சமையல்... சமையல்

கொண்டைக் கடலை வடை, திராட்சை அல்வா, புதினா சப்பாத்தி, கோவைக்காய் ரைஸ், எண்ணெய் கத்தரிக்காய் கறி
சமையல்... சமையல்

கொண்டைக் கடலை வடை

 தேவையானவை:
கொண்டைக்கடலை - ஒரு கோப்பை
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 2
மல்லி, கறிவேப்பிலைத் தழை - சிறிது
மிளகு - 5
பெருங்காயப் பொடி- அரைத்தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை : கொண்டைக் கடலையை (முதல்நாள் இரவே) நன்றாக நீரில் ஊறவைக்கவும் . வெங்காயம், பச்சைமிளகாய், மல்லி, கறிவேப்பிலைத் தழைகளைப் பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். நன்றாக ஊறிய கொண்டைக்கடலையுடன் பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து நன்றாக கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். இந்த மாவுக் கலவையுடன் வெங்காயம், பச்சைமிளகாய், மிளகு, உப்புத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும். இப்போது தயாரான மாவை வடையாக தட்டி வாணலியில் நன்கு காய்ந்த எண்ணெயில் போட்டு எடுக்கவும். கொண்டைக் கடலை வடை தயார்.

திராட்சை அல்வா

தேவையானவை:
விதையில்லா திராட்சை -100 கிராம் (புளிப்பில்லாமல்)
முந்திரி -5 
சர்க்கரை -200 கிராம்
ஏலப்பொடி - சிறிது
நெய் -50மிலி
ஆரஞ்சு வண்ணப் பொடி - சிறிதளவு
செய்முறை: முதலில் திராட்சையை நீரில் அலசி தோலை நீக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது நெய் ஊற்றவும். சூடாகியதும் முந்திரியைப் போட்டு வறுக்கவும். பின்னர் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து அதில் திராட்சைகளைப் சேர்த்து லேசான சூட்டில் கிளறவும். பின்னர் அதை இறக்கி வைத்து மிக்ஸியில் இட்டு நீர் சேர்க்காமல் நன்றாக அரைக்கவும். சிறிதுநேரம் கழித்து அடுப்பில் வாணலியை வைத்து இக்கலவையை அதில் கொட்டி சர்க்கரை, வண்ணப் பொடியை கலந்து அல்வா பதம் வரும் வரை கிளறவும். ஏலப்பொடி, வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும். சுவையான திராட்சை அல்வா தயார்.
- ஆர்.பிரபா, திருநெல்வேலி. 

புதினா சப்பாத்தி

தேவையானவை: 
புதினா - ஒரு கட்டு
கோதுமை மாவு - ஒரு கிண்ணம்
சோளமாவு - ஒரு கிண்ணம்
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 பல்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
தயிர் - 1/2 கிண்ணம்
வெல்லம் - 2 மேசைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். இஞ்சி பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும். கோதுமை மாவுடன் தயிர், வெல்லம், எண்ணெய், புதினா, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து 2மணி நேரம் ஊறவைக்கவும். சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி தேய்த்து சுட்டெடுக்கவும். சுவையான புதினா சப்பாத்தி தயார்.

கோவைக்காய் ரைஸ்

தேவையானவை: 
சாதம் - ஒரு கிண்ணம்
கோவைக்காய் - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 6 பல்
கடுகு - கால் தேக்கரண்டி 
சீரகம் - ஒரு தேக்கரண்டி
புதினா - சிறிதளவு
நெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோவைக்காயை வட்டவட்டமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில், நெய் விட்டு கடுகு தாளித்து, சீரகம், பச்சை மிளகாய் சேர்க்கவும். பின்னர், புதினா, நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, வதக்கவும். நன்கு வதங்கியதும் கோவைக்காயைச் சேர்க்கவும். சில நிமிடங்கள் வதக்கி, வெந்ததும் இறக்கவும். இந்தக் கலவையில் வடித்து வைத்துள்ள ஒருகிண்ணம் சாதத்தைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும். சுவையான கோவைக்காய் ரைஸ் ரெடி
- முத்தூஸ், தொண்டி. 

எண்ணெய் கத்தரிக்காய் கறி

தேவையானவை: 
கத்தரிக்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
தேங்காய் - அரை மூடி (சிறியது)
பூண்டு - 10 பல்
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
புளிக்குழம்பு பொடி - 4 தேக்கரண்டி
புளி தண்ணீர் - 2 கிண்ணம்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். வெங்காயத்தில் பாதியை மட்டும் இரண்டாக வெட்டி கொள்ளவும். கத்தரிக்காய்களை மேலாக ஒரு கீறல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு கீறலாக கீறி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி கொள்ளவும். வதக்கியதை ஆறவிட்டு தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு கத்தரிக்காயை உப்பு சேர்த்து லேசாக வதக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும். வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும். அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். இதனுடன் குழம்பு பொடி சேர்த்து கிளறவும். அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதித்ததும் கத்தரிக்காய்களைச் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் இறக்கவும். சுவையான எண்ணெய் கத்தரிக்காய் கறி தயார். 

பூசணிக்காய் பூரி

தேவையானவை:
மஞ்சள் பூசணி - ஒரு கிண்ணம் (துருவியது)
கோதுமை மாவு - அரை கிண்ணம்
வெல்லம் - அரை கிண்ணம்
ஏலக்காய் - 2 பொடித்தது
உப்பு - ஒரு துளி
செய்முறை : மஞ்சள் பூசணி மற்றும் வெல்லத்தை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தில் 3 மேசைக்கரண்டி தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஒரு கொதி வந்ததும் அதில் துருவிய பூசணியைப் போட்டு வேக வைக்கவும். பூசணி நன்றாக வெந்ததும் கோதுமை மாவையும், உப்பையும் அதனுடன் சேர்க்கவும். இவற்றை ஒன்றாக கலந்து பூரிக்குப் பிசைவது போல் பிசைந்து கால் மணி நேரம் மூடி வைக்கவும். பிசைந்து வைத்திருக்கும் மாவை பூரிகளாக தேய்த்து வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரிகளைப் பொரித்து எடுக்கவும். சுவையான பூசணிக்காய் பூரி தயார். 
- கலைச்செல்வி, சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com