உங்கள் மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இதோ ஒரு நறுமண வழி!

ஆர்ச் ஆஃப் எக்சலென்ஸ் இன் மெடிகேர் விருது, ஆல் இந்தியா அச்சீவர்ஸ் கான்பரன்ஸ் மும்பை விருது, சிட்டிசன்ஸ் இன்டகரேஷன் பீஸ் சொசைட்டி க்ளோபல் இந்தியன் ஆஃப் தி இயர் விருது, பிக் ரிசர்ச் இந்தியா நிறுவனத்தின்
உங்கள் மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இதோ ஒரு நறுமண வழி!

ஆர்ச் ஆஃப் எக்சலென்ஸ் இன் மெடிகேர் விருது, ஆல் இந்தியா அச்சீவர்ஸ் கான்பரன்ஸ் மும்பை விருது, சிட்டிசன்ஸ் இன்டகரேஷன் பீஸ் சொசைட்டி க்ளோபல் இந்தியன் ஆஃப் தி இயர் விருது, பிக் ரிசர்ச் இந்தியா நிறுவனத்தின் சிறந்த விஞ்ஞானி விருது, அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகத்தின் டாக்டரேட் பட்டம் என பல விருதுகளுக்கு சொந்தக்காரர் - சென்னை வடபழனியில் உள்ள "கேர் அண்ட் க்யூர்' நிறுவனரான அரோமா தெரபிஸ்ட் கீதா அசோக். இவரை சந்தித்தோம்:

"இண்டர்நேஷனல் பள்ளி ஒன்றில் உதவி பேராசியராக என் பணியைத் தொடங்கினேன். அதன் பின், திண்டுக்கல்லில் ஒரு நிதி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தேன். ஒருநாள் அந்த நிதி நிறுவன தலைவர் திடீரென பணத்தையெல்லாம் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகிவிட, அதிர்ச்சியில் உரைந்தேன். நான் முக்கிய பொறுப்பில் இருந்ததால் வாடிக்கையாளர்களின் கண்ணீர் என்னை மிகவும் துன்பப்படுத்தியது. அதனால் அவர்களுக்குச் சேர வேண்டிய 68 லட்ச ரூபாயை என் சொந்த பணத்தில் இருந்து அவர்களுக்கு செட்டில் செய்தேன். இதனால் என் வீட்டில் உள்ளவர்களுக்கு என்மீது பெரும் கோபம், "யாரோ செய்த தவறுக்கு நீ ஏன் பொறுப்பேற்க வேண்டும்' என்றார்கள்.

அதன்பிறகு மன அமைதி தேடி சென்னையில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்தேன். மனத் துயரில் இருந்து மீளாத நிலையில் அடுத்து என்ன ? என்ற எண்ணம் வர, பியூட்டிஷியன் படித்தேன். ஆனால், பியூட்டிஷியன் துறையில் கெமிக்கல் மூலம் நிறைய ட்ரீட்மென்ட் கொடுப்பது எனக்கு பிடிக்கவில்லை.

அந்த நேரத்தில்தான் "அரோமாதெரபி' பற்றி அறிந்தேன். பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கை முறையில் இருக்கும் அந்த சிகிச்சை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் இயற்கையை அதிகம் நேசிப்பவள் என்பதால், இதுதான் எனக்கான துறை என்று முடிவுசெய்து, அரோமாதெரபி கற்றுக் கொள்ள தொடங்கினேன். சென்னை, மும்பை, பெங்களூரு என 9 இன்ஸ்ட்டிடியூட்டில் அரோமா தெரபி பயின்றேன்.

20 ஆண்டுகளுக்கு முன்னால் அரோமாதெரபி என்றால் யாருக்கும் தெரியாது. அதனால் பியூட்டி பார்லர் போன்றே ஆரம்பித்து இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் போராட்டமாக இருந்தாலும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. என்னிடம் வந்த வாடிக்கையாளர்களுக்கு அரோமா தெரபி மீது நம்பிக்கை வர நானும் வளர்ந்தேன்.

அரோமாதெரபி என்பது நறுமண சிகிச்சை. இது மனது சம்பந்தப்பட்டது. அரோமா என்பது மனதையும், தெரபி என்பது உடலையும் ஒருங்கிணைப்பது. பொதுவாக ஒரு பூக்காரர் மல்லிகை மலர்களை விற்றுக் கொண்டு நம்மை கடந்து போகும் அந்த ஒரு நொடி அந்த மல்லிகையின் மணத்தால் நம் மனம் அமைதியாகிறது. இதுதான் நாம் கோயிலுக்குள் செல்லும்போதும் ஏற்படுகிறது. அங்கிருக்கும் பூக்களின் நறுமணங்களும், கற்பூரம் போன்றவையின் மணங்களும் நம் மனதை சாந்தப்படுத்துகிறது. அந்த நறுமணங்களின் வாசத்தை நம் மூக்கினுள் உள்ள ரோமங்கள் உள்வாங்கி அதனை நமது மூளையினுள் உள்ள லிம்பிக் சிஸ்டத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இதன் மூலம் நம் மனது அமைதியாகிறது. இதுதான் அரோமா தெரபியின் சிகிச்சை முறை. பொதுவாக நமக்கு தலைவலி என்றால் உடனே தலைவலி தைலத்தை தடவுவோம். அந்த தைலத்தில் உள்ள வாசம் தான் நம் மனதை அமைதிப்படுத்தி தலைவலி குறைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

அரோமாதெரபியில் 300 வகையான சிகிச்சை எண்ணெய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிகிச்சைக்கு பயன்படுகிறது. பெரும்பாலும் அரோமா தெரபியில் பல நோய்களை தீர்த்துவிட முடியும் என்று கண்டுபிடித்தேன். 2015 -இல் சித்தூரைச் சேர்ந்த நான்கு வயது குழந்தை ஒன்று எண்ணெய் சட்டியில் தவறி விழுந்துவிட்டது. அந்த குழந்தைக்கு வேலூர் சிஎம்சி மருத்துமனையில் சிகிச்சை அளித்து உயிர் பிழைக்க வைத்தனர். பின்னர், அந்தக் குழந்தையை என்னிடம் அனுப்பினார்கள். உடல் முழுவதும் தீக்காயத்தில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு அரோமாதெரபி மூலம் 80 சதவிகிதம் அதன் சருமத்தை சரிசெய்தேன். அதற்காக "சிறந்த சாதனை பெண்மணி விருது' அப்போதைய குடியரசு தலைவராக இருந்த பிரதிபாபாட்டீலின் கையால் பெற்றேன்.

அரோமாதெரபியைப் பொருத்தவரை சைனஸ் பிரச்னை, தூக்கமின்மை, சரும பிரச்னை, முகப்பரு, முடிக்கொட்டுவது, மங்கு, தழும்பு, கருவளையம், வழுக்கை, தலைவலி, உடல் அசதி, உடல் வீக்கம், பைல்ஸ் போன்றவற்றை எளிதில் நிரந்தமாக குணமாக்க முடியும்.

உதாரணமாக, தற்போது கோடை தொடங்கிவிட்டது, கோடைக்காலத்தில் தலையில் அதிகம் வியர்வை, பிசுக்கு ஏற்பட்டு உலர் தன்மை ஏற்படும். ஆனால் கோடைக்காலம்தான் முடி வளர்வதற்கு ஏற்ற காலம். முறையாக பராமரித்தால் நன்றாக முடி வளரும். வாரத்திற்கு 2 நாள் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சம அளவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர கோடை நம்மை தீண்டவே தீண்டாது. முடியும் நன்கு வளரும். நல்லெண்ணெய்க்கு சூரிய ஒளியினால் உண்டாகும் வெப்பத்தை தடுக்கும் ஆற்றல் உள்ளதால். சூரிய ஒளியினால் உடல் கருமையாவதையும் தடுக்கும்.

அதுபோன்று கோடையில் வேர்க்குரு, வேணல்கட்டிகள் சிலருக்கு வரும், இதிலிருந்து தடுத்துக் கொள்ள காலமைன் லோஷன் என மருந்தகங்களில் கிடைக்கும். அதில் சிறிது எடுத்துக் கொண்டு 1 துளி சமையல் சோடா சேர்த்து கலந்து இரவில் அதனை உடலில் தேய்த்து பூசிவிட்டு மறுநாள் குளித்தால் உடல் உஷ்ணத்தால் வேர்க்குரு, வேணல்கட்டி வருவதைத் தடுக்கும்'' என்றார்.

- ஸ்ரீதேவி குமரேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com