அரங்கம்: ஆட்டோ

என்னங்க.  ராத்திரி வரும் போது எப்படியாவது ஐநூறு ரூவா புரட்டிக்கிட்டு வந்திடுங்க.  சுப்புவுக்கு ரொம்ப முடியலே.  குழந்தைங்க டாக்டர் கிட்டே காட்டணும்.
அரங்கம்: ஆட்டோ

காட்சி 1,     

இடம் -  அண்ணாமலை குடி இருக்கும் சிறிய ஓட்டு வீடு  வாசல்,    நேரம் காலை ஆறு மணி,    மாந்தர் -  ஆட்டோ ஓட்டுநர் அண்ணாமலை, அவர் மனைவி அஞ்சுகம், குழந்தை சுப்பு

(அண்ணாமலை ஆட்டோவைத் துடைத்து அன்றைய சவாரிக்குக் கிளம்ப 
யத்தனிக்கிறார்)

அஞ்சலை:  என்னங்க.  ராத்திரி வரும் போது எப்படியாவது ஐநூறு ரூவா புரட்டிக்கிட்டு வந்திடுங்க.  சுப்புவுக்கு ரொம்ப முடியலே.  குழந்தைங்க டாக்டர் கிட்டே காட்டணும்.
அண்ணாமலை:  சரி. இன்னிக்கு நல்ல சவாரி கிடைச்சா பணம் வந்திடும்.
அஞ்சுகம்:  உங்க மோதிரத்தை அடகு வச்சாவது பணத்தோட வாங்க.
அண்ணாமலை:  அது அடகில் தான் இருக்கு தெரியாதா.  சரி பணத்தோட வர்றேன்.
(அண்ணாமலை ஆட்டோவை ஓட்டிச் செல்ல )

காட்சி 2    
இடம் - நெடுஞ்சாலை,   மாந்தர் - அண்ணாமலை, ஒரு பெண் அதிகாரி


(சிறு சிறு சவாரிகள் போகிறார். இரவு ஏழு மணி இருட்டுகிறது.    பணத்தை எண்ண,.... முன்னூறு கூட வரவில்லை.   பெட்ரோல் வேறு போடணுமே என எண்ணும் போது.....வழியில் ஒரு போலீஸ்காரர் கை காட்ட,.... ஆட்டோவை அவர் அருகில் அண்ணாமலை நிறுத்துகிறார்.  அங்கு ஒரு கார் நிற்கிறது.)
ஒரு பெண்: ( காரில் இருந்து இறங்கி)   ஆட்டோகாரரே..... அவசரமா விமான நிலையம் போகணும்..... 
ஆட்டோக்காரர்: இந்த வாகன நெரிசலில் எப்படி போறது?..
பெண்: ( குரலில் பதற்றம்) சீக்கிரம் போங்க. இன்னும் ஒரு மணி நேரத்தில் டெல்லி செல்லும் விமானத்தை நான் பிடிச்சாகணும்.கார் வழியில் ரிப்பேராயிடுச்சி.
அண்ணாமலை: சரிம்மா.  கவலைப் படாதீங்க.  குறுக்கு வழியில் டிராஃபிக் நெரிசல் இல்லாம புகுந்து போயிடலாம்....
பெண்:  ரொம்ப நன்றி. (கான்ஸ்டபிளைப் பார்த்து) நீங்க போங்க நான் போயிடறேன். 
(ஆட்டோ செல்கிறது - அப்போது செல் அடிக்க அண்ணாமலை அதை எடுக்காமல் வண்டியை கவனமாக ஓட்ட...)
பெண்:  "செல் அடிக்குது.  ஆட்டோவை ஓரமா நிறுத்தி பேசுங்க'
அண்ணாமலை:  செல்லை காதில் வைத்தபடி -  "என்னம்மா சொல்றே. முன்னூறு தாம்மா இன்னிக்கு வரும்படி. பெட்ரோல் நூத்தி அம்பதுக்கு போட்டுட்டேன்.   ஏர் போர்ட் போறேன்.  பணம் கிடைக்கும் வந்திடறேன்.நீ சுப்புவை டாக்டரிடம் கூட்டிப் போ.  நான் ஆஸ்பத்திரிக்கு நேரா வந்திடறேன். சரி. பணத்தோட வர்றேன் அஞ்சுகம்..'
(விமான நிலையத்தை அடைந்ததும் அந்த பெண் வேகமாக ஓடிச் செல்கிறார். போகும் போது ஆட்டோ நம்பரை மட்டும் குறித்துக் கொண்டு செல்கிறார்.)
அண்ணாமலை : (மனதிற்குள்) என்னது,.... அந்தஅம்மா பணத்தைக்கூடத் தராம இப்படி ஓடறாங்களே...பாவம்,....என்ன அவசரமோ...
(அவர் போனதும், அவர் அமர்ந்திருந்த சீட் கீழே காலடியில்  ஒரு பெரிய  கவர் கிடப்பதைப் பார்க்கிறார் அண்ணாமலை.  அதை எடுத்துக் கொண்டு ஓடிச் சென்று அந்தப் பெண்ணை விரட்டிச் சென்று)
அண்ணாமலை - அம்மா இந்தக் கவரை விட்டுட்டீங்க....
பெண்:  "அடடே. இது இல்லாம நான் டெல்லி போய் பிரயோசனமில்லியே.  முக்கிய கேஸ் சம்பந்தப்பட்ட பேப்பர் அதில் இருக்கே. நழுவி விழுந்திடுச்சே. நல்ல வேளை செஞ்சீங்க ஆட்டோகார்.  நன்றி. உங்களுக்கு பணம் கொடுக்கணுமில்லே. (கைப்பையைத் திறக்கிறார்)  அடடா, கேஷ் இல்லியே. கார்டில் ஏடிஎம்மில் பணம் எடுத்து தர நேரம் இல்லியே. ஸாரி. நான் போயிட்டு வந்து உங்களுக்கு தர்றேன்.  கோவிக்காதீங்க.'
அண்ணாமலை  -  "சரிம்மா.  நீங்க கவனமா போங்க.'
(பெண் வேகமாக உள்ளே செல்கிறார். அண்ணாமலை முன்னூறு ரூபாயை எடுத்து  வைத்துக்கொண்டு பார்த்தால் ஆட்டோ வில் பெட்ரோல் இல்லை தீர்ந்து விட்டது. அவசரமாக ஆட்டோவை தள்ளியபடி பெட்ரோல் பங்க் போய் பெட்ரோல் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரியை நோக்கி விரைகிறார்.)

காட்சி 3
இடம் - விமான நிலையம்,   மாந்தர்  -  பெண் அதிகாரி

பெண்:  (மனதிற்குள்...)  என்னது,... விமானம் ஒருமணி நேரம் தாமதமாகப் புறப்படுமா....  நல்ல வேளை....(உடனே தன் போனில் யாருக்கோ போன் செய்கிறார்.)....வந்து நான் தான் அகிலா பேசறேன்.. டிஎன் 44 எக்ஸ் 3636 ஆட்டோ நம்பர். ஓனர் யாருன்னு பார்த்து அவர் அட்ரஸூக்கு மூணு பேர் போங்க. கையில் பணம் எடுத்துப் போங்க. நகரின் மிகச் சிறந்த குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அவர் மகனை அழைச்சுப் போய் சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணுங்க. அவர் மனைவி பெயர் அஞ்சுகம். இன்னும் முப்பது நிமிஷத்தில் நான் சொன்னதை முடிச்சு எனக்குத் தகவல் சொல்லணும்,
(விமான நிலைய ஹோட்டலில் அவர் காபி சாப்பிடுகிறார்---பதினைந்து நிமிடத்தில் போன் ஒலிக்கிறது.) 
போன் குரல் மேடம் நீங்க சொன்ன இடத்துக்கு நம்ம ஆளுங்க போய் குழந்தை தாயாரை ஆம்புலன்ஸில் ஏற்றி டாக்டர் வீட்டுக்கு அழைச்சுப் போயிட்டாங்க.  தாயார் அஞ்சுகம் கையில் அஞ்சாயிரம் தந்திருக்கோம்.  நம்ம டிபார்ட்மெண்ட் டாக்டரும் ஒருத்தர் கூட இருக்கார் கவனிச்சுக்க.
பெண்: ஓகே.
(விமானத்தில் ஏறி டெல்லி செல்கிறார்.  அவர்)

காட்சி 4  
இடம் - அண்ணாமலை வீடு.   மாந்தர் - அண்ணாமலை, பக்கத்துவீட்டுக்காரர்


(அண்ணாமலை தன் ஆட்டோ டிரைவர் நண்பர் ஒருவரிடம் கைமாற்று ஐநூறு ரூபாய் வாங்கிக்கொண்டு செல்கிறார்)
பக்கத்து வீட்டுக்காரர்:  அண்ணாமலை..அண்ணாமலை..! ஆம்புலன்ஸ் வந்திச்சுப்பா. ஒரு பெரிய ஜீப் வந்திச்சு.  யாரோ போலீஸ் உயர் அதிகாரியாம். சொல்லி வந்தாங்க.  உன் மகனும் அஞ்சுகமும் அதில் ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்க,.  கவலைப் படாதே.
(அண்ணாமலையின் ஃபோன் ஒலிக்கிறது)
அஞ்சுகம் குரல்போனில்: என்னங்க,.....  போலீஸ் அதிகாரி அம்மா சொல்லி ஆம்புலன்ஸ் வந்திச்சுங்க!..... குளோபல்லோ ஆஸ்பத்திரியில் மூணாவது மாடி, பத்தாம் நம்பர் ரூம்..... குழந்தை நல்லா இருக்கான். எப்படிங்க உங்களுக்கு அவங்களைத் தெரியும்?....
அண்ணாமலை: ம்......வந்து.... தெரியாது.... ஆனா ஒரு மணி நேரத்துக்கு முன் தான் தெரியும்.  சரி நான் அங்கே வர்றேன்.

காட்சி 5
இடம் - ஆட்டோ நிறுத்துமிடம். மாந்தர் -  அண்ணாமலை,   போலீஸ் அதிகாரி டிஜிபி  அகிலா,   

(ஒரு வாரம் கழித்து  போன் ஒலிக்கிறது...)
அண்ணாமலை: யாருங்க நீங்க.  சவாரி வரணுமா எங்கே.?
பெண் குரல்: நான் தான்   டிஜிபி அகிலா பேசறேன். போனவாரம் ஏர்போர்ட் உங்க ஆட்டோவில் வந்தேனே.
அண்ணாமலை:  "வணக்கம்மா'
பெண்: குழந்தை சுப்பு நல்லாயிட்டானா.?  நான் அன்னிக்கு உங்களுக்கு ஆட்டோ பணம் தரவே இல்லியே.  என் கார் நடுவழியில் நின்னுடிச்சி.  அவசரமா போக உங்க ஆட்டோவில் உதவினதுக்கு நன்றி.
அண்ணாமலை: ரொம்ப நன்றிம்மா.  உங்க ஆபீசர் பணம் தந்திட்டார்.  குழந்தை நல்லா இருக்கான். நீங்க நல்லா இருக்கணும்.
அகிலா:  நன்றி. வச்சிடறேன்.
அண்ணாமலை:  (வியந்தபடி) நல்ல அதிகாரிகளும் இருக்காங்க நாட்டில்....

திரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com