கோலக்கலையை கின்னஸில் பதிய வேண்டும்!

இயல், இசை, நாடகம், ஓவியம் என கலைகள் மீது ஆர்வம் கொண்டவர். கவிதை, கட்டுரைகள் எழுதவும் கைவரப்பெற்றவர்.
கோலக்கலையை கின்னஸில் பதிய வேண்டும்!

இயல், இசை, நாடகம், ஓவியம் என கலைகள் மீது ஆர்வம் கொண்டவர். கவிதை, கட்டுரைகள் எழுதவும் கைவரப்பெற்றவர். உலக தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் இவரது கவிதைகள் அரங்கேறியுள்ளது. மதுரை ஆல் இந்தியா ரேடியோவில் பலமுறை இவர் நாட்டுப்புற பாடல்கள் பாடியுள்ளார். ஸ்கேட்டிங் ஷூ அணிந்து கிளாசிக்கல் நடனமும் ஆடுவார். இவரது வாழ்க்கை வரலாற்றை முனைவர் . பரந்தாமன் 2016-இல் தொகுத்து எழுதியுள்ளார். இவரது கவிதை, ஆராய்ச்சி கட்டுரைகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரர் ஆசிரியை ஸ்ரீவித்யா. இவர் அடுத்து கையில் எடுத்திருக்கும் ஆயுதம் கோலமாவு. ஆம், கோலம் வரைந்து கின்னஸ் சாதனை செய்வதே இவரது லட்சியம். அதற்கான தீவிர முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"எனக்கு பூர்வீகம் மதுரை. தற்போது சென்னைவாசியாகிவிட்டேன். கடந்த 15 ஆண்டுகளாக பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன். எனது சிறு வயதில் மார்கழி மாதங்களில் எங்கள் தெரு முழுவதும் வீட்டு வாசல்களில் பெண்கள் யார் வீட்டு கோலம் பெரியதாக உள்ளது என்று போட்டி வைத்துக் கொண்டு கோலம் போடுவார்கள். இந்த ஆர்வம் எனக்கும் சிறுவயதிலேயே தொற்றிக் கொண்டது. அது முதல் விதவிதமாக கோலம் போட கற்றுக் கொண்டேன். தினமும் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து கோலம் போட ஆரம்பித்துவிடுவேன். அந்த சமயத்தில் அப்பா அலுவலகத்தில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் கதையாக சொல்லுவார். அந்த கதைகளில் உள்ள காட்சிகளை நான் அப்படியே கோலத்தில் ஓவியமாக வரைவேன். அதையொட்டி மீனாட்சி திருக்கல்யாணம், ஆண்டாள் திருமணம், அகஸ்தியர் தலைகாவிரி, அறுபடை வீடு போன்றவற்றின் காட்சிகளையெல்லாம் கோலமாக வரைந்தேன்.
கோலம் நமது தமிழருக்கான பாரம்பரிய கலை என்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சீதா கல்யாணத்திலும், கோவலன் - கண்ணகி திருமண வைபவத்திலும், ஆண்டாள் கதையிலும் ஏராளமான தரவுகள் உள்ளன.
கோலத்தின் மீதான ஈர்ப்பு படிப்படியாக வளர்ந்து, பள்ளி, கல்லூரி நாட்களில் கோலத்திற்காக தேசியளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பல பெற்றுள்ளேன்.
இந்த ஆர்வம் இன்று வரை தொடர்கிறது. அப்படி ஒருமுறை கோலப்போட்டியில் கலந்து கொள்ளும்போது அங்கு வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.எஸ்.ராகவன். கோலக்கலையைப் பற்றி என்னிடம் மிகவும் புகழ்ந்து பேசினார். இத்தனை அற்புதமான கோலக்கலை தற்போது அழிந்து வருவது குறித்து வருந்தினார். அது என்னை பெரிதும் பாதித்தது. அழிந்து வரும் நமது தமிழரின் பாரம்பரிய கலையான கோலத்தை எப்படியாவது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற செய்துவிட வேண்டும் என்று எண்ணினேன். அதற்காக தீவிர தேடலில் இறங்கினேன். அதற்காக நிறையமுயற்சியும் செய்து வருகிறேன்.

ஓரளவு எல்லாம் கூடி வந்துவிட்டது. 5 நாள்கள், 66 மணிநேரம் கோலம் போடுவதற்காக கின்னஸ் அமைப்பாளர்கள் அனுமதி வழங்கி உள்ளனர். ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரியில் கோலமிடுவதற்கான இடம் அளித்துள்ளனர். "பொக்கிஷம் த வேர்ல்டு ரெக்கார்டு' என பெயரிட்டுள்ளேன்.
முதல் நாள் வண்ணக் கோலம், இதில் பட்டாம் பூச்சி, கிளி, தோப்பு, சிவந்த வானம் என இயற்கை காட்சிகளையும், பஞ்சபூதங்களின் மகத்துவத்தையும் கோலமாக வரைய உள்ளேன்.
இரண்டாவது நாள்- 37,000 புள்ளிகள் கொண்ட சிக்குக் கோலம் போடவுள்ளேன். இது நெளிவு சுளிகள் நிறைந்ததுதான் வாழ்க்கை எனும் அர்த்தம் கொண்டது.
மூன்றாவது நாள்- மாக் கோலம். இதில் வாழ்வாதரத்திற்கு உணவின் பங்கு உயிரனங்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தது.
நான்காவது நாள் - தானிய கோலம் - இது தானியங்களின் சிறப்பை எடுத்துரைக்கும் விதத்தில் உருவாக்கியுள்ளேன். குதிரைவாலி, தினை, சோளம், கேழ்வரகு , அரிசி, உப்பு என உபயோகப்படுத்தவுள்ளேன்.
ஐந்தாவது நாள் - பூக்கோலம். இதில் பலவகையான பூக்களை உபயோகப்படுத்தவுள்ளேன். இது நிகழ்ச்சியின் நிறைவுநாள் என்பதால் பூக்களுடன் சேர்த்து 85 ஆயிரம் வெற்றிலை பாக்கையும் பயன்படுத்தவுள்ளேன். சுப நிகழ்ச்சியின் முடிவில் தாம்பூலம் கொடுப்போம் இல்லையா? அதன் அடிப்படையில் அமைந்தது.
இந்த கோலப்போட்டிக்கு சுமார் 1000 கிலோ வரை கோலமாவு தேவைப்படுவதால். கடந்த 4 மாதங்களாக மதுரையில் உள்ள 60 பெண்கள் குடிசைத் தொழிலாக கோலமாவை தயார் செய்து வருகிறார்கள்.
இந்த சாதனைப் போட்டிக்கு மெட்டிரீயலுக்கு மட்டுமே சுமார் 7 லட்ச ரூபாய் வரை தேவைப்படுகிறது. இதைத்தவிர மற்ற செலவுகளை எல்லாம் சேர்த்து கணக்கிட்டதில் சுமார் 20 லட்ச ரூபாய் வரை கணக்கிடப்பட்டுள்ளது.
வருகிற நவம்பர் 22 -ஆம் தேதி கின்னஸ் அமைப்பாளர்கள் எனக்கான நாள் ஒதுக்கி கொடுத்தார்கள். ஆனால், கோலப் போட்டிக்கான நிதியைத் திரட்ட சரியான புரவலர்கள் கிடைக்காததால்போட்டிக்காக குறித்த நாள் தள்ளி போகும் நிலையில் உள்ளது'' என்கிறார் ஸ்ரீவித்யா.
- ஸ்ரீதேவி குமரேசன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com