மகளிர்மணி

அமில வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலைப் பற்றிய திரைப்படம்!

தினமணி

ஒரு தலையாக காதலித்தவனின் காதலை ஏற்க மறுத்ததால் தனது 15-ஆவது வயதில் அமிலம் வீச்சுக்கு ஆளான லட்சுமி அகர்வால், தன்னம்பிக்கையுடன் போராடி அவனுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கி தந்தார். இதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாராட்டுதலைப் பெற்ற லட்சுமி அகர்வால், சில ஆண்டுகள் கழித்து அலோக் தீட்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கு தாய்ஆனார்.
 தன்னைப் போன்று அமிலம் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சில மாதங்களுக்கு முன் சண்டிகரில் சமூக அமைப்பொன்றை லட்சுமி அகர்வால் துவங்கியுள்ளார். இப்போது இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பிரபல இயக்குநர் கவிஞருமான குல்சாரின் மகள் மேக்னா குல்சார் திரைப்படமொன்றை தயாரிக்கிறார்.
 இதில் அமிலம் வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்புக் கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் நலனுக்காக சமூக அமைப்பை துவங்கியது ஏன் என்று லட்சுமி அகர்வால் கூறுகிறார்:
 "அமிலம் வீச்சுக்கு எதிராக நான் துவங்கியுள்ள இந்த அமைப்பினால் குற்றங்கள் குறைந்துள்ளதா என்று கேட்கிறார்கள். 2013 -ஆம் ஆண்டுக்கு முன் ஆசிட்வீச்சு சம்பவங்கள் தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூசாக இடம் பெற்றன. இந்த அமைப்பை துவங்கிய பின்னரே அமிலம் வீச்சுக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டன. இதனால் குற்றங்கள் குறைந்து வருவதாக கூற முடியாது. முன்பு இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. காவல்துறை முதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாது. பாதிக்கப்பட்டவருக்கு எப்படி சிகிச்சை அளிப்பது போன்ற பல பிரச்னைகள் இருந்தன. இப்போது நிலைமை மாறிவிட்டது. முன்பு அமிலம் வீச்சினால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர்கள் கூட இப்போது வழக்கு பதிவு செய்ய முன்வந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் பழைய தோற்றத்தைப் பெற குறைந்தது 70-80 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர் உடலின் பிற பகுதியிலிருந்து தோலை எடுத்து கிராப்டிங் செய்ய வேண்டும். தோலை எடுத்த இடத்தில் பழையபடி தோல் வளர்வதும் கடினம். இப்போது டாக்டர்கள் கூட பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்ற முயற்சிப்பதோடு முதல் காரியமாக கண்களை காப்பாற்ற போராடுகின்றனர்.
 தற்போது நிறைவேற்றப்பட்ட சட்டம் மூலம் காவல்துறையும், நீதி மன்றமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து, வழக்குகளை துரிதமாக முடிக்க முன்வந்துள்ளன. பெண்களும் முன்பு போல் பணிந்து போகாமல் துணிந்து போராடுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 3 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்ததோடு, ஏற்கெனவே ஐந்துபேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
 ஆனாலும், சட்டம் இன்னும் துரிதமாக செயல்பட வேண்டும். குற்றவாளிகள் சிறை தண்டனையிலிருந்து தப்பித்து சுதந்திரமாக உலாவுவதோடு திருமணமும் செய்து கொள்கின்றனர்.
 இன்றைய சமூகத்தில் மாற்றம் என்பது உடனடியாக ஏற்படுவதில்லை. முக்கியமாக பெண்களே இந்த மாற்றத்திற்கு எதிராக உள்ளனர். மாமியார், தாய், இளம்பெண்கள் அனைவருமே தாங்கள் விரும்பும் மாற்றத்தைதான் எதிர்பார்க்கிறார்கள். அநியாயத்தை எதிர்த்து ஒருநாள் கூக்குரல் எழுப்புவதோடு சரி. பின்னர் மறந்து விடுகின்றனர். என்னைப் போல் பாதிக்கப்பட்ட பெண்களால் தான் மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். ஒரு பெண்ணின் மீது ஒருவன் அமிலம் வீசுவதால் அந்தப் பெண் வாழ்நாள் முழுக்க உடல் ஊனமுற்றவளாகிறார்.
 மன உளைச்சலால் பாதிக்கப்படுகிறார். பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் அமல்படுத்தப்படுவதில்லை. உண்மையை கூற வேண்டுமானால் இங்கு என் ஒருத்தியால் மட்டும் இந்த உலகத்தை மாற்ற இயலாது. என்னை நான் மாற்றிக் கொள்ள முடியும். இந்த அமைப்பின் மூலம் பின் தொடர்பவர்களால் மாற்றத்தை கொண்டு வர முடியுமென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
 இரண்டாண்டுகளுக்கு முன்பே என் கதையை மேக்னா குல்சார் தயாரிக்கப் போவதாக கூறியிருந்தார். அப்போது என்னுடைய பாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. நானே நடிக்க ஆசைப்படுவதும் நியாயமல்ல.
 இப்போது தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சமூக மாற்றத்தை ஏற்படுத்த திரைப்படங்களுக்கு பெரும் பங்குள்ளது'' என்கிறார் லட்சுமி அகர்வால்.
 - பூர்ணிமா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT