கருவூலம்:  திருநெல்வேலி மாவட்டம்! 

தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் 274 சிறப்புடன் விளங்கியதாக தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் உள்ளிட்ட பல பழமையான நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
கருவூலம்:  திருநெல்வேலி மாவட்டம்! 

திருவெல்வேலி நெல்லையப்பர் ஆலயம்!

தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் 274 சிறப்புடன் விளங்கியதாக தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் உள்ளிட்ட பல பழமையான நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஊரின் பெயருக்கும், புகழுக்கும் காரணமான அழகிய சிற்பங்கள்  நிறைந்த ஆலயம். 1300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, பாடல் பெற்ற தலம். நடராஜரின் பஞ்ச சபைகளில் இது தாமிர சபை. 
தலபுராணத்தின்படி முதலில் முழுதுக்கண்ட ராமகோன் என்ற பாண்டிய மன்னராலும், பின்னர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர், நின்ற சீர் நெடுமாறன் (கூன் பாண்டியன்) என்பவராலும் கட்டப்பட்டது. 
அதன் பின்னர் பலரும் ஆலயத்தை விரிவுபடுத்தவும், புதுப்பிக்கவும், பராமரிக்கவும் செய்துள்ளனர். மதுரை நாயக்க மன்னர்களால் பெரிய அளவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்டதுடன், பல சிறப்பான திருப்பணிகளைச் செய்து ஊரின் உள் கட்டமைப்பை சீர் செய்துள்ளனர்.  தெற்கு வடக்காக 756 அடி நீளமும் கிழக்கு மேற்காக 374 அடி அகலமும் கொண்ட 14 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட பெரிய ஆலயம். சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சந்நிதிகளாகக் கட்டப்பட்டு, பிற்காலத்தில் சங்கிலி மண்டபம் கட்டப்பட்டதால் இணைக்கப்பட்டுள்ளது. இறைவன் சந்நிதியில் மூன்று பிராகாரங்களும் நான்கு கோபுரங்களும், நந்தியின் 10 அடி உயரத்திற்கும் மேலான பெரிய சுதை சிற்பமும் உள்ளன. 

இசைத்தூண்கள்!

சுவாமி சந்நிதியில் நின்ற சீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்ட மணிமண்டபம் உள்ளது. இங்குதான் தட்டினால் இனிய ஓசை வரும் கற்தூண்கள் உள்ளன.

இங்கு 10 தூண் கூட்டங்கள் உள்ளன. ஒரு தூண் கூட்டம் என்பது ஒரே கல்லில் செய்யப்பட்ட மத்தியில் ஒரு பெரிய தூணும், சுற்றிலும் உருவத்திலும், உயரத்திலும் மாறுபட்ட பல சிறிய தூண்களும் கொண்ட அமைப்பு. அழகான வேறுபட்ட சிற்ப வேலைப்பாடு கொண்ட சிறிய தூண்களை தட்டினால் வெவ்வேறு ஒலி வரும். மொத்தம் 161 சிறிய தூண்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள இசைத்தூண்களில் காலத்தால் மிகவும் பழமையானவை நெல்லையப்பர் கோயில் இசைத்தூண்களே! 

கோயிலில் ஊஞ்சல் மண்டபம், மகாமண்டபம், என பல மண்டபங்களும், நூற்றுக்கணக்கான தூண்களும் இருக்கிறது. அழகிய சிற்பங்களை உள்ளடக்கிவை. ஆலயத்தின் முகப்புப் பகுதியில் உள்ள தக்ஷிணாமூர்த்தி, தாமிர சபை ஆகிய இடங்களில் உள்ள மர அலங்கார வேலைப்பாடுகளும், மர சிற்பங்களும் அற்புதமான கலைப்படைப்புகள்! 

கோயிலில் வட்டெழுத்து, கிரந்தம், தமிழ், கன்னடம், தெலுங்கு என பலவகை எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுகள் உள்ளன. 

மாவட்டத்தின்  தேரோட்டத் திருவிழா!  

ஆனி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் கோயில் விழாவின்போதுதான் தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேரான 450 டன் எடை கொண்ட பெரிய தேர் வீதி உலா வரும். இதனுடன் மேலும் 4 மரத்தேர்களும் சேர்ந்து 5 தேர்களாக கோலாகலமாக ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து நிற்க ரதவீதிகளில் உலா வரும். 
இத்தேர் 1505 ஆம் ஆண்டிலிருந்து ரத வீதிகளில் தொடர்ந்து வலம் வருகிறது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் தமிழகத்தின் பெரிய தேர் இது மட்டும்தான்! 

சங்கரன்கோயில் - கோமதி அம்மன் ஆலயம்!

கோமதி அம்மன் கோயில் என அழைக்கப்படும் சங்கரநாராயண சுவாமி கோயில் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்று! 11 ஆம் நூற்றாண்டில் உக்கிர பாண்டிய மஹாராஜாவால் கட்டப்பட்டது. 

இங்கு சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்மன் மற்றும்  சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக இணைந்த கோலத்தில் உள்ள சங்கரநாராயணர் சந்நிதி  என 3 சந்நிதிகள் உள்ளன.  இந்த ஆலயத்தில் அழகிய சிற்பங்களுடன், கலைநயமிக்க ஓவியங்களும் உள்ளன. சயனகோல விஷ்ணு ஓவியமும், கணபதியின் 11 ஓவியங்களும் சிறப்பு வாய்ந்தவை. "ஆடித் தபசு' என்ற விழா பிரசித்தி பெற்றது. 
 
குற்றாலம் - குற்றாலநாதர் ஆலயமும், சித்திர சபையும்!

தேவார பாடல் பெற்ற தலம். சங்கு வடிவத்தில் அமைந்த திருக்கோயில் என்பது இதன் தனிச்சிறப்பு. இங்கு 1000 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டெழுத்து கல்வெட்டுகள் உட்பட பல கல்வெட்டுகள் வரலாற்று ஆவணங்களாக உள்ளன.

இக்கோயிலின் வடக்கே சற்றுத் தொலைவில் "சித்திர சபை' உள்ளது. தமிழகத்தின் உள்ள நடராஜரின் 5 சபைகளில் சித்திரசபை இதுவே! இங்கு இறைவன் ஓவிய வடிவில் காட்சியளிக்கிறார். 

பிரமிடு போல் வடிவமைக்கப்பட்டு மேற்கூரை தாமிர தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார்  600 ஆண்டுகளுக்கு முன் மூலிகை வண்ணங்களால் வரையப்பட்ட பல ஓவியங்கள் உள்ளன. இவற்றில் புராண நிகழ்வுகளும், தல வரலாறும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. 

தென்காசி - காசி விஸ்வநாதர் ஆலயம்!

மதுரையில் நடந்த முகலாயர் மற்றும் நாயக்கர் படையெடுப்பால் இடம் பெயர்ந்த பாண்டிய அரச வம்சத்தினர் சிலர் தென்காசியை தலைநகரமாகக் கொண்டு "தென்காசி பாண்டியர்களாக' ஆட்சி செய்தனர். 

தென்காசி பாண்டியர்களின் முதல் மன்னன் சடைய வர்ம பராக்கிரம பாண்டியன் இக்கோயிலைக் கட்டி, தென்காசி நகர அமைப்பையும் உருவாக்கினார். 

554 அடி நீளமும், 318 அடி அகலமும் கொண்ட இந்த ஆலயத்தின் சுவாமி சந்நிதி முன் மண்டபத்தில் உள்ள 16 ஆள் உயர கற்சிற்பங்கள் மிகவும் அழகானவை. அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய கலைப்படைப்புகள்! 

திருபுடைமருதூர் - நாறும்பூநாத சுவாமி கோயில்!

புராணச் சிறப்பு மிக்கது. வீரமார்த்தாண்ட வர்மரால் கட்டப்பட்ட இந்த கோயிலை சேர, சோழ, பாண்டிய மற்றும் விஜய நகர கலைப் பாணி வேலைப்பாடுகள் அழகு படுத்துகிறது.  ராஜகோபுரத்தின் ஐந்து நிலைகளிலும் விஜய நகர, மற்றும் நாயக்கர் கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மரச்சிற்பங்களும் குறிப்பிடத்தக்கவை. 7 ஏக்கர் கொண்ட இககோயில் வளாகத்திற்குள் மருதமரம், நெட்டிலிங்கம், இலுப்பை போன்ற மரவகைகள் பிரம்மாண்டமாய் வளர்ந்திருக்கின்றன. இந்த மரங்களுக்கு ஜனவரி முதல் ஜூன் வரை ஆஸ்திரேலியா, கனடா, நாடுகளில் இருந்து  ஆயிரக்கணக்கான பறவைகள் வருகின்றன. இதனை "திருப்புடை மருதூர் பறவைகள் காப்பகம்' என வனத்துறை அறிவித்துள்ளது. 

இவ்வூருக்கு அருகில்தான் தாமிரபரணியுடன் ராமநதியும், கருணா நதியும் கலக்கிறது. 

கிருஷ்ணாபுரம் - வெங்கடாசலபதி கோயில்!

சிற்பங்களால் உலக பிரசித்தி பெற்ற கோயில். விஜயநகர பேரரசின் மன்னரான முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர், முகலாய மன்னர்களால் அழிக்கப்பட்ட பல கோயில்களை சீர்படுத்தியதுடன் பல புதிய கோயில்களையும் கட்டினார்.  அவரால்திருநெல்வேலி அருகே கட்டப்பட்டதுதான் இந்த கோயில். கோயிலை சுற்றி நகரமைப்பை நிர்மாணித்ததால், அவர் பெயராலேயே கிருஷ்ணாபுரம் எனப்படுகிறது.  சிற்பக் கலைக்கும், கட்டிடக் கலைக்கும் சான்றாக நிமிர்ந்து நிற்கிறது. 

திருக்குறுங்குடி - நம்பி கோயில்!

மிகவும் பழமையான ஊர். வராக புராணம், கைசிக புராணம், போன்ற புராணங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.  ஊருக்குள் உள்ள அழகிய நம்பி கோயில் எனப்படும் பெருமாள் கோயிலில் அற்புதமான வேலைப்பாடுகள் மிகுந்த மரச்சிற்பங்கள் உள்ளன. ஊரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் மலைநம்பி கோயில் உள்ளது. மகேந்திரகிரி மலைப் பகுதியில் நம்பியாற்றின் கரையில் உள்ள இந்த கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்றது. கோயிலைச் சுற்றி அடர்ந்த வனப்பகுதியும், மலையடிவாரத்தில் கொடுமுடியாற்றின் அணையும், அருவியும் உள்ளதால் ஆன்மீகத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் கட்டுப்பாடுகளும் உண்டு. 
 
கள்ளிக்குளம் - அதிசய பனிமாதா ஆலயம்!

இந்தியாவின் புகழ்பெற்ற மரியன்னை தேவாலயங்களில் ஒன்று. இந்தியாவில் உள்ள கிறித்துவ புனித யாத்திரைத் தலங்களில் ஒன்று. 1855 இல் கட்டப்பட்ட வானளாவிய ஆலயம் 190 அடி உயரம் கொண்ட ஆலயத்தில், பெரிய கோபுரம் மட்டுமே 150 அடி உயரத்துடன் உள்ளது. 1884 இல் எங்கு ஆலயம் கட்டுவது என்று கிராம மக்கள் குழம்பியபோது, மாதாவே கோடைக்காலத்திலும் பனியைப் பொழிந்து இடத்தைக் காட்டியதால் பனிமாதா ஆலயம் எனப் பெயர் பெற்றது. பக்கத்தில் உள்ள காட்சிமலையில் அன்னையின் சிலையும் மண்டபமும் உள்ளன. 

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல்!

தென்தமிழகத்தின் புகழ்பெற்ற தர்கா. 1674 இல் கட்டப்பட்ட இந்த தர்காவிற்கு பிற மதத்தினரும் வேண்டுதல்களுக்காக வருகிறார்கள். இங்கு நடைபெறும் கந்தூரி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது!

ஆத்தங்கரை பள்ளிவாசல்!

கடற்கரையில்,நம்பியாறு கடலில் கலக்கும் இடத்தில் உள்ளது. நோய் தீர்க்கும் தலம். சையத் அலி பாத்திமா, ஷேக் முகம்மது, என இரண்டு சூஃபி ஞானிகள் சமாதி இங்கு உள்ளன. 

மத்திய அரசு அமைப்புகள்!

கூடன்குளம் அணுமின் நிலையம்.

ராதாபுரம் தாலுகாவில் உள்ள கூடன்குளத்தில் இந்திய அணுமின் கழகத்தின் நிர்வாகத்தில் செயல்படும் அணுமின் நிலையம் உள்ளது. நாட்டின் அணுமின் உலைகளில் இதுவே மிக அதிகப்படியான மின் உற்பத்தி செய்கிறது. 

மகேந்திரகிரி - இஸ்ரோ மையம், ஏவுகணை உந்துவிசை ஆய்வுக்கூடம்.

பணகுடி அருகே மகேந்திரகிரி மலையில் அமைந்துள்ள மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையம். தமிழகத்தில் உள்ள இஸ்ரோவின் ஒரே மையம். 1800 மீ. உயரம் கொண்ட மகேந்திரகிரி மலை அடர்ந்த வனமும், மூலிகைச் செடிகளும் சிற்றருவிகளும் கொண்டது. ஆரல்வாய்மொழிக்கும், பணகுடிக்கும் இடையே அதிக காற்று வீசும் பகுதி என்பதால் மலையின் பள்ளத்தாக்குப் பகுதியில் சுழல் காற்று வீசும்.  இம்மலைச் சரிவில்தான் பி.எஸ்.எல்.வி...,(ட.ந.க.ய) மற்றும் ஜி.எஸ்.எல்.வி.    (எ.ந.க.ய) யின் திரவ இயக்கத் திட்ட மையம் செயல்படுகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் எளிதில் செல்ல முடியாது. 

ஐ.என்.எஸ். - கட்டபொம்மன் கடற்படை மையம்!

விஜய நாராயணத்தில் அமைந்துள்ள இந்தியக் கடற்படையின் தகவல் தொடர்பு மையம். கப்பற்படைக்குச் சொந்தமான கப்பல்கள், தமிழக கடலோரப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது தகவல்களை பெற்று கடற்படைக்குத் தெரிவிக்கும் முக்கிய மையம்! 

மின் உற்பத்தி 

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்கத்துடன் கூடிய அணைப் பகுதியில் 1944 இல் கட்டப்பட்ட நீர்மின் திட்ட யூனிட் மூலம் 28 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. 

காற்றாலை மின் உற்பத்தி!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆரியங்காவு கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய்  என இரண்டு கணவாய்கள் உள்ளன. இவற்றின் வழியாக அரபிக்கடல் பகுதியில் இருந்து பலத்த காற்று வீசுகிறது. வினாடிக்கு  4மீ. முதல் 25 மீ. வரை வீசும் காற்றைக் கொண்டு காற்றாலை யூனிட்டுகள் அமைக்கப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் இரண்டு கணவாய்களின் வழியாக வீசும் காற்றைக் கொண்டு பணகுடி, காவல்கிணறு, பழவூர், வீராணம், ஆலங்குளம், ராதாபுரம்,  பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகத்தின் காற்றாலை மின் உற்பத்தியில் திருநெல்வேலி மாவட்டத்தின் பங்கு கணிசமான அளவில் உள்ளது. 

சூரிய சக்தி மின் நிலையம்!

செழியநல்லூர் பகுதியில் 100 மெகாவாட் திறனுள்ள சூரிய சக்தி மின் நிலையம் சமீபத்தில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 லட்சத்து 50 ஆயிரம் மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. 

சுற்றுலாத் தலங்கள்!

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம்!

திருக்குறுங்குடியிலிருந்து கடையம் வரையில் உள்ள 895 ச.கி.மீ. பரப்பு வனப்பகுதியே "களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 430 ச.கி.மீ. பரப்பு அடர்ந்த காடுகள். 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 15 புலிகள், 45 சிறுத்தைகள், மற்றும் யானைகள், மான்கள், குரங்குகள், போன்ற மிருகங்களும், அரிய வகைத் தாவரங்களும் உள்ளன.  இந்த புலிகள் காப்பகத்தில்தான் சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி, அணைகளும், மாஞ்சோலை ஊத்து, நாலுமூக்கு உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்களும், காரையாறு, சொரிமுத்து அய்யனார் கோயில், களக்காடு நம்பி கோயிலும், 4 பிரசித்தி பெற்ற அருவிகளும், செங்கல்தேரி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. 

தொடரும்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com