மகளிர்மணி

நீரிழிவும் உடற்பயிற்சியும்!

ப. வண்டார்குழலி இராஜசேகர்


சென்ற வாரத் தொடர்ச்சி...


நீரிழிவு நோயாளிகள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் உணவு உண்பதைத்தான் நல்லது என்றும் உடற்பயிற்சிக்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்வதுதான் நன்மையளிக்கும் என்றும் உடற்பயிற்சியின் போதே இடையிடையில் சிறு உணவுகளை உண்ணலாம் என்றும் பல்வேறு விதமான கருத்துகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இதைப்பற்றிய ஆய்வுகள் மேலும்  தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவை ஒருபுறமிருந்தாலும்,  உடற்பயிற்சிக்கு முன்னர் நீரிழிவு நோயுள்ளவரின் ரத்த சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை அறிந்து கொண்டால், அதற்கேற்றார்போல் சில மாற்றங்களை உணவில் எடுத்துக் கொண்டு வந்துவிடலாம். அதன்படி, உடற்பயிற்சிக்கு முன்னர், ரத்த சர்க்கரையின் அளவு 100-க்கும் குறைவாக இருப்பது பாதுகாப்பானது அல்ல. அந்த நேரத்தில், 15 முதல் 30 கிராம் அளவிற்கு கார்போ ஹைடிரேட்  நிறைந்த உணவுப் பொருட்களான நார்ச்சத்துள்ள பழங்கள், சிவப்பு அவல், தானியம் பருப்பு சேர்த்த கஞ்சி, காய்கள் சாலட் போன்றவற்றை உண்ணலாம். மருத்துவர்களின் பரிந்துரைப்படி குளுக்கோஸ் மாத்திரையும் எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி முடிந்த பின்னர், சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர்,  உணவு நேரமாக இருந்தால், எப்பொழுதும் போல் உணவு உண்ணலாம். சிற்றுண்டி நேரமாக இருப்பின், சிறுதானிய கஞ்சி, அவித்த காய்கள், பழ சாலட், முளைகட்டிய தானியம்  அல்லது பருப்பு சுண்டல் அல்லது சாலட்,  உண்ணலாம்.  அதிக சோர்வு  இருப்பின், எளிதில் ஆற்றல் தரக்கூடிய வகையில் பால், பழச்சாறு, தானியம் வேகவைத்து வடிகட்டிய நீர் போன்றவற்றை உண்ணலாம். உடற்பயிற்சிக்கு முன்னர், ரத்த சர்க்கரையின் அளவு 100 முதல் 250 அளவில் இருந்தால், நீரிழிவு நோயாளிகள் தாராளமாக மிதமாக பயிற்சிகளை எந்த சிக்கலும் இல்லாமல் பாதுகாப்பு  உணர்வுடன் மேற்கொள்ளுவதுடன் பயிற்சி முடிந்தபின்னர்;  வழக்கம்போல உணவு உண்ணலாம். 

நன்றாக பயிற்சிக்குட்பட்ட  மனிதர்கள் பெரும்பாலும் ஆற்றல் உற்பத்திக்கு குளுக்கோûஸ விட, கொழுப்பு அமிலங்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனாலேயே பல வருட உடற்பயிற்சியாளர்களின் தசையில் சேமிக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் எளிதில் குறைவதில்லை.  புதிதாக உடற்பயிற்சி செய்பவர்களின் தசைகளிலுள்ள கிளைகோஜன் உடனடியாக ஆற்றலுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதால், உடல் மெலியும் நிலை ஏற்படுகிறது. கார்போ ஹைடிரேட் அதிகமுள்ள உணவுகள் குளுக்கோஸ் ஆக்ஸிஜனேற்றத்திற்குள்ளாகி அதிகமான கிளைக்கோஜினை தசைகளில் சேமிக்க உதவுகிறது. இதுவே தாங்குதிறனை அதிகப்படுத்துகிறது. இதனாலேயே சில உடற்பயிற்சியாளர்கள் கார்போஹைடிரேட் சேமித்தல் என்னும் யுக்தியை,  தாங்குதிறனை அதிகரிப்பதற்குக் கையாண்டுள்ளனர். இந்நிலை நீரிழிவு நோயாளிகளுக்கும் பொருந்தும்.  இந்த நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளுவதால்,  உடற்பருமனுடன் இருக்கும் நீரிழிவு நோயாளிகள் உடற்பயிற்சியின் மூலம் எளிதில் எடையைக் குறைக்கலாம். 

நீரிழிவு நோயாளிகள்  உடற்பயிற்சி செய்யும்போது கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியக் குறிப்புகள்:

 உடற்பயிற்சியை துவங்கும் முன், சிகிக்சை எடுத்துக் கொள்ளும் மருத்துவரிடம் நன்றாகக் கலந்தாலோசித்துவிட்டு, அவர் கூறும் அறிவுரைகளுடன் உடற்பயிற்சியாளரின் நேரடி கண்காணிப்பும் இருந்தால் எவ்வித சிக்கலும் இல்லாமல் உடற்பயிற்சியைத் தொடங்கலாம்.

 ஓவ்வொரு உடற்பயிற்சியும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையில் சர்க்கரையின் அளவை ஏற்றவும்  இறக்கவும் செய்யலாம். எனவே, உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் நீரிழிவு நோயாளிகள் தங்களின் ரத்த சர்க்கரை மற்றும் அழுத்தத்தின் அளவுகளைக் கண்காணித்துக் கொண்டால்,  உடலின் தன்மையை எளிதில் அறிந்து கொள்ள  உதவும்.

 முதல் வகை நீரிழிவு நோயாளிகள், சிறுநீர் மற்றும்  ரத்தத்தில் கீட்டோன் அளவு அதிகமாக இருக்கும்போது  உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும். சாதாரண மனிதர்களின் உடலில்,  உடற்பயிற்சியின்போது சுரக்கும்  இன்சுலின் அளவு கட்டுப்படுத்தப்படுவதுபோல் முதல் நிலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுவதில்லை.

 முதல் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி மூலம் தசைக்குள் செலுத்தப்படுவதால், கல்லீரல் உற்பத்தி குறைவாகவே இருப்பதுடன், தசைகளினால் உட்கிரகித்து பயன்படுத்தப்படும் குளுக்கோஸ் அதிகரிக்கிறது. இதனாலேயே, இவர்களுக்கு உடற்பயிற்சியின்போது,  ரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவு குறைகிறது.  நரம்புத் தளர்ச்சி ஏதேனும் இருந்தால் இந்த நிலை மேலும் மோசமாகும். அவர்கள் மயக்கநிலைக்கு வருவது அவர்களுக்கே தெரியாமல் போய்விடும். 

 இன்சுலின் அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கு உடற்பயிற்சியின்போது, திடீரென ரத்த சர்க்கரை அளவு குறைந்துவிடுவதும்  உண்டு. இதனால் அவர்களுடைய உணவில் கார்போஹைடிரேட்  அளவை சமன்படுத்துமளவிற்கு  உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

 உடற்பயிற்சிக்கு முன்னர் ரத்த சர்க்கரை அளவு 100 - 120 இருப்பவர்கள் சற்று கூடுதலான கார்போ ஹைடிரேட் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு உணவியல் நிபுணர்களின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவது நல்லது. 

 இன்சுலின் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு,  உடற்பயிற்சிக்குப்  பின்னர், ரத்த சர்க்கரை அளவு குறைவது என்பது பொதுவானது. இதற்கான சிறப்பு மருத்துவம் அல்லது முன்னெச்சரிக்கை எதுவும் அவ்வளவாகத் தேவையில்லை.

 உடற்பயிற்சி முடிந்து பல மணி நேரங்களுக்குப் பின்னரும் மிதமான தலைவலி அல்லது தலைசுற்றல், மயக்கம், வேகமான இதயத்துடிப்பு, முகவாய், கை, மேல்புற முதுகு வலி, குமட்டல், மூச்சு விடுவதில் சிரமம், திடீரென்ற உடல் சோர்வு, வழக்கத்திற்கு மாறான மயக்க
நிலை அல்லது தூக்கநிலை, வேறேதேனும் இயல்புக்கு மாறான உடல் மாற்றங்கள் ஆகியவை ஏற்பட்டால் தாமதிக்காமல், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 

 நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 300 -க்கும் அதிகமாக இருந்தால், உடலில் வேறு ஏதேனும்; நோயும், சோர்வும் இருந்தால், உடல் ஒத்துழைக்கவில்லையென்றால், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், கால்களில் சுருக்கென்று குத்தும் வலி இருந்தால், உணர்ச்சியற்ற அல்லது "மரத்துப்போதல்' என்று கூறும் நிலை கால்கள் மற்றும் கைகளில் இருந்தால், மாத்திரைகளின் அளவு அதிகரிக்கப்பட்டால்,  கட்டாயம்  உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும். 

 உடற்பயிற்சி செய்வதற்கு தொடர்ச்சியாக  30 நிமிடங்கள் கிடைக்கவில்லையெனில், 10 நிமிடங்களாகப் பிரித்துக்கொள்ளலாம். பிறகு மெதுவாக 30 நிமிடங்கள் வருமாறு முயற்சி செய்து நேரத்தை ஒதுக்க வேண்டும். 

 நீரிழிவு நோயாளிகள், இப்படி ஒரு நிலை வந்து விட்டதே என்றெண்ணி மனதளவில் தளர்ந்துவிடாமல், சரியான நேரத்திற்கு முறையான பயிற்சிகளை மேற்கொள்வதுடன், நல்ல உணவு முறை மாற்றத்தையும் கடைப்பிடிப்பதால், நீரிழிவை சிறப்பாக கையாண்டு, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதுடன், நோயில்லாதவர்களைப்போன்று எவ்வித கவலையுமின்றி வாழலாம். இருப்பினும், நீரிழிவு நோயில்லாமல் இருக்கும் நடுத்தர வயதுள்ளவர்கள், அன்றாடம் சிறிது நேரம் ஒதுக்கி, உடற்பயிற்சி,  யோகப் பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்து, வருமுன்னர் காத்துக் கொள்வது வாழ்க்கையை வளமாக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT