மகளிர்மணி

கொரிய இசையில் தமிழ்ப் பெண்!

DIN

இன்று பெண்கள் பல துறைகளில், கலைகளில் வித்தகர்களாக தங்களை மாற்றிக் கொண்டு வருகிறார்கள். முடியாத எதையும் முடிக்கும் பெண்களாக மாறிவருகிறார்கள். கல்லூரி மாணவியான ஸ்ருதி ராம்நாராயணன் நமது கர்நாடக இசையை மட்டுமில்லாமல் உலகத்தில் உள்ள பல்வேறு மொழிகளையும் கற்று அதில் தேர்ச்சி பெற்று சாதித்து வருகிறார். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"நான் எத்திராஜ் கல்லூரியில் வணிகப் பொருளாதாரத்தில் முதுகலையில் பயின்று வருகிறேன். எனக்கு படிப்பதுடன் பல கலைகளையும் கற்று தேர்ச்சி பெறவேண்டும் என்ற ஆசை இருந்தது. நம் தமிழருக்கே உரிய பண்பு என்ன தெரியுமா? பெண் பிள்ளைகள் என்றால் இசையும் நடனமும் கற்றுக் கொடுப்பதுதான். பல்வேறு குடும்பங்களில் இசையையும் நடனத்தையும் இரண்டு கண்களாக பாவித்து வருவதை நானே பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். எனக்கு நடனமும் தெரியும். என்றாலும் இசையில் அதிக நாட்டம் உண்டு. 
அதற்கு காரணம், என்னுடைய ஆறு வயதிலிருந்து எனது தாயார் செüமியா ராம்நாராயணனிடம் இசை பயின்று வருவதுதான். என்னுடைய தாயார் செüமியா ராம்நாராயணன் பயிற்சி பெற்ற கர்நாடக இசை கலைஞர். அவர் மாயவரம் இசை கலைஞர் ஆ.ராஜம் ஐயர், மற்றும் நங்கநல்லூர் ய.ராமநாதன் ஆகியோரின் சிஷ்யை . என்னுடைய தாயாரின் தந்தை அ.எ. ஸ்ரீநிவாசன் புல்லாங்குழல் வித்வான். தாயாரின் அன்னை கோதைநாயகி சீனிவாசன் வீணை விதுஷி. இப்படிபட்ட இசை குடும்பத்தில் வந்த எனக்கு எப்படி, வேறு துறையின் மீது நாட்டம் ஏற்பட முடியும். 
அதுபோன்று, கர்நாடக இசையைப் போன்று எனக்கு பாப் இசையிலும் ஈடுபாடு உண்டு. என்னுடைய தந்தையின் தகப்பனார், அதாவது என் தாத்தா குடந்தை மாலி. அவர் ஒரு மேடை நாடக இயக்குநர். "மாலீஸ் ஸ்டேஜ்' என்ற நாடக குழுவை சுமார் 60 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அதனால், இசையில் மட்டுமல்லாமல், மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறேன்.
கொரியன் இசையில் எப்படி ஈடுபாடு ஏற்பட்டது? 
தற்செயலாக நான் ஒரு நாள் you tube-இல் ஒரு கொரியன் பாடலை கேட்டேன். அந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. அன்று முதல் கொரியன் இசையில் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பித்தேன். எனக்கு தூண்டு கோலாக திகழ்ந்தது சென்னையில் உள்ள inko center, அதன் தலைவி ரதி ஜபரும்தான். உலக அளவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு திருவிழா "CHANGWON K POP WORLD FESTIVAL' இந்த போட்டியில் தேசிய அளவில் இரண்டாவது பரிசினை வென்று எல்லோரது பாராட்டினையும் பெற்றேன். நான் சென்னை பிராந்தியத்தின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசினையும் வென்றேன். இந்த போட்டி ஆண்டுதோறும் உலக அளவில் நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டி நான்கு சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்று - on line சுற்று. அதில் முதல் பத்து பாடகர்களை தேர்ந்தெடுப்பார்கள். அடுத்த சுற்று நேரடியாக பங்கு கொண்டு பாட வேண்டும். 
அதில் சிறந்த மூன்று போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். இதில் முதல் பரிசு பெற்றவர்கள் மட்டும் தேசிய அளவில் நடக்கும் போட்டியில் பங்கு கொள்ள முடியும். இதில் வெற்றி பெறுபவர்கள் நம் நாட்டின் பிரதிநிதியாக கொரியாவில், உலக அளவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற தகுதி உடையவர்கள். எனக்கு கொரியன் பாப் மட்டும் இல்லாமல் சீனா பாப் பாடல்கள் மற்றும் R & B இசையிலும் தேர்ச்சி உண்டு. பல நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டுள்ளேன். 
பல்வேறு மொழிகள் இருக்க, உங்களுக்கு ஏன் கொரியன் மொழியில் மட்டும் ஈடுபாடு ஏற்பட்டது?
கொரியன் மொழி நமது தமிழ் மொழியை ஒத்து இருப்பதால் அதில் எனக்கு ஈடுபாடு அதிகம். கொரியன் மொழியும் தமிழ் மொழியும், கிட்டத்தட்ட ஒன்று போலவே இருப்பதாலும், பல கொரியன் நாடகங்களிலும் இதை நான் பார்த்து ஆச்சர்யபட்டிருக்கிறேன். இதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்ததாலும், இந்த ஈடுபாடு ஏற்பட்டது என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு அப்பா என்ற தமிழ் சொல் கொரிய மொழியிலும் அப்பா என்றே அழைக்கப்படுகிறது. "புல்' என்று அழைக்கும் தமிழ் சொல் கொரியன் மொழியிலும் அதே அர்த்தத்தில் கூறப்படுகிறது. இதே போல் நாள், நான், நீ, போன்ற சொற்கள் அப்படியே உச்சரிக்கப்படுகின்றன. இது எல்லாம் என்னை வியக்கவைத்தது. கொரியன் மொழி மட்டும் அல்லாமல் தமிழ், ஆங்கிலம்,இந்தி,தெலுங்கு,கன்னடம், மலையாளம், வங்காளம்,பஞ்சாபி, சமஸ்க்கிருதம், கொங்கனி, சிங்களம், சீனம், ஜப்பான், பிலிபினோ, பாகிஸ்தானி, தாய், இத்தாலி, ஸ்பானிஷ் என 18 மொழிகளில் ஈடுபாடும் பரிச்சயமும் உண்டு. நான் மொழிகளில் வேறுபாடு பார்ப்பதில்லை. எல்லா மொழிகளிலும் தேர்ச்சி பெற ஆவலும், ஆசையும் உண்டு. 
நீங்கள் தனியாக பாடுவீர்களா இல்லை குழுவுடனா ? 
‘K wave’ எனும் குழுவில் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கத்தினராக உள்ளேன். இந்த குழுவில் பல்வேறு நண்பர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அதற்கு காரணம் இந்த குழுவை தலைமை தாங்கி நடத்தும் சஞ்ஜெய் ராம்ஜி சிறந்த மனிதர். கொரியா மொழியை நேசிக்கும் பல நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு இந்த குழுவில் எனக்கு கிடைக்கிறது. 
- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT