புதுப்பிக்கத் தக்க எரிசக்தி: இளநிலை தொழிற்கல்வி!

கனிம வளங்களை எரித்து மின்சாரம் உருவாக்கும் போது, காற்று மாசு அதிகரிக்கிறது.
புதுப்பிக்கத் தக்க எரிசக்தி: இளநிலை தொழிற்கல்வி!

கனிம வளங்களை எரித்து மின்சாரம் உருவாக்கும் போது, காற்று மாசு அதிகரிக்கிறது. இந்தியா முழுவதும் தற்போது உற்பத்தி செய்யப்படும் 350 ஜிகாவாட் மின்சாரத்தில், 65 சதவீதம் கனிம வளங்களை எரிப்பதன் மூலம் கிடைக்கிறது. இதனால் காற்று மாசு அதிகரிக்கிறது. அதைத் தவிர்க்கும் வகையில் 2022ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத மின் உற்பத்தியை(175 ஜிகாவாட்) புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் பெறுவதற்கு இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கனிம வளங்களை மட்டுமே பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையிலும், சூரிய சக்தி மூலம் மின்சாரம் உருவாக்குவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இச் சூழலில், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி தொடர்பான பாடத் திட்டங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த பாடத் திட்டம், தமிழகத்திலேயே திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. கௌசல் கேந்திரா திட்டத்தின் கீழ், காந்திகிராம பல்கலைக் கழகத்தில் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி தொடர்பான 3 ஆண்டுகள் இளநிலை தொழில்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பட்டப் படிப்பில் சேர்வதற்கு, அடிப்படை கல்வித் தகுதி பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

இது குறித்து காந்திகிராம கிராமியப்பல்கலைக்கழகம் கிராமிய எரிசக்தி மையத்தின் இயக்குநர் வி.கிருபாகரன் கூறியது:
 "40 சதவீதம் வகுப்பறை பாடம் (தியரி) 60 சதவீதம் செய்முறை பயிற்சி (ப்ராக்டிக்கல்) என பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த புதிய தொழிற்கல்வி பட்டப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி குறித்து கள ஆய்வு மேற்கொள்வதுடன், இயற்கை எரிவாயு, சூரிய சக்தி, காற்றாலை, விறகு எரித்து எரிசக்தி உருவாக்குவதை கண்டறிவதும் பாடத்தின் முதல் தொடக்கம். சூரிய சக்தி மூலம் இயங்கும் பொருள்களான குக்கர், வாட்டர் ஹீட்டர், நீராவி உற்பத்தி செய்தல் குறித்தும், இந்தப் பொருள்களைப் பழுது நீக்குதல் செய்வதற்கும் கற்றுக் கொடுக்கப்படும். அதைத் தொடர்ந்து சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவிகளை நிறுவுதல் மற்றும் பழுது நீக்குதல் தொடர்பாக கற்பிக்கப்படும். மேலும் சிறு காற்றாலைகளைத் தயாரித்தல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் குறித்தும் கற்றுக் கொடுக்கப்படும். இயற்கை எரிவாயு, சாண எரிவாயு, விறகு எரித்து எரிசக்தி உருவாக்கும் கருவிகளைத் தயாரித்தல் மற்றும் பழுது நீக்குவதற்கும் இப்பாடத்திட்டத்தில் கற்றுக் கொடுக்கப்படும்.
 புதுப்பிக்கத் தக்க எரிசக்தி இளங்கலை பட்டப்படிப்பு 3 ஆண்டு பாடத் திட்டமாக தயாரிக்கப்பட்டிருந்தாலும், 6 மாதம், ஓராண்டு, 2 ஆண்டு என்ற அளவில், விருப்பத்திற்கு ஏற்ப குறைந்த கால பயிற்சியாகவும் பெற முடியும். 6 மாதங்கள் முடித்தால் சான்றிதழ், ஓராண்டு நிறைவு செய்தால் பட்டயம், 2 ஆண்டுகள் படிப்புக்கு மேல் பட்டயம், 3 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்தால் இளங்கலை பட்டம் பெற முடியும்.
 படித்து முடிக்கும் மாணவர்கள், உடனடி வேலைவாய்ப்புப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2022 -ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 50 சதவீதம் உற்பத்தி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறை பரவலாக வளர்ச்சிப் பெற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறையில் பணிபுரிவதற்கு மனித ஆற்றல் அதிகம் தேவைப்படும். அதனால் இந்த தொழில்கல்வியில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது'' என்றார்.
 ஆ.நங்கையார் மணி
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com