சினிமாவை ஆத்மார்த்தமாக நேசிக்கிறேன்!

தொகுப்பாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பு வடிவமைப்பாளர் என பல்துறை பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை தமிழ் பெண் பவனீதா லோகநாதன்.
சினிமாவை ஆத்மார்த்தமாக நேசிக்கிறேன்!

தொகுப்பாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பு வடிவமைப்பாளர் என பல்துறை பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை தமிழ் பெண் பவனீதா லோகநாதன். இவர் இயக்கிய "பை த சீ' 
குறும்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் சினிமா குறித்து தீவிரமாக எழுதிவரும் அவருடன் ஓர் உரையாடல்.
உங்களைப் பற்றி...?
சினிமா மீதான தீராத காதலுடன், என் சுயம் தேடிச் செல்லும் ஒருத்தியாக என்னை அடையாளப்படுத்த விரும்புகிறேன். கொழும்பில் தெஹிவளையில் வசிக்கிறேன். அன்பும், பழைமைவாதமும் நிரம்பிய தமிழ் கூட்டுக்குடும்பத்திலிருந்து கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு சமூகவெளிக்கு வந்திருக்கிறேன். சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்டதால் வேலை செய்து கொண்டுதான் படித்தேன். எங்கள் குடும்பத்தில் பள்ளிப்படிப்பை முடித்த முதல் பெண் நான்தான். குடும்ப வறுமையால் படிப்பை தொடர முடியவில்லை. மனம் முழுவதும் சினிமா இருக்க, ஊடகத்துறையில் வேலைக்கு சேர்ந்தேன். தொகுப்பாளர், தயாரிப்பாளர் என்று ஆறு வருட ஊடக வாழ்க்கைக்குப் பின்னர் முழு நேர வேலையிலிருந்து விலகி விளம்பரத் துறையில் இணைந்து கொண்டேன்.
நீங்கள் இயக்கிய குறும்படங்கள் குறித்த விவரங்கள்?
எனக்கு குறும்படங்கள் தொடர்பான ஆர்வம் இருக்கவில்லை. சர்வதேச ரீதியில் செயலமர்வுகளில் பங்குபெற குறும்படங்கள் இயக்கியமை ஒரு முக்கிய தகுதியாக கருதப்படவே "Noise', "யட்சி' என இரண்டு குறும்படங்களை பயிற்சி குறும்படங்களாக எடுத்தேன். எட்டுமாத உழைப்பில் 2017-இல் என் முதல் குறும்படமாக "By the sea' உருவாகியது. பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டதோடு விருதுகளும் அங்கீகாரமும் கிடைத்தன. இந்த குறும்படத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தால் எனக்கு இந்த வருடமும் ஒரு படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது புதிய படத்திற்கான வேலைகளில் ஈடுப்பட்டுள்ளேன். இந்தக் குறும்படம் முடிந்ததும் எனது ஆவணப் படத்திற்கான வேலைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன்.
உள்நாட்டுப் போர் குறித்த படங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறதா? தமிழகத்தில் "இனம்', "கன்னத்தில் முத்தமிட்டால்', "யாழ்' உள்ளிட்ட சில படங்களே உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அதில் எந்த அளவுக்கு இலங்கை தமிழர்களின் பிரச்னைகள் பேசப்பட்டிருந்தன?
போர் குறித்த படங்கள் தமிழிலும், சிங்களத்திலும் உருவாகியுள்ளன. தொடர்ந்து உருவாக்கியும் வருகின்றனர். வடக்கு, கிழக்கில் வசிக்கும் தமிழர்களில் புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் கதைகளை சினிமாவாக மாற்ற முனைப்போடு செயல்படுகின்றனர். இலங்கை போரை மையப்படுத்தி தமிழகத்தில் உருவான சகல படங்களும் மேம்போக்கான தரவுகள், பிழையான கருத்தியல், உண்மையற்ற வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவை. அந்த படங்களைப் பார்த்த போது இவர்களுக்கு இலங்கை பற்றி எதுவுமே தெரியவில்லை என்பதும் கவன ஈர்ப்புக்கும் வணிக நோக்கத்திற்கும் இலங்கை பிரச்னையை கையாண்டுள்ளனர் என்பதும் புரிந்தது.
ஈழத் தமிழர்கள் பிரச்னைகளை பேசும் படங்கள் அதிகம் தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்று கருதுகிறீர்களா?
ஒரு இயக்குநருக்கு தனது கதைக்களத்தை தேர்வு செய்யும் உரிமை உண்டு. யார் வேண்டுமாலும் எதையும் படமாக்கலாம். ஆனால் களத்திற்கு சென்று அங்கு என்ன நடக்கிறது மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு திரைப்படங்களை எடுக்க வேண்டும். இதுவரை வந்தவை அனைத்தும் இலங்கைப் போரை பற்றி எதுவுமே அறியாது மேம்போக்கான கதையுடனும் மெத்தனமான திரைமொழியுடனும் இருந்ததை பாத்திருக்கிறேன்.
தமிழ்சினிமா,இலங்கை மக்கள் மீதான பரிதாப பார்வையை அகற்றிவிட்டு நிஜத்தில் என்ன நடக்கின்றது என்பதை காட்டும் படைப்பினைத் தர முடிந்தால் மகிழ்ச்சி.
எதிர்காலத் திட்டங்கள் ?
இலங்கையைப் பொருத்தவரை சுயாதீன சினிமாவை நோக்கி எனது பயணத்தை அமைத்துள்ளேன். நான் பார்த்து வளர்ந்தது உலக திரைப்படங்களை என்பதால் என் கவனம் முழுவதும் சர்வதேச சினிமாவை நோக்கியே உள்ளது. நான் சினிமாவை ஆத்மார்த்தமாக ஆழமாக நேசிப்பதால் என்னை, எனக்கான பாதையில் நான் நேசிக்கும் சினிமா அழைத்துசெல்லும். 
- மணிகண்டன் தியாகராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com