ஒற்றுமையின் சிலை!

நம் பாரத நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது. அத்தகைய சமஸ்தானங்களை மன்னர்கள் ஆண்டுவந்தனர்.
ஒற்றுமையின் சிலை!

கருவூலம்
 நம் பாரத நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது. அத்தகைய சமஸ்தானங்களை மன்னர்கள் ஆண்டுவந்தனர்.
 நமக்கு விடுதலை அளித்த ஆங்கிலேயர்கள் "எப்படி இந்தியர்கள் இந்த சமஸ்தான மன்னர்களை சமாளிக்க போகிறார்கள்?' என்று தமக்குள் எள்ளி நகையாடினர்! அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்ற போதும் இத்தகைய சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பது மாபெரும் சவாலாக இருந்தது. காரணம் பல சமஸ்தான மன்னர்கள் தமது பதவியை இழக்க விரும்ப வில்லை.இதனால் இந்தியாவுடன் இணைய மறுத்தனர்.
 இவற்றை ஒருங்கிணைத்தால் மட்டுமே ஒன்றுபட்ட முழுமையான இந்திய தேசம் என உலக நாடுகளின் பட்டியலில் இடம் பெற முடியும். மேலும் இந்திய வரைபடத்தையும் அதன் எல்லைகளுடன் இதற்குப் பிறகு தான் வரையறுக்க முடியும். இந்நிலையில் இம்மாபெரும் பணியை சிரமேற்கொண்டு செய்து முடித்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆவார்!
 "சர்தார்' என்ற வடமொழிச் சொல்லுக்கு "தலைவர்' என்று பொருள். தம் அடைமொழி பெயரைப் போலவே இவர் ஒரு தலைவராக செயல்பட்டு சிதறிக்கிடந்த சுதந்திர இந்தியாவின் பல்வேறு மாகாணங்கள் மற்றும் சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்தார்.
 இதனால் இவர் "இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று போற்றப்பட்டார். இந்தியாவின் "முதல் துணை பிரதமர்' மற்றும் "இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர்' என்ற பெருமையும் இவருக்கு உண்டு. எனவே தற்போதுள்ள ஒருங்கிணைந்திய இந்திய வடிவம் சர்தார் வல்லபாய் பட்டேலால்தான் சாத்தியமாயிற்று! மேலும் பல மன்னர்கள் தாமாகவே முன் வந்து சுதந்திர இந்தியாவுடன் இணைந்தனர்! சில முரண்பட்ட சமஸ்தானங்கள் கூட பின் ஒற்றுமையின் அவசியத்தையும் சுதந்திர வீரர்களின் தியாகத்திற்கு மதிப்பளித்தும், மக்களின் மனநிலையை மதித்தும் சுதந்திர இந்தியாவில் இணைந்து கொண்டன.
 அத்தகைய முரண்பட்ட சமஸ்தானங்களை இணங்க வைப்பதற்கு அரும்பாடு பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல்!
 தற்போதுள்ள இந்திய வடிவம் பல சமஸ்தான மன்னர்களின், சுதந்திரத் தியாகிகளின், சுதந்திர வேட்கை மிகுந்த மக்களின் ஒற்றுமையை பறைசாற்றுகிறது!
 இந்திய ஒற்றுமைக்கு அரும்பாடு பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல்!
 தற்போதுள்ள இந்திய அரசு பட்டேலுக்கு மிகப் பெரும் சிலையை அமைத்துள்ளது!
 "ஒற்றுமையின் சிலை!' என்ற பெயர் இச்சிலைக்குப் பொருத்தமாகிவிட்டது!
 சுற்றுலாத் துறையின் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் கேரள மாநிலத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பெறுவது குஜராத் மாநிலம் ஆகும்.
 இச்சிலையை நிறுவியதன் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேலின் புகழை உலகம் முழுவதும் பரப்புதல் மற்றும் சுற்றுலா மூலம் அதிக வருவாய் பெறுதல் ஆகிய இரு நன்மைகளை குஜராத் மாநிலம் பெறுகிறது.
 இந்தியர்களின் தொழில் நுட்பத் திறமையையும் ஆளுமைத் திறனையும் பறைசாற்றவே இந்த சிலையை தாம் நிறுவியதாக பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 மிக பிரம்மாண்டமான இந்த சிலையின் உயரம் 182 மீட்டர் ஆகும். நர்மதா மாவட்டத்திலுள்ள சர்தார் சரோவர் அணை அணைக்கு அருகே ஒரு சிறிய தீவு போன்ற நிலப்பகுதியில் இச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இத்தீவுப் பகுதியை கரையுடன் இணைக்க நீண்ட பாலம் போன்ற அமைப்பு ஒன்றும் கட்டப் பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளை நினைவு படுத்தும் வகையில் இச்சிலை 182 மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 அகமதாபாத் நகரிலிருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது.
 இச்சிலை அமைக்கப்பட்டுள்ள பீடத்தின் வழியாக 153 மீட்டர் உயரம் வரை இச்சிலையின் உட்புறம் வழியாக ஏறிச்சென்று சர்தார் சரோவர் அணையின் முழு கொள்ளளவையும் ரசிக்கலாம். இதற்காக 7 லிப்டுகள் செயல்படுகின்றன.ஒரே நேரத்தில் 200 பேர் வரை இத்தளத்தில் நின்று பார்க்கக்கூடிய அளவிற்கு இதன் உட்புற கட்டுமானம் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 மேலும் இச்சிலை ஆனது ஒரு நொடிக்கு 60 மீட்டர் வேகத்தில் வீசும் காற்றையும், 6.5 ரிக்டர் அளவு ஏற்படும் நிலநடுக்க அதிர்வையும் தாங்கிக் கொள்ளும் வகையில் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 இந்த அதிசய சிலை 42 மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்டது. உலக நாடுகள் அனைத்தும் இந்தியர்களின் தொழில்நுட்ப அறிவை நினைத்து பிரமித்துப் போய் இருக்கின்றன.
 ஏறக்குறைய 3000 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட இச்சிலை ஆனது இரவு பகலாக 3400 தொழிலாளர்கள் மற்றும் 250 பொறியியல் வல்லுநர்களின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டது.
 இச்சிலையால் இந்தியாவிற்கு பயன் ஒன்றும் இல்லை என ஒரு சாரார் கூறிவருகின்றனர். ஆனால் பிற நாடுகள் இதை மிகக் குறைந்த நாட்களில் கட்டிமுடிக்கப்பட்ட அதிசயம் என்றும் இந்தியர்களின் தொழில்நுட்ப அறிவின் உயர்ந்த சாதனை என்றும் கருதுகின்றன.
 ஏனெனில் இதுவரை சீனா நாட்டில் உள்ள "ஸ்பிரிங் புத்தா' என்ற புத்தர் சிலையே மிக உயரமானதாக கருதப்பட்டது. இந்தியா நிறுவியுள்ள பட்டேலின் சிலைஆனது அச்சிலையை பின்னுக்குத்தள்ளி உயரத்தில் முன்னிலை வகிக்கிறது.மேலும் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவியின் சிலைபோல இரு மடங்கு உயரத்தில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் இச்சிலை க்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கு அடிக்கல் நாட்டியவர் அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த திரு நரேந்திர மோடி ஆவார்.
 இச்சிலை நிறுவப்பட்ட இடத்தில் இருந்து 7 கிலோமீட்டர் சுற்றளவில் எந்த இடத்திலிருந்து நின்று பார்த்தாலும் இச்சிலை தெரியுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இச் சிலையை சுற்றி 17 கிலோமீட்டர் நீளமுள்ள தோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் தங்கும் விடுதி,பொழுதுபோக்கு மையம்,கண்காட்சி மையம், ஆராய்ச்சி நிலையம்,உணவு விடுதி போன்ற சுற்றுலாவிற்கு தேவையான அனைத்து அம்சங்களும் நிறுவப்பட்டுள்ளன.
 ஆசியா கண்டத்தில் உள்ள மலைகள், பீடபூமிகள், பள்ளத்தாக்குகள்,சமவெளிகள், பாலைவனம், ஆறு,நீர்வீழ்ச்சிகள், ஏரி என அத்தனை இயற்கைக் கூறுகளையும் தன்னகத்தே கொண்ட ஒரே நாடு இந்தியா மட்டுமே ஆகும்.அதனால்தான் இந்தியாவை "துணை கண்டம்' என்று அழைக்கிறோம்.
 மாமனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பெரு முயற்சியால் 550 சமஸ்தானங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த இந்திய துணைக்கண்டம் உருவானது. இந்தியாவின் இரும்பு மனிதரின் சிலையை உருவாக்க நாடு முழுவதிலும் மக்களிடம் இருந்து தேவையற்ற இரும்பு சாமான்கள் சேகரிக்கப்பட்டு உருக்கப்பட்டு இச்சிலை உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. (இந்தப் பங்களிப்பிலும் எவ்வளவு ஒற்றுமை!)
 இச்சிலையை உருவாக்க 70,000 டன் கான்கிரீட் கலவை,24 ஆயிரத்து 500 டன் இரும்பு கம்பிகள், 1700 டன் வெண்கலம் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
 இரண்டே ஆண்டுகளில் குஜராத் அரசு இச்சிலைக்காக செலவிட்ட தொகை முழுவதையும் சுற்றுலா வருமானம் மூலமாக திரும்பப் பெற்று விடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.காரணம் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் சிலையை காண வருவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
 கடந்த அக்டோபர் மாதம் 31ம் நாள் இச்சிலையை பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நாட்டுக்கு அர்ப்பணித்தார். "இச்சிலை மட்டும் மட்டும் உயரம் இல்லை. இந்தியர்களின் திறமையும் ஆளுமையும் கூடத்தான்!' என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார். இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்! இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்!
 சிலை வடித்த கலைஞர்!

இக்கலைஞரின் பெயர் ராம் வாஞ்சி சுதார்! இவர் 1925 பிப்ரவரி 19 ஆம் நாள் பிறந்த இவர், மஹாராஷ்டிரா, குண்டூர் டுலியா மாவட்டத்தில் சிறு கிராமத்தில் ஒரு ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தார்! மும்பை ஜே.ஜே. கலைப்பள்ளியில் படித்தார்.
 இந்தியாவின் முக்கிய சிலைகள் இவரால் வடிவமைக்கப்பட்டவை.
 பார்லிமெண்டில் உள்ள, கண்களை மூடி தியானம் செய்யும் வண்ணம் செய்யப்பட்ட காந்தியின் சிலை இவர் வடிவமைத்ததே!
 மத்தியப் பிரதேசத்திலுள்ள காந்திநகர் அணைக்கட்டில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 45 அடி உயர சம்பல் தேவி இரு குழந்தைகளுடன் இருக்கும் சிலை இவரால் செய்யப்பட்டதே!
 ஹரியானாவில் உள்ள "பிரம்ம சரோவர்' என்ற மிகப் பெரிய குளத்தருகே அமைக்கப்பட்ட "கீதோபதேசம்' சிலை கம்பீரமும் எழிலும் மிக்கது!
 இந்தியாவின் முக்கிய 50 சிலைகளும் மற்றும் பல்வேறு வகைப்பட்ட சிலைகளும் இவரால் வடிவமைக்கப்பட்டவையே!
 தற்போது வடிவமைத்த ஒற்றுமையின் சிலை இவரது கலைப்பணியில் முக்கிய முத்திரையைப் பதித்து விட்டது!
 1999 இல் பத்மஸ்ரீ பதக்கம் பெற்றவர் இவர்!
 2016 இல் பத்மபூஷண் பட்டத்தையும் பெற்றார்!
 தொகுப்பு: லக்ஷ்மி பாலசுப்ரமணியன்,
 கடுவெளி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com