கூட்டாக இணைந்தால் எதையும் சாதிக்கலாம்!

ஜெர்மனியில் உள்ள சர்வதேச ரைஃபீஸின் கூட்டுறவு சங்கத்தின் (ஐதம) 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பெண்மணியான நந்தினி ஆசாத் நிர்வாக குழு உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.
கூட்டாக இணைந்தால் எதையும் சாதிக்கலாம்!

ஜெர்மனியில் உள்ள சர்வதேச ரைஃபீஸின் கூட்டுறவு சங்கத்தின் (ஐதம) 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பெண்மணியான நந்தினி ஆசாத் நிர்வாக குழு உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். மேலும் இவர், ஆசிய பசிபிக் பெண்கள் குழுவின் சர்வதேச உறுப்பினரும் மகளிர், இந்திய அரசு மற்றும் அதன் மறுவாழ்வு குழுவின் தலைவரும் ஆவார். சென்னை மயிலாப்பூரில் உள்ள உழைக்கும் மகளிர் சங்கம் மற்றும் இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையத்தின் இயக்குநரும் ஆவார். தான் கடந்து வந்த பாதைக் குறித்து இவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
சர்வதேச ரைஃபீஸின் கூட்டுறவு சங்கத்தில் முதல் தென்னிந்திய பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த தருணங்கள் எப்படி இருக்கிறது?
சர்வதேச கூட்டுறவு யூனியனில் இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று இன்டர்நேஷனல் கோஆப்ரேட்டிவ் அலையன்ஸ். மற்றொன்று, இண்டர்நேஷனல் ரைஃபீஸின் யூனியன். இதில் இரண்டாவது வகையான ரைஃபீஸின் யூனியன் என்பது கடன் உதவி செய்யும் பணக்கார வங்கி. இதன் சங்கத்தில் 33 நாடுகளிலிருந்து 52 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அதன் வரலாற்றில், தென்னிந்தியாவில் இருந்து முதன்முறையாக ஒரு பெண், அதுவும் ஏழை கூட்டுறவு நிதியத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம் மிகப் பெரிய அளவிலான கூட்டுறவு வங்கிகள். பணக்கார வங்கிகள். ஆனால், ஒரு சமுதாய கண்ணோட்டத்துடன் செயல்படும் வங்கிகள். அவர்களை போன்று எங்களிடம் பணத்தொகை கிடையாது. ஆனால் பெண்கள் தொகை உண்டு. இதனை வைத்துக் கொண்டு அத்தனை பெரிய பேங்கர்ஸோடு நாமும் இருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். 
உழைக்கும் மகளிர் வளர்ச்சிக்காக உங்களின் பங்கு என்ன?
1978-இல் உழைக்கும் மகளிர் சங்கம் தொடங்கினோம். அதையடுத்து, பெண்களுக்கான இந்திய கூட்டுறவு நெட்வொர்க்கை 1981 -இல் தொடங்கினோம். 78 காலகட்டங்களில் காய்கறி விற்பவர், பூ விற்பவர் போன்று சிறு தொழில் செய்யும் பெண்கள் தங்கள் அன்றாட வியாபாரத்திற்கான முதலீட்டுக்காக வட்டிகாரனிடமும், ஈட்டிகாரனிடமும் கடன் பெற்று நடத்தும் வியாபாரத்தில் முதல் எடுக்கவே சிரமப்பட்டனர். இதை அறிந்து அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்று அம்மா ஜெயா அருணாச்சலம் யோசித்தபோது, 100 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ரைஃபீஸின் என்பவர் இதுபோன்ற சிறுதொழில் செய்பவர்களை ஒன்றிணைத்து சுய உதவி, சுயாட்சி, சுய நிர்ணய உரிமை போன்றவற்றை உருவாக்கி அதன்மூலம் கூட்டுறவு வங்கி ஒன்றினை தொடங்கி அவர்களின் நிலையை உயர்த்தினார். இதனை அறிந்த அம்மா அது போன்று நமது தென்னிந்தியாவில் தொடங்க வேண்டும் என்று நினைத்து உழைக்கும் மகளிர் வளர்ச்சிக்காக இந்த கூட்டுறவு வங்கியினை தொடங்கினார். 
இதன் மூலம் ஏழைப் பெண்களுக்கு தொழில் வளர்ச்சி ஏற்படுத்தி இன்று கார்ப்பரேட் வங்கிகளைவிட இவர்களுக்கு பவர் அதிகம் உள்ளது என்பதனை நிரூபித்துள்ளோம். ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கிய இந்த வங்கியில் இன்று 6 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், ஒரு குழுவாக சேரும்போது பெண்களுக்கு ஒரு பவர் கிடைக்கிறது. ஒரு எனர்ஜி கிடைக்கிறது. இதனால் இவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் எந்த பிரச்னை என்றாலும் எந்தவித பயமும் இல்லாமல், யாருக்கும் பயப்படாமல் சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் சந்தித்து பேசும் அளவிற்கு உயர்த்தியிருக்கிறோம். இவைதான் உழைக்கும் மகளிர் வளர்ச்சியில் எங்களுக்கான வெற்றி. 
பெண்கள் அமைப்போடு உங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி தோன்றியது?
எனது தாயார் மற்றும் தந்தையைப் பார்த்து வளர்ந்தவள் நான். அவர்கள் இருவருமே எப்போதுமே சமூக நோக்கத்தோடு வாழ்பவர்கள். அதனால் நானும் அப்படித்தானே இருப்பேன். ஐ.நாவில் நிறைய பணி செய்துள்ளேன். ஏசியன் டெவலப்மெண்ட் வங்கியில் பணி புரிந்துள்ளேன். ஆனால், பணத்தை சம்பாதிப்பதைவிட , இங்குள்ள பெண்களின் முன்னேற்றத்துக்கு துணையாக இருக்கவே பெரிதும் ஆசைப்பட்டேன். அதுபோன்று ஏழைப் பெண்களின் பிரச்னைகளுக்காகவும், பெண்களை வீடுகளில் அடிமைப்படுத்தும் ஆண் ஆதிக்கத்திற்கு எதிராகவும் அன்றிலிருந்தே குரல் கொடுத்து வருகிறோம். இதனால் நாங்கள் ஓர் இன்டர்நேஷனல் கோ-ஆப்ரேட்டிவ் பவராக வளர்ந்துவிட்டோம். இதன் காரணமாக அப்போது ஹிலாரி கிளிண்டன் வந்து எங்கள் அமைப்பை பார்த்துவிட்டு சென்றார். 
பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் தன்னம்பிக்கை என்ன ?
பெண்களுக்கு அவர்கள் யார் என்பதை அவர்களுக்கே உணர வைக்கிறோம். பெண்களுக்கு லோன் கொடுத்தோம். அவர்களின் திறமையை மேம்படுத்தினோம். கூடவே அவர்களுக்கு விழிப்புணர்வும் கொடுத்து வருகிறோம். 
பொதுவாக பெண்கள் காலை 5.30 மணிக்கு எழுந்து கொள்கிறார்கள் வீட்டில் உள்ள வேலைகள் அனைத்தையும் தனியாளாக நாள் முழுவதும் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் மன நிலையில் "நாங்கள் வேலைக்கு எல்லாம் செல்வதில்லை. வீட்டில் சும்மாதான் இருக்கிறோம்' என்பார்கள். இந்த நிலை மாறவும். அதுபோன்று தனியொரு பெண்ணாக இருந்தால் எதுவுமே செய்யமுடியாது. அதுவே பெண்கள் குழுவாக, கூட்டாக இணைந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம். சரியான வழிகாட்டி கிடைத்தால் பெண்கள் நிச்சயம் வெற்றியாளர்களாக மாறுவார்கள் என்ற நம்பிக்கையை விதைக்கிறோம். 

உங்களது தாயாரைப் பற்றி?
அம்மா ஜெயா அருணாச்சலம்தான் இந்த உழைக்கும் மகளிர் சங்கத்தைத் தோற்றுவித்தவர். அம்மா ஒரு தனித்துவமான பெண்மணி. தனித்துவமான தலைவர். அரசியல் அனுபவம் இருந்தும் அரசியலை விட சமூதாய இயக்கத்தைதான் விரும்பினார். அதற்கு காரணம் நமது பெண்களின் நிலையை உயர்த்த வேண்டும். பெண்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும். வெளியிடங்களில் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த எண்ணத்தில்தான் இந்த அமைப்பை தொடங்கினார். ஆனால், இன்று அவர் எதிர்பார்த்ததைவிட அபார வளர்ச்சி அடைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். 
பெண்களுக்கு உங்களின் ஆலோசனை...
WHAT TO THE MUSIC THAT YOUR HERE என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. அதுபோன்று உங்களுக்கு என்ன கணிக்கிறதோ அதை நோக்கி பயணப்படுங்கள் அப்போது வெற்றி உங்கள் காலடியில் இருக்கும்.
-ஸ்ரீதேவி குமரேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com