வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 181 

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப் பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 181 

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப் பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்களும் நடாஷா எனும் பெண்ணும் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது fulsome என்ற சொல்லுக்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு உண்டு என புரொபஸர் சொல்ல, அதை அறிவதற்கு சேஷாச்சலம் ஆர்வம் கொள்கிறார். ஆனால் விவாதம் மெல்ல வேறு பக்கம் திரும்புகிறது. Fulsome என்ற சொல்லுக்கு இரு அர்த்தங்கள் உண்டு. ஒரு அர்த்தம் காலாவதியாகி விட்டது. ஆனால் அந்த காலாவதியான அர்த்தத்தில் எப்படி இன்று சிலர் அதைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என புரொபஸர் விவரிக்க, அதனுடன் இதே போன்ற இரட்டை அர்த்தம் கொண்ட ஜென்டில்மேன் என்ற சொல்லையும் குறிப்பிடுகிறார். இதை அடுத்து நடாஷாலேடி எனும் சொல் பற்றி வினவுகிறார். புரொபஸர் விளக்குகிறார்.
புரொபஸர்: லேடி என்ற சொல்லும் ஜென்டில்மேனைப் போலத் தான் - நீண்ட காலமாக அது சீமாட்டி என்று சொல்வோமே பணம் படைத்த, சொத்து கொண்ட பெண்களைக் குறிக்க பயன்பட்டது. (இங்கிலாந்தில் இன்றுமே கூட நிலவுடைமை, அரச வம்சத்து பெண்களை லேடி என மதிப்பாய் குறிப்பிடுகிறார்கள்.) ஆனால் இன்று பெண்களை மரியாதையாய் கண்ணியமாய் குறிப்பிட லேடி எனச் சொல்கிறார்கள். இப்படி யார் வேண்டுமெனிலும் லேடி ஆகலாம் எனும் நிலைமை நவீன சமூகங்களில் சம உரிமையும் ஜனநாயகமும் வேருன்றிய பின் ஏற்பட்டது. 
கணேஷ்: சார் தமிழில் சீமாட்டி என்பதைக் கூட நாம் கிண்டலாகத் தானே சொல்றோம்.
சேஷாச்சலம்: கரெக்ட். பெரிய செல்வச் சீமாட்டி என யாரையாவது கிண்டலடிக்கும் வழக்கம் முன்பு இருந்தது. It was a throwback to the feudal ages in Tamil.
கணேஷ்: அதென்ன சார் throwback?
புரொபஸர்: பழமையை நினைவுபடுத்தும் ஒன்று அல்லது ஒருவர். இங்கு சீமாட்டி என்ற சொல்லே அப்படி இருக்கிறது. சரி நான் fulsomeக்கு வருகிறேன்.
நடாஷா: சார் அதுக்கு முன்னே எனக்கு ஒரு சந்தேகம். இந்த லேடி எனும் சொல் ரொட்டி தயாரிப்பவர் எனும் பொருளில் இருந்து தோன்றியது என சொல்கிறார்களே, அது உண்மையா?
புரொபஸர்: That is a misconception. ஆனால் ரொட்டி தயாரிப்புக்கும் லேடிக்கும் ஒரு நேரடி தொடர்பு உண்டு. லேடி என்பது இரண்டு பழங்கால ஆங்கிலச் சொற்களின் இணைப்பில் தோன்றியது. ஒரு சொல்லின் அர்த்தம் ரொட்டி. இன்னொன்றின் அர்த்தம் ரொட்டி செய்ய மாவைப் பிசைவது. அதாவது to knead dough. பழங்காலத்தில் இப்படி ரொட்டி தயாரிக்கும் break-makers நிலச்சுவான்தார்களின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பார்கள். அன்று ரொட்டி தயாரிப்பது என்பது ஓர் எளிய வேலை இல்லை. ஆகையால் எல்லாராலும் அன்று ரொட்டி செய்து சாப்பிட முடியாது. ரொட்டியின் வரலாற்றை ஆய்பவர்கள் தொழில் புரட்சிக்குப் பின்னரே அனைத்து தரப்பு மக்களும் ரொட்டி உண்ணும் வழக்கம் ஐரோப்பாவில் ஏற்பட்டது என்கிறார்கள். இன்று முனைக்கடைக்கு போய் ஒரு loaf
bread வாங்கி ஜாம் தடவி சாப்பிட்டு பாலும் குடிக்க முடியும். ஆனால் அன்று இது ஒரு பெரிய luxury. ஆகையால் இப்படி பணக்கார வீடுகளில் ரொட்டிக்கு மாவு பிசைய, ovenகளில் வைத்து அதை ரொட்டியாக சுட்டெடுக்க பணிப்பெண்களை அமர்த்தி இருப்பார்கள். ரொட்டி செய்வது ஒரு சிக்கலான விசயம். சரியாக மாவை தயாரித்து சுட்டெடுக்காவிட்டால் சுவை இருக்காது. ஆகையால் இப்பெண்களை வீட்டம்மா, அதாவது வீட்டு கனவானின் மனைவி, மேற்பார்வை இடுவார். இப்படி ரொட்டி தயாரிக்கும் பெண்களை மேற்பார்வை இடுபவர் எனும் பொருளில் தான் லேடி எனும் சொல் முதலில் ஆங்கிலத்தில் தோன்றி புழக்கம் பெற்றது. ஆனால் மெல்ல மெல்ல ரொட்டிக்கும் இதற்கும் உள்ள சம்பந்தத்தை நாம் மறந்து போனோம்.
சேஷாச்சலம்: You should also mention nobility here. Noble என்றால் நல்ல, நாணயமான, உயர்வான என்ற பொருள் இன்று உள்ளது. Noble ideals, noble thoughts என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் முன்பு nobility என்றால் aristocrats - அதாவது நிலவுடைமை கொண்ட பணக்கார வர்க்கம் - எனும் பொருள் இருந்தது. இதில் இருந்து தான் உயர்வான விசயங்களை noble என்று சொல்லும் வழக்கம் தோன்றியது.
புரொபஸர்: சரி நான் சொல்ல வந்ததை முடிச்சிடறேன். Fulsome என்றால் மிகையான அதனாலே அருவருப்பானது எனும் பொருளே சரியானது. 
சேஷாச்சலம்: Have you heard of noisome?
(இனியும் பேசுவோம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com