாண்டிய வெற்றியில் உள்ளது. 
"வேலை வாய்ப்பு இல்லை, அது இல்லை, இது இல்லை' என்று எப்போதும் புலம்பிக் கொண்டு இருப்பவர்கள் தான் அதிகம். நாம் இந்த நூற்றாண்டின் மிக உன்னதமான நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நல்ல தலைவர்களை பெற்ற நாடுதான் உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும். உனக்கு இருக்கும் மிகப்பெரிய சொத்து உனது இளமைதான். எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டிருக்காதே. அடுத்தவர்கள் குறை சொல்லட்டும். எங்கு குறை அதிகமாக இருக்கிறதோ, அங்கு தான் வாய்ப்பும் இருக்கிறது என்பதை நீ உணர்ந்து கொள். 
சிந்தனை செய், எப்படி நீ மற்றவர்களை விட வித்தியாசமாக சிந்தித்து அந்த குறையை நிவர்த்தி செய்ய முடியும் என்று சிந்தி. அதற்கு தீர்வை கொடு. அதை செயல்படுத்து. அதைத் தொழிலாக மாற்று. வியாபாரமாக மாற்று. வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும். 
இன்றைக்கு பல இளைஞர்களிடம் மிகச்சிறந்த அறிவார்ந்த சிந்தனைகள் இருக்கின்றன. ஆனால் காலையில் வரும் சிந்தனை, வேலைப்பளுவில் காணாமல் போகிறது. மாலையில் வரும் சிந்தனை, குடி, போதை, பொழுபோக்கில் காணாமல் போகிறது. தொடர்ந்து வரும் சிந்தனை கடனில், ஏமாற்றத்தில், காதலில், சிற்றின்பத்தில், வாழ்க்கையின் சோதனைகளில் நீர்த்துப்போகிறது. 
அடுத்தவர்கள் எழுவதற்கு முன் நீ எழுந்திருக்கிறாயா? அடுத்தவர்கள் செய்வதற்கு முன் நீ செய்து முடித்திருக்கிறாயா என்பதில் இருக்கிறது உனது கனவு நனவாவது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் சொன்னார்: "தனித்திரு, விழித்திரு, பசித்திரு" என்று. 
நீ தனித்திருக்கிறாயா? உனது செல்பேசி உன்னை பாத்ரூமில் கூட தனித்திருக்க விடுவதில்லை. தனித்திருந்தால் தான் உன்னிடம் உள்ள தனித்தன்மையை மற்றவர்களுக்கு உணரச்செய்யும் வல்லமை உனக்கு வரும். நீ விழித்திருக்கிறாயா. சிந்தித்து பார். வாழ்க்கையில் வரும் வாய்ப்புகளைக் கண்டறியும் வல்லமை, அதைப் பயன்படுத்தி கொள்ளும் வல்லமை உனக்கு இருக்கிறதா என்பதை உணர்ந்து பார். "வாய்ப்பிற்காக காத்திருக்காதே, உருவாக்கு உன் வாய்ப்பை'" என்றார் டாக்டர் அப்துல்கலாம். 
அதற்கு நீ பகலிலே விழித்திருக்க வேண்டும். இரவிலே விழித்திருந்தால், அது உன் நீடித்த வாழக்கைக்கான வாய்ப்பைக் கெடுத்து விடும். பகலிலே விழித்திருக்க வேண்டும். சூரியன் எழும் முன்பாக எழவேண்டும், சூரியன் மறையும் போது, பணிகளை முடித்து உணவருந்தி ஒய்வெடுக்கச் சென்றால் தான் உனக்கு விழித்திருத்தலின் பலன் முழுமையாகக் கிடைக்கும். 
பசித்திரு என்றால், பசிக்காமல் கண்டதைத் தின்று உனது உடம்பை கழிவுக் கிடங்காக மாற்றினால் சோம்பல் உன்னைச் சிறைப்பிடிக்கும். பசித்திருந்தால் உன்னால் விழித்திருக்க முடியும். உண்டு பொழுது போக்கி, உறங்கிக் கிடந்தால் மதி மயங்கி விடும். விதி உன்னை வென்று விடும். தன் குடும்பம், தான் உண்டு என்று தன்னை மட்டும் தற்காத்து வாழ்ந்தால் தரணியாள முடியாது. பசித்திருந்தால் சுறுசுறுப்பு உன்னைத் தீண்டும். ஆர்வம் உன்னை அரவணைக்கும். சாதிக்க வைக்கும். 
குறை சொல்பவன் சோம்பேறி. குறையைக் களைந்து வாய்ப்பை உருவாக்குபவன் அறிவாளி. நீ யார் என்பதை உணர்ந்து எழு.
உங்கள் கனவுகளை, இலட்சியங்களைப் பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்: vponraj@gmail.com
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com