சிறுமிகளுக்காக ஒரு விவசாயப் பள்ளி!

ஒருவரின் மனநிறைவு என்பது நன்றாகப் படித்து கைநிறைய சம்பாதித்து வாழ்க்கையை சொகுசாக வாழ்ந்து முடிப்பது என்பதில் கிடைப்பதில்லை. மாறாக, பெருநிறுவன வேலைகளும்,
சிறுமிகளுக்காக ஒரு விவசாயப் பள்ளி!

ஒருவரின் மனநிறைவு என்பது நன்றாகப் படித்து கைநிறைய சம்பாதித்து வாழ்க்கையை சொகுசாக வாழ்ந்து முடிப்பது என்பதில் கிடைப்பதில்லை. மாறாக, பெருநிறுவன வேலைகளும், அதிக ஊதியமும் ஒருகட்டத்தில் சந்தோஷமான மனநிலையையும் அளிப்பதற்குப்பதிலாக மனஅழுத்தத்தையும், மனச்சோர்வையும் ஏற்படுத்திவிடுகின்றன. இதனாலேயே, பெரு நிறுவனங்களில் 10 முதல் 15 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஏதேனும் மாற்றத்தைத் தேடி இளைஞர்கள் அதிலிருந்து வெளியேறுகின்றனர்.
அவர்களின் பார்வை, விவசாயம், வணிகம், பண்ணை விலங்குகள், கிராமப் பொருளாதார முன்னேற்றம் என சமூகச் சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்டு, அதைநோக்கி நகர்ந்து வருகின்றனர். அவ்வாறு பெரு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய கணவரும், நகரப் பள்ளியில் பணியாற்றிய மனைவியும் தங்கள் சிந்தனையை மாற்றி கிராமத்தை நோக்கிச் சென்றதால் உருவானது தான் The Good Harvest School. 
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னெளவைச் சேர்ந்தவர்கள் அஷிதா-அனிஷ் நாத் தம்பதியர். அனிஷ்நாத் புதுதில்லியில் உள்ள ஒரு பெரு நிறுவனத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். அஷிதா, லக்னெளவில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். கைநிறைய ஊதியம் கிடைத்தாலும் இருவருக்கும் அது மனநிறைவை அளிக்கவில்லை.
இந்நிலையில், விவசாயத்தில் ஆர்வம் கொண்ட அனிஷ், நாட்டின் உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என விரும்பினார். இதனால், கடந்த 2013 இல் தன் பணியில் இருந்து விலகிய அவர், உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவோ மாவட்டத்தில் உள்ள பாசிம்கான் என்ற கிராமத்துக்குச் சென்று ஒரு நிலத்தை விலைக்கு வாங்கினார்.
இந்த பகுதியில் அனைவரும் விவசாயத்தையே முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் ஒரேவிதமான தானியங்களைப் பயிரிடுவதையும், பிறகு அடுத்த பருவம் வரை நிலத்தை தரிசாகப் போட்டிருப்பதையும் வழக்கமாக வைத்திருந்தனர். இதனால், அவர்களுக்குப் போதிய வருவாய் இல்லாமற் போனது. பாதி நிலத்தை விற்றுவிட்டு, எஞ்சிய நிலத்தில் பயிரிடுவது அல்லது நிலத்தை விற்றுவிட்டு வேறு வேலை தேடி இடம்பெயர்வதுமாக இருந்தனர். 
இந்த நிலையில், அந்தப் பகுதி குழந்தைகளுக்கு முழுமையான கல்வி கிடைக்காமல் இருப்பதைக் கவனித்த தம்பதி, வேளாண் முறையில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என கருதினர்.
இதுகுறித்து அஷிதா கூறுகையில், "இப்பகுதியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒரு வாக்கியத்தைக் கூட சரியாக, முழுமையாகப் படிக்கத் தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றிவரும் எனக்கு இது மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. இதனால், இந்தச் சூழலை முதலில் மாற்றவேண்டும், வகுப்பறை கல்விக்கு வெளியே அவர்கள் சார்ந்திருந்த விவசாயம் உள்ளடங்கிய, வாழ்க்கையை எதிர்கொள்வதற்குத் தேவையான கல்வியை அவர்களுக்கு அளிக்கவேண்டும் என விரும்பினோம்.

நாட்டின் வடக்குப் பகுதியில் பெற்றோர் தங்கள் மகனைப் படிக்கவும், மகளை தங்களுக்கு உதவியாக வீட்டு வேலை அல்லது வயல் வேலைகளுக்கும் அனுப்புகின்றனர். இங்குள்ள கிராமங்களில் பெரும்பாலான பெண்கள் அவ்வாறுதான் வளர்கின்றனர். அதனால், பெண் குழந்தைகளுக்குக் கல்வியையும், அவர்களது பெற்றோருக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று முடிவுசெய்து ஒரு புதிய பள்ளியை தொடங்கினோம்'' என்றார்.
இதன்படி, கடந்த 2016, செப்டம்பரில் The Good Harvest School முறைப்படி தொடங்கப்பட்டது. அஷிதா, அனிஷ் இருவரும் ஆசிரியராகப் பணியாற்ற 10 மாணவிகள் இந்தப் பள்ளியில் சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து அனிஷின் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, இன்று இந்தப் பள்ளியில் இரண்டரை வயது முதல் 13 வயது வரையுள்ள 45 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இங்கு வகுப்பறை போன்ற எந்த அமைப்பும் இல்லை. அனைத்து சிறுமிகளும் ஒன்றாக அமர்ந்து பாடங்களைக் கற்றுக் கொள்கின்றனர். ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், வேளாண்மை ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன. வாரம் ஒருமுறை மீளாய்வு நடைபெறுகிறது. இங்குள்ள ஒரு தன்னார்வ நிறுவனம் புத்தகங்களை வழங்கியுள்ளது. என்றாலும், ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டம் என எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 
தற்போது, அனிஷ் வேளாண்மைப் பாடங்களை கற்பிக்க, அஷிதா ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்பிக்கிறார். ஹிந்தி சொல்லிக்கொடுக்க மட்டும் ஓர் ஆசிரியர் பணியமர்த்தப்பட்டுள்ளார். அதேபோல, வயதில் மூத்த மாணவிகளுக்கு கணினி பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 
இந்தப் பள்ளி குறித்து அஷிதா மேலும் கூறுகையில், "பள்ளித் தோட்டத்தில் எங்கள் குழந்தைகள் உள்ளூர் காய்கறிகளை மட்டுமே விளைவிப்பதில்லை. சீசனுக்கு ஏற்ப காலிஃபிளவர், நூக்கல், ஊதா முட்டைகோஸ் போன்றவற்றையும் விளைவிக்கின்றனர். அவர்களுடைய உழைப்பால் விளைந்த காய்கறிகளையும், கனிகளையும் அறுவடை செய்யும்போது, அந்த குழந்தைகளின் கண்ணில் தெரியும் மகிழ்ச்சி, எங்களை பேரின்பத்தில் ஆழ்த்துகிறது'' என்கிறார்.
கடந்த ஆண்டு இந்தப் பள்ளி மாணவிகளை, லக்னௌவுக்கு அழைத்துச் சென்று காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் இந்த மாணவிகள் தங்கள் பள்ளி பண்ணையில் காளான் வளர்த்து அசத்தியுள்ளனர். தற்போது, ஒரு தன்னார்வலர் இந்த மாணவிகளுக்கு புவியியல் பாடம் நடத்தி வருகிறார். 
தற்போது வாரத்தில் 5 நாள்கள் செயல்படும் இந்தப் பள்ளியை, வருங்காலத்தில் 5-ஆம் வகுப்புவரையிலான தொடக்கப் பள்ளியாக மாற்ற விரும்புவதாகச் சொல்கிறார்கள். காரணம், ஹிந்தி வாரியத்தின் மூலம் அதற்கான ஆசிரியரைப் பணியில் அமர்த்த அது வாய்ப்பாக அமையும். அதோடு, இங்கு நல்ல பயிற்சி பெற்ற மாணவிகளை அருகேயுள்ள பள்ளிகளில் சேர்த்துக் கொள்வது குறித்தும், அந்தப் பள்ளி ஆசிரியர்களுடன் பேசியுள்ளோம். அது சற்று நீண்டகால செயல்திட்டம் என்றாலும், எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது'' என்கின்றனர் அஷிதா-அனிஷ் தம்பதியினர்.
இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com