புதன்கிழமை 14 நவம்பர் 2018

பாராட்டுப் பாமாலை! - 14: நெகிழிக்கு விடை கொடுப்போம்!

By -அ.கருப்பையா| DIN | Published: 08th September 2018 10:00 AM

உலகம் முழுதும் மக்களெல்லாம் 
ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் 
பலபொருள் "பிளாஸ்டிக்' கில் ஆனவையாம் - அது 
பகையாம் சுற்றுச் சூழலுக்கே!

விழிப்பினை இங்கே ஏற்படுத்தும் 
விளம்பரம் போன்றவை செய்தாலும் 
அழித்திடும் முறை பல சொன்னாலும் 
அனைத்தும் வீணாய்ப் போகிறதாம்!

எஞ்சிய பொருட்களை எறிந்து விட்டால்
நானூறு ஆண்டுகள் மக்காமல்
நஞ்சாய் மாறி உயிர் குடிக்கும்
நடத்திய ஆய்வு சொல்கிறது!

ஒவ்வொரு நொடியும் உலகத்தில் 
தண்ணீர் பாட்டில் இருபதாயிரம் 
வெவ்வேறு வடிவில் விற்கிறதாம்!
வியப்பும், அதிர்ச்சியும் தரும் செய்தி!

இதுபோல் "பிளாஸ்டிக்' ஏராளம்
இங்கே பயன்படத் தொடங்கிவிட்டால்
இறுதியில் மண்ணில் கடல்நீரில்
கலந்தே உயிர்கள் அழிந்திடலாம்!

இத்தனை விவரங்கள் படித்தறிந்தான் 
"ஐஸ்லாந்து மாணவன் அரி ஜான்சன்!'
மும்முரமாக ஆராய்ந்து
முழுதாய் ஒன்றைக் கண்டறிந்தான்!

கடலின் பாசியைக் கொண்டேதான் 
கணக்காய் பாட்டிலை உருவாக்கி
உடலுக்குத் துன்பம் விளைக்காமல்
உள்ளே நன்னீர் நிரப்பிவிட்டான்!

இவற்றில் தண்ணீர் குடித்துவிட்டு
எங்கும் எறிந்திட வேண்டாமாம்!
அவற்றை அனைவரும் அப்படியே 
ஆசையாய் உண்டு மகிழ்ந்திடலாம்!

உண்டபின் வீசும் பாட்டில்களும் 
உருகி தானாய் அழிந்திடுமாம்!
எண்ணிப் பார்த்தால் அதிசயமாம்!
இதனால் உலகம் மகிழ்கிறதாம்!

"நெகிழி' எனப்படும் பிளாஸ்டிக்கை
நித்தம் குறைக்கும் "அரிஜான்சன்' 
தகுதி வாய்ந்த முயற்சிக்கு
தருவோம் அனைவரும் பாராட்டு!

More from the section

அங்கிள் ஆன்டெனா
இறைவனால் இயலாதது!
தென்னை மரம்!
விடுகதைகள்
அரங்கம்: உதவும் உள்ளம்!