வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்தும் உணவுமுறையும்

வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்தும் உணவுமுறையும்

ஒரு குழந்தை பிறந்தது முதல் இரண்டு வருடங்கள் வரை மழலைப் பருவம் என்றழைக்கப்படுகிறது.

ஒரு குழந்தை பிறந்தது முதல் இரண்டு வருடங்கள் வரை மழலைப் பருவம் என்றழைக்கப்படுகிறது. இந்த வளர்ச்சி நிலையில் பெரும்பாலும் ஆண்குழந்தை, பெண்குழந்தை என்ற பாலியல் வேறுபாடு மட்டும்தான் காணப்படுகிறதே தவிர, மிகப்பெரிய அளவில் உடலியல் மாற்றங்கள் ஏதும் ஏற்படுவதில்லை. இருபாலரும் சிறு குழந்தைகளாகவும், மழலைமொழி பேசும் மலர்களாகவும் மட்டுமே வளாக்கப்படுகிறார்கள். அதனைத் தொடர்ந்து வரும் எட்டு முதல் பத்து ஆண்டுகள்தான் உடலளவிலும், மனதளவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி, அதற்குரிய பாதுகாப்பையும் வளர்ப்பு முறைகளையும் உணர்த்தி, ஆண் குழந்தைக்கும் பெண்குழந்தைக்கும் உள்ள வேறுபாட்டை குறிப்பிட்டுக் காட்டுகிறது. மழலைப் பருவத்தைத் தொடர்ந்துவரும் குழந்தைப் பருவமானது பெண் குழந்தையைப் பொருத்தவரை 2 முதல் 10 வருடங்களாகவும், ஆண்குழந்தைகளுக்கு 2 முதல் 12 வருடங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது.
வளரிளம் பருவம்
குழந்தைப் பருவத்திலிருந்து நடுத்தர வயதிற்கு மாறும் இடைப்பட்ட காலத்தில் உள்ள வளர்ச்சி நிலையே வளரிளம்பருவம் எனப்படுகிறது. பின்பள்ளிப் பருவத்தைத் தொடர்ந்து 10 முதல் 20 வயது வரை வளரிளம் பருவமாகக் கருதப்பட்டு மூன்று வித நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை 10 முதல் 14 வருடங்கள் முன் வளரிளம் பருவம், 12 முதல் 16 வருடங்கள் வளரிளம் பருவம், 16 முதல் 20 வருடங்கள் பின் வளரிளம் பருவம் என்பதாகும். 
வளரிளம்பருவம் என்பது பெரும்பாலும் "வாய்ப்புகளின் வயது' என்று அழகாகக் கூறப்படுகிறது. பெற்றோர்களால் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட்டு, அதீத பொறுப்புடன் தங்கள் பருவவயது பிள்ளைகளுக்கு உறுதியான, தெளிவான, எதையும் ஆராய்ந்து பார்த்து பிரச்னைகளை எதிர்கொள்கின்ற பக்குவத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய காலம். இவ்வாறான செயல்பாடுகளே, வளரிளம் பருவ தலைமுறைகளின் எதிர்காலத்தை சிறப்பானதாக்கிக் கொடுக்கவல்லது. 
வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று எப்போது கூறமுடியும்? ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், குழந்தையாக இருந்தாலும், வயதிற்கேற்ற உடல் எடையும் உயரமும் கொண்டு, வளர்சிதை மாற்றங்கள், உடலியல் நிகழ்வுகள், இயன்முறை செயல்பாடுகள் ஆகியவை முறையாக உடலில் நிகழ்வதற்கான தகுதியும், ஆத்மார்த்தமான, உள்ளார்ந்த மகிழ்ச்சியும் ஒருங்கே இணைந்திருக்கும்போதுதான் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறமுடியும். 
மனித வளர்ச்சியில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி, தாய்மையடைந்து, பாலூட்டும் தாயென்ற நிலையை அடைவதற்கு முழுமையான உடல் தகுதியையும், மனப்பக்குவத்தையும், சேர்த்துக்கொடுக்கக்கூடிய வயதுதான் வளரிளம்பருவ வயது என்பதால், இந்த வயதில் ஒவ்வொரு பெண்ணும், பரிபூரண ஆரோக்கியத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு, ஊட்டம் நிறைந்த சரிவிகித உணவு மிக முக்கியமான ஒன்றாகும். 
வளரிளம் பருவத்திற்கான சரிவிகித உணவானது, அந்த வயதில் ஏற்படும் உடற்கூறு சார்ந்த மாற்றங்கள், உடலுறுப்பின் இயக்கங்கள், உயிர் வேதியியல் வினைகள், மனம் மற்றும் சமூகம் சாட்ந்த வளர்ச்சி, அந்த வயதிற்கேற்ற முதிர்ச்சியும், பக்குவமும் சரியான முறையில் நிகழ்வதற்கு முழுமுதலாக துணைபுரிகிறது. ஏதோ ஒரு குறிப்பிட்ட சத்து அல்லது இரண்டு மூன்று சத்துக்கள் தொடர்ச்சியாக உடலுக்கு அளிக்கப்படவில்லை என்றால், இப்பருவப்பெண்ணின் உடலில் சுரக்கும் (IGF1) என்ற சராசரி வளாச்சிக்குரிய ஹார்மோனின் செயல்பாடு குறைவு ஏற்பட்டு வளர்ச்சியிலும் குறைபாடு ஏற்படுகிறது. 

தொடர்ச்சியான ஊட்டச்சத்து குறைவினால் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள்
திருமணத்திற்குப் பிறகு, இனப்பெருக்கம் அல்லது பாலுணர்வு சார்ந்த செயல்பாடுகளில் குறைபாடு
பெண் பூப்பெய்தும் வயது நீடித்தல் அல்லது பூப்பெய்தாமலே இருப்பது
பருவம் அடைந்த பிறகு, சீரான மாதவிடாய் இல்லாதிருத்தல்
வயதிற்கேற்ற சரியான மார்பக வளர்ச்சியின்மை
எலும்புகள் வலுவிழந்து, போதிய உயரமின்மை
ஒழுங்கற்ற உடல் அமைப்பும், இடுப்புப் பகுதியும் மன அழுத்தத்தையும் மனக்குறையையும் ஏற்படுத்திவிடும்
தோல் பொலிவிழந்தும், காயங்களுடனும் காணப்படுதல்
அடிக்கடி தலைவலி மற்றும் பசியின்மை ஏற்படுதல்
எந்த வேலையிலும் சோர்வடைதல், எதிலும் விருப்பமில்லாமல் இருத்தல்
படிப்பில் கவனமின்மை, குறைவான உட்கிரகிக்கும் திறன், கற்றல் குறைபாடுகள் 
அன்றாட நடைமுறைப் பழக்க வழக்கங்களில் குறைபாடுகள் ஒவ்வொன்றாக தொடங்குதல்
மேற்கூறிய ஊட்டச்சத்து குறைபாடுகள் பொதுவானவையாகவும், உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், சத்துணவு சார்ந்த ஆரோக்கியக் குறைபாடுகள் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, உடலும் மனமும் சரிவர செயல்பட முடியாமல் அதிகப்படியான பிரச்சினைகளை வளரிளம்பருவ வயதில் ஏற்படுத்துகின்றன. 

ஊட்டச்சத்து குறைபாடால் ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த சிக்கல்கள்
பருவ காலத்தில், ஆண்பிள்ளைகள் எப்பொழுதும் உறுதியான, எடுப்பான உடற்கட்டுடன் இருப்பதற்கும், பெண்பிள்ளைகள் அழகுடன், தோற்றப்பொலிவுடன் ஒல்லியான உடல்வாகுடன் இருப்பதற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். அந்தந்த பாலினத்திற்குரிய இயல்பான வளர்ச்சியில் சிக்கல் ஏற்படும்போதுதான் மனக்குழப்பத்திற்குள்ளாகி எதிலும் ஆர்வமின்மை ஏற்படுகிறது. இவற்றிற்கு, ஊட்டச்சத்து குறைபாடும், அளவிற்கு அதிகமான உணவுப்பழக்கமும் காரணமாகின்றன. அவற்றை சரி செய்துவிட்டால், ஆரோக்கியம் சீராகிவிடும் என்பதை உறுதியாக எண்ணவேண்டும். இந்த வகையான குறைபாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 
பசியற்ற உளநோய் (ANOREXIA NERVOSA)
இந்நிலை குறிப்பாக முன்பருவத்திலிருந்து பின்பருவத்திற்கு முன்புவரை (13 முதல் 16 வயது) அதிகமாகக் காணப்படுகிறது. சரியான உணவுகளை உண்ணாமல், பசியுடன் தனக்குத்தானே வருத்திக்கொண்டும், 85 சதவிகிதத்திற்கும் குறைவான உடல் எடையுடன், மெலிந்த தோற்றத்தில்ல் இருப்பார்கள். அவர்கள் தானாக முன்வந்து திருத்திக்கொள்ளாமலும், பெற்றோர்களால் சரிசெய்யப்படாமலும் விட்டுவிடும் தருணத்தில், உடல்நிலை மிகவும் மோசமாகிவிடும். பிறகு ஒழுங்கற்ற மாதவிடாய், கை கால்களில் பொலிவற்ற தன்மை, பூனை முடி (downy Hair) என்று கூறப்படும் வலுவிழந்த காவிநிற அல்லது சாம்பல் நிற முடிவளர்தல் ஆகியவை ஏற்பட்டு அழகற்றதன்மை நிரந்தரமாகிவிடும். சிறிதளவு உணவே உண்டாலும், குமட்டல், வயிற்று உப்புசம், ஏப்பம், மலச்சிக்கல் போன்ற சிறுசிறு உபாதைகளுக்கு ஆளாகிவிடுவார்கள். 

பசியற்ற உளநோய் உள்ள வளரிளம் பருவத்தினரின் உணவுமுறை மற்றும் மனப்பாங்கு
பசியை மறந்தும், மறைத்தும், குறைவான உணவான இருந்தாலும், அதிக நேர இடைவெளியில் உண்பார்கள். 
உணவு, அதிலுள்ள சத்துக்கள், பயன்கள் ஆகியவற்றைத் துல்லியமாக தெரிந்து வைத்திருப்பதுபோல் பாவனை செய்வார்கள்.
குறிப்பாக, கொழுப்பு உணவுகள், வாசனைப்பொருட்கள், அசைவம், பால் மற்றும் அவை சார்ந்த உணவுகளைத் தவிர்த்துவிடுவார்கள்.
சத்துக்கள் குறைந்த உணவானாலும், ஆடம்பரத்திற்காக உண்ணும் உணவும், சரியான சேர்க்கை இல்லாத உணவுகளுமே சரியான உணவுகள் என்று தர்க்கம் பேசுவார்கள்.
உணவு பரிமாறப்பட்டால், உண்ண வேண்டும் என்ற கட்டாயத்திற்காகவே பொது விழாக்களையும், குடும்ப விழாக்களையும் தவிர்த்துவிடுவார்கள்.
அதிக கோபத்தை வெளிப்படுத்தாமல் எதிலும் மிகச்சரியாக இருப்பதுபோல் தம்மை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
மனச்சோர்வுடனும், எதையோ இழந்ததுபோன்ற ஒரு மனநிலையிலும், தன்னைக் குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளும் தாழ்வு மனப்பான்மையுடனும் காணப்படுவார்கள்.
உண்ணவில்லை என்றாலும், உடல் குண்டாகி விட்டதாக எண்ணும் உள்ளுணர்வால், தேவையற்ற அச்சத்துடன் அவசியமில்லாத உணவுக்கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற நினைப்பார்கள்.
எந்தவிதமான சமுதாய விழாக்களிலும், உறவினர்கள் மற்றும் பள்ளி அல்லது கல்லூரி விழாக்களிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளமாட்டார்கள். 
இயற்கையை மீறிய பெரும்பசி (Bulimia Nervosa)
குறுகிய நேரத்தில் அளவிற்கு அதிகமான உணவை உண்ணுவதால் ஏற்படும் செரிமானக்கோளாறும், அதனைத் தொடர்ந்து அதிக உணவால் உடல் எடை ஏறிவிடும் என்ற மன உளைச்சலில் உண்ட உணவை வாந்தியாக எடுத்துவிடும் நிலைக்கு என்று ஆங்கிலத்தில் பெயர். இதைச் சரியான பொருளில் கூறும்போது, இயற்கையை மீறிய பெரும் பசி என்றும் கொள்ளலாம். 

இயற்கையை மீறிய பெரும் பசி உள்ள வளரிளம்பருவத்தினரின் உணவுமுறை மற்றும் உளவியல் வெளிப்பாடுகள்
வாந்தி எடுக்கும் நிலையானது, தானாக தொண்டையில் கைவிட்டு வாந்தி எடுத்தல், வாந்தி வருவதுபோல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டும், பிறரிடம் கூறிக்கொண்டும், அதே சிந்தைனையில், குமட்டலுடன் வாந்தி எடுத்தல் என்று வெவ்வேறு நிலைகளில் நிகழ்த்துவார்கள்.
உண்ட உணவானது எளிதில் செரித்து, மலம் வெளியேற வேண்டும் என்பதற்காக மலமிலக்கிகள் மற்றும் சிறுநீர் பிரியும் மருந்துகளை உட்கொள்ளுதல் போன்றவைகளையும் இந்தப் பருவ வயதினருக்கு ஏற்படும் புளிமியா நெர்வோஸா (Bulimia Nervosa) நிலையின் இயல்பாகும். 
தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளுதல், தன் உடலைப் பற்றிய முரண்பாடான கருத்து, புற அழகையோ அல்லது உடல் தகுதியையோ முக்கியமாகக் காண்பிக்கும் பணியை விரும்பும் நிலை ஏற்படுதல்
குழந்தைப் பருவத்திலிருந்து, நடுத்தர வயதுப்பருவத்திற்கு மாறும்போது ஏற்படும் மன உளைச்சல், இயற்கையை மீறிய பெரும்பசி நிலையை மேலும் அதிகரிக்கிறது.
செயற்கையாக வாந்தி எடுக்கும் இந்நிலையால், அடிக்கடி உடல்எடையில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன.
உடலில் உள்ள தாது உப்புக்களில் குறைபாடு ஏற்படுவதால் உண்டாகும் இதயம் மற்றும் சிறுநீரகம் சார்ந்த தொல்லைகளால் ஆரோக்கிய சீர்கேடு
நாளமில்லாச் சுரப்பிகளில் அழற்சி மற்றும் வீக்கம் ஏற்படுதல், கண்ணில் உள்ள இரத்த நாளங்களில் பிளவுகள், நாட்பட்ட நீரிழப்பு, வயிற்றுப்புண் ஏற்படும் நிலை
தொடர்ச்சியாக வாந்தி எடுப்பதால், உணவுக்குழாய், தொண்டை, வாய்ப்பகுதியில் புண் மற்றும் இரத்தக்கசிவு ஏற்படுதல்
அடிக்கடி வாந்தி எடுத்துக்கொண்டும், மலம் கழித்துக்கொண்டும் இருப்பதால் ஏற்படும் உடல் நாற்றத்தால் அவர்களுக்கே அவர்கள்மேல் வெறுப்பும், மனஉளைச்சலும் உண்டாகிறது. 
ஊட்டச்சத்து சார்ந்த கல்வி
பருவ வயதில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்தான் மிக அதிகமாக உணவு மற்றும் ஊட்டம் சார்ந்த புத்தகங்களை அதிகம் படிப்பவராக இருப்பார்கள். தறபோதைய தொழில்நுட்ப உலகில், இணையதளம் மற்றும் சமூக வளைத்தளங்களில் உலா வரும் உணவு தொடர்பான செய்திகளை அதிகம் படித்தும் பகிர்ந்தும், தங்களுடைய உடல்நிலையுடன் பொருத்திப் பார்க்கும் நிலை அதிகரித்திருப்பது வருத்தமளிக்கும் ஒன்றாகும். 
ஏனெனில், சுய மருத்துவம் எவ்வளவு ஆபத்தானதோ, அதேபோன்றுதான் நிலையற்ற, நம்பகத்தன்மையற்ற, முறையான அனுபவமிக்க உணவியல் வல்லுநர் மற்றும் மருத்துவரிடமிருந்து நேரடியாக கிடைக்கப்பெறாத ஆலோசனைகளும் ஆபத்தானவையே. அப்படியான விஷயங்கள் அவர்களுடைய உடல்நிலையை மேலும் சிக்கலாகிவிடும். 
வளரிளம்பருவ வயதில் ஊட்டச்சத்து குறைபாடு நோயுள்ளவர்களுக்கு, குழு ஆலோசனையைவிட தனிநபர் ஆலோசனை மிகச் சிறந்த வழியாகும். ஒவ்வொரு கட்ட ஆலோசனையின்போதும், சிறிது சிறிதாக உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான நன்மையளிக்கும் செய்திகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் எடுத்துரைக்கவேண்டும். 
வளரிளம்பருவப் பெண்களுக்கு என்னென்ன ஊட்டச்சத்துக்கள் எந்த அளவில் தேவை என்பதையும் அவற்றைப் பெறுவதற்கான உணவுமுறைகளையும் அடுத்தவாரத் தொடர்ச்சியில் பார்க்கலாம். 
- வண்டார்குழலி இராஜசேகர்
உணவியல் நிபுணர், 
அரசு பொது மருத்துவமனை, காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com