இல்லத்தரசிகளும் தொழில் முனைவோர் ஆகலாம்! - 37: லாபம் அள்ளித்தரும் வெட்டிவேர்!

சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தில் ஆர்கானிக் சம்பந்தமான பயிற்சிகளை எடுத்துக் கொள்ள அவ்வப்போது  நான் செல்வதுண்டு.  
இல்லத்தரசிகளும் தொழில் முனைவோர் ஆகலாம்! - 37: லாபம் அள்ளித்தரும் வெட்டிவேர்!


சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தில் ஆர்கானிக் சம்பந்தமான பயிற்சிகளை எடுத்துக் கொள்ள அவ்வப்போது நான் செல்வதுண்டு. அதுபோன்ற ஒரு பயிற்சியின் போது பயிற்சியாளர் கூறிய விஷயம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர், ஒருமுறை ராஜஸ்தான் சென்றிருந்தபோது அங்கே அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களை சந்திக்க நேர்ந்ததாகவும் அவர்கள் பயன்படுத்தும்  "ராஜ்புத்'  எனும் குளியல் பொடியை, தமிழ்நாட்டில் தயார் செய்து அவர்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார். ஏனென்றால்,  இந்த  குளியல்  பவுடரை உபயோகித்தால் நோய் அண்டாது. முகச்சுருக்கம் நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.  முகம் எளிதில் வயதான தோற்றம்  அடையாது என்றும்,  தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் மூலிகைகள் கிடைப்பதால் அங்கிருந்து அந்த குளியல்  பொடி தயாராவதாகவும் கூறினார். ஆனால் தமிழ்நாட்டில்  உள்ள நாம் இதுபோன்ற அற்புதமான மூலிகைகளை உபயோகப்படுத்துகிறோமோ என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.  இதனால் அவரிடம், ராஜ்புத்  குளியல் பொடி  தயார் செய்யும்  பயிற்சியை எடுத்துக் கொண்டு வந்து, என்னிடம் பயிற்சிக்கு வருபவர்களுக்கு கற்றுத் தருகிறேன். இதை அறிந்த சிலர், ""எங்களுக்குப் பயிற்சி வேண்டாம்.  அந்த குளியல் பொடி தயார் செய்து கொடுத்தால்  வாங்கிக் கொள்கிறோம்'' என்றனர். இதனால் பொடியைத் தயார் செய்து வெளியூரில்  உள்ளவர்களுக்கு அனுப்பி வைத்தோம். இப்படி ஒருவர்  திருவாரூரிலிருந்து அடிக்கடி என்னிடம்,  வாங்க ஆரம்பித்தார். ஒருமுறை அவரிடம், ""ஏன் இவ்வளவு பொடி வாங்குகிறீர்கள்'' என்றேன். அதற்கு அவர்  கூறியது எனக்கு வியப்பாக இருந்தது. 

""என் சகோதரி படுத்தபடுக்கையாக உள்ளார்,  அவருக்கு படுக்கை புண் வந்துவிட்டது. இதனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போதுதான்  உங்களது ராஜ்புத்  குளியல்  பொடியைப் பற்றி பத்திரிகையில்  படித்தேன். 16 வகையான மூலிகைகளால் ஆன  பொடி என்பதால் இது என் சகோதரிக்கு பயன்படுமா என முதலில்  கொஞ்சமாக வாங்கி உபயோகித்தோம்.   நல்ல குணம் தெரிந்தது.  அதனால் தான் அடிக்கடி வாங்குகிறேன்'' என்றார்.  

அவரிடம், ""இனி  நீங்கள் அடிக்கடி வாங்க வர வேண்டாம்.  இந்த  குளியல் பொடி எவ்வாறு தயாரிப்பது எப்படி உபயோகிப்பது என்று சொல்லி தருகிறேன். நீங்களே தயார் செய்து கொள்ளலாம்'' என்று   பயிற்சியளித்தேன். தற்போது  அவரது சகோதரி  உடல் நலனில் நல்ல மாற்றம் தெரிவதாக சொன்னார்.  மகிழ்ச்சியாக இருந்தது. 

பார்த்தீர்களா? நம் முன்னோர்கள் எத்தனை அரிய மருத்துவ மூலிகைகளை கண்டுபிடித்து அதில் உள்ள நற்பண்புகளை அறிந்து நமக்காக எவ்வளவு சொல்லியும்,  நாம் ஏதேதோ கிரீம்களை பயன்படுத்தி நம் உடல் நலனைக் கெடுத்துக் கொள்கிறோம். தற்போது இது பற்றிய விழிப்புணர்வு நிறைய பேருக்கு வந்துள்ளது. எனவே, இதுபோன்ற நல்ல விஷயங்களை  நாமும்  புரிந்து கொண்டு , நம் சந்ததியினருக்கும் எடுத்துரைக்கலாம்.    

சரி, இந்த வாரம் நாம் பார்க்கப் போவது வெட்டிவேரில் என்னென்ன மருத்துவ குணம் உள்ளது,  அதை எப்படி கைத் தொழிலாக மாற்றுவது என்பதைத்தான்'' என்கிறார்  சுய தொழில் ஆலோசகர் உமாராஜ். வெட்டிவேர்:  வெட்டிவேர் முதலில் விவசாயத்திற்கு ஏற்ற தொழில். வெளிநாடுகளில் கழிவு நீர் சுத்திகரிப்புக்கு வெட்டிவேரை  பெருமளவில்  பயன்படுத்துகின்றனர்.  கழிவு நீர் வரும் இடங்களில் இதை நட்டு வைத்தால் கழிவு நீரில் உள்ள ரசாயனத்தை உறிஞ்சி கொண்டு, நல்ல தண்ணீரை பூமிக்கு  அனுப்பும் தன்மை வெட்டிவேரில் உள்ளது. எனவே,  விவசாயிகள்  இதனைப்  பயிரிட்டு  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி   செய்ய,   நல்ல லாபம்   கிடைக்கும். 

அதுபோன்று வெட்டிவேரில்  ஏராளமான  கலைப் பொருள்களும் தயார் செய்கின்றனர். பெரிய பெரிய நிறுவனங்களில், வீடுகளில் வெட்டிவேரில் செய்த தட்டிகளை ஜன்னல்களில் தொங்க விடுகின்றனர். இதனால் வீட்டில் நல்ல சூழல் உண்டாகும், லட்சுமி கடாட்சம் ஏற்படும் என்று  நம்புகின்றனர். 

மேலும், வெட்டிவேரில் விசிறி, பிள்ளையார் போன்ற கைவினைப் பொருள்களை  வீட்டிலிருந்தபடியே தயார் செய்து  விற்பனை செய்யலாம். இவற்றிற்கு  நல்ல லாபம் கிடைக்கும்.  

மண்பானையில் தண்ணீர் ஊற்றி அதில்  சிறிது வெட்டிவேரை ஒரு வெள்ளை துணியில் கட்டி போட்டு அந்த நீரை குடித்து வர, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வலி, கை நடுக்கம், உடல் உஷ்ணம் போன்றவை குறையும். 

வெட்டிவேர் பொடி, சந்தனப் பொடி  இரண்டையும் சம அளவு  எடுத்து கலந்து ஃபேஸ் பேக்காக உபயோகப்படுத்த முகம் பளபளப்பாக இருக்கும். முகப்பருவும் வராது. 

தானிய விதைகளைப் பாதுகாக்க பூச்சிக்கொல்லி மருந்தாகவும்  வெட்டிவேரை பயன்படுத்தலாம். 

ஒரு டப்பாவில்  வெட்டிவேர், வெந்தயம் போட்டு அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வைத்து உபயோகித்து வர தலைமுடி கருகருவென வளரும். முடி உதிர்வது குறையும். 

இதுவரை வெட்டிவேரின் மருத்துவ குணங்களையும் அதை எந்த வகையில் பயன்படுத்துவது என்பதையும் பார்த்தோம் இதையே அவரவர் திறமைக்கு ஏற்றவாறு தயார் செய்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com