கருவூலம்: புவியிடங்காட்டி!

குளோபல் பொஸிஷனிங்க சிஸ்டம் என்பதன் சுருக்கமே ஜி.பி.எஸ்! தமிழில் இது புவியிடங்காட்டி, உலக நிலைப்பாடு அமைப்பு, உலக இடைநிலை உணர்வி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
கருவூலம்: புவியிடங்காட்டி!

(GLOBAL POSITIONING SYSTEM - GPS)

குளோபல் பொஸிஷனிங்க சிஸ்டம் என்பதன் சுருக்கமே ஜி.பி.எஸ்! தமிழில் இது புவியிடங்காட்டி, உலக நிலைப்பாடு அமைப்பு, உலக இடைநிலை உணர்வி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. செயற்கோளைப் பயன்படுத்தி பூமியிலுள்ள எந்த ஒரு இடத்தையும் துல்லியமாகக் காட்டும் கருவிதான் இந்தப் புவியிடம் காட்டி! 

எந்த அளவுக்கு என்றால்....தேவைப்பட்டால் உங்கள் வீட்டு மொட்டைமாடியில் நின்று நீங்கள் வடாம் காயப் போடுவதைக்கூட இந்த ஜி.பி.எஸ்  மூலம் கண்டுபிடித்துவிடலாம்!

அமெரிக்க அரசால் நிர்வகிக்கப்படும் இந்தப் புவியிடங்காட்டி பயன்பாட்டை யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்! இதனால் இது ராணுவப் பயன்பாடு எனும் ஆரம்பநிலையைத் தாண்டி சாதாரண மனிதனின் கைகள் வரை நீண்டிருக்கிறது. 

குறிப்பாக வாகனங்களில் பயணிக்கும்போது இதன் பயன்பாடு மிக அதிகம்! வாகனம் எந்த இடத்தில் இருக்கிறது...., அந்த இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எப்படிப் போக வேண்டும்....அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்...போன்ற விஷயங்களையெல்லாம் மிகத் துல்லியமாக இது சொல்லி விடுகிறது. கண்ணைக் கட்டி காட்டுக்குள் கொண்டு விட்டால்கூட கையில் ஒரு புவியிடங்காட்டி இருந்தால் அங்கிருந்து உங்கள் வீட்டிற்கு நீங்கள் பத்திரமாக வந்து சேரலாம் என்பதுதான் இதிலுள்ள அமர்க்களமான அம்சம்!

இப்போது உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வரும் அமெரிக்காவின் ஜி.பி.எஸ்.., 1973 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த ஜி.பி.எஸ். திறமையாக  இயங்க 24 செயற்கைக் கோள்கள் உதவி செய்கின்றன. இவை தினமும் இரு முறை பூமியின் வட்டப்பாதையில் சுற்றி தேவையான சமிக்ஞைகளை பூமிக்கு அனுப்பி வருகிறது.  ஒரு வேளை இவற்றில் ஏதேனும் ஒன்று பழுதடைந்தால் மாற்றுவதற்கென மூன்று உபரி செயற்கைக் கோள்களும் வானில் தயாராய் இருக்கின்றன. 

1940 களில் செயல்பட்டு வந்த வானொலி அலைகள் சார்ந்த இடங்காட்டியே இந்த ஜி.பி.எஸ். களின் அடிப்படை. லோரான் (கஞதஅச) மற்றும் டெக்கா நாவிகேட்டர் (ஈஉஇஇஅ சஅயஐஎஅபஞத) இரண்டும் அந்த ரேடியோ அலைகள் அடிப்படையிலான புவியிடங்காட்டிகள். லோரான் என்பது லாங் ரேன்ச் நாவிகேட்டர் என்பதன் சுருக்கமாகும். இவை இரண்டாம் உலகப் போரிலேயே பயன்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய புவியிடங்காட்டிக்கான சிந்தனை இரண்டு விஷயங்களிலிருந்து பெறப்பட்டது. ஒன்று பிரைட் வார்ட் விண்டர் பெர்க் என்னும் ஜெர்மன் நாட்டு இயற்பியலாளரின் சிந்தனை. அணு கடிகாரத்தை செயற்கைக் கோள்களில் பொருத்தி ஜெனரல் ரிலேடிவிடியை சோதிக்கும் ஒரு இயற்பியல் சிந்தனையை 1956 ஆம் ஆண்டு இவர் முன் வைத்தார். 

இரண்டாவது சிந்தனை வந்த கதை சுவாரஸ்யமானது! 1957 ஆம் ஆண்டு ரஷ்யா ஸ்புட்னிக் என்னும் செயற்கைக் கோளை வானில் செலுத்தியது. அதன் ரேடியோ அலைகளை கவனித்து வந்த ரிச்சர்ட் க்ரெஷ்னர் தலைமையிலான 
அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இன்னொரு பொறி தட்டியது! அதாவது செயற்கைக் கோளின் இயக்கத்துக்கு ஏற்ப அதன் அலைகளில் வேறுபாடு காணப்பட்டது. அந்த வேறு பாட்டைக்கொண்டு செயற்கைக் கோளின் இருப்பிடத்தை விஞ்ஞானிகள் தெளிவாகக் கணிக்க முடிந்தது. இந்த இரண்டு சிந்தனைகளும் ஒன்று சேர்ந்து உருவானதே இன்றைய ஜி.பி.எஸ்!

செயற்கைக் கோளால் இயங்கிய முதல் ஜி.பி.எஸ். எனும் பெருமையை அமெரிக்கக் கடற்படை உருவாக்கிய "டிரான்ஸிட்' பெறுகிறது. இது வெள்ளோட்டம் விடப்பட்டது. அதே நேரத்தில் அமெரிக்க வான்படையும் மொûஸக் எனும் ஒரு புவியிடங்காட்டியை உருவாக்கிக் கொண்டிருந்தது. 

ஆளாளுக்குத் தனித்தனியே இப்படிக் கண்டுபிடித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று இரண்டு குழுவினரும் முடிவெடுத்தார்கள். அதன்படி 1973 ஆம் ஆண்டு 12 இராணுவ அதிகாரிகள் ஒன்று கூடி ஒருங்கிணைந்த ஒரு புவியிடங்காட்டிக்கான வழி வகைகளைக் குறித்து விவாதித்தார்கள். 

டி.என்.எஸ்.எஸ். எனப்படும் டிஃபன்ஸ் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் (EFFENCE NAVIGATION SATELLITE SYSTEM--DNSS) அங்கே உருவானது. அது பின்னர் நேவ்ஸ்டார் என்றழைக்கப்பட்டு அதன்பின் நேவ்ஸ்டார் ஜி.பி.எஸ். எனறாகி கடைசியில் வெறும் ஜி.பி.எஸ். என்று நிலைபெற்றுவிட்டது. 

செயல்பாடு!

முதலில் இராணுவத்துக்கு மட்டுமே இந்தப் புவியிடங்காட்டி பயன்பட்டு வந்தது. அதன் பின் வீர்யமான அலைவரிசைகள் இராணுவத்தேவைக்கும், வீரியம் குறைந்த அலைவரிசைகள் மக்களுக்கும் என மாறியது. 1983 இல் அமெரிக்க  ஜனாதிபதி ரீகன் இதை தேவையான அளவு விரிவாக்கம் செய்து பொது மக்களுக்கு கட்டுப்பாடில்லாமல் வழங்குவோம் என அறிவித்தார். 

புவியிடங்காட்டி ஒரு இடத்தை கணிக்கவும் அதன் தூரத்தையும் நேரத்தையும் சொல்லவும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட செயற்கைக் கோள்களிலிருந்து அலைகளைப் பெறுகிறது. குறைந்த பட்சம் மூன்று செயற்கைக் கோள்களிலிருந்து பெறப்படும் தகவல்கள் இதற்குத் தேவைப்படுகின்றன. மூன்று கோளங்கள் போல் இருக்கும் இந்தச் சிக்னல்கள் மூன்றும் பூமியில் ஒன்றை ஒன்று வெட்டும் பகுதியே நீங்கள் இருக்கும் இடம்! இதை விஞ்ஞானம் டிரைலேட்டிரேஷன் (பதஐகஅபஉதஅபஐஞச) என்கிறது. 

 இன்னும் எளிமையாகச் சொல்லவேண்டுமானால் செயற்கைக் கோளிலிருந்து பெறப்படும் தகவல்களையும், அது வந்து சேர எடுத்துக்கொள்கின்ற நேரத்தையும் அடிப்படையாகக்கொண்டு இந்த புவியிடங்காட்டி செயல்படுகிறது. 

நமது வாகனம் நகரும் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் செல்ல வேண்டிய தூரத்தை எவ்வளவு நேரத்தில் சென்று சேர்வோம் என்பதையும் இது தெளிவாகச் சொல்லிவிடுகிறது. ஒரு வேளை வேறு எங்கேனும் வழி தவறிச் சென்றுவிட்டாலும் பரவாயில்லை.....எந்த வழியாகப் போனால் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்ல முடியும் என்பதையும் அது சொல்லிவிடுகிறது. தற்போது புவியிடங்காட்டி இல்லாத வாகனமே இல்லை எனும் நிலை உருவாகிவிட்டது!

இந்குப் புவியிடங்காட்டி முழுக்க முழுக்க அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இதை முழுமையாய் சார்ந்திருக்க விரும்பவில்லை. தங்களுக்கு என சொந்தமாய் ஒரு கருவியை கண்டுபிடிக்கும் முனைப்பு அவர்களிடம் இருக்கிறது. 

ரஷ்யா, குளோனாஸ் (GLONASS) எனும் கருவியை இராணுவப் பயன்பாட்டுக்காய் வைத்திருக்கிறது. த ரஷ்யன் குலோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (THE RUSSIAN GLOBAL NAVIGATION SATELLITE SYSTEM) என்பது இதன் விரிவாக்கம். 1976 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிஸ்டம் 1991 இல் உலகம் முழுவதும் கண்காணிக்கும் வகையில் விரிவாக்கப்பட்டது. பின்னர் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம் அதி நவீனப்படுத்தப்பட்டு க்ளோனாஸ்-கே எனும் பெயரில் இயங்கிவருகிறது. 

சீனா அமெரிக்காவைப் போல ஒரு தனியான புவியிடங்காட்டியை உருவாக்க வேண்டும் எனும் முனைப்பில் உள்ளது. "காம்பஸ்' எனும் பெயர் கொண்ட இந்தப் புதிய கருவி  "பீடோ-2' (BEIDOU-2) என்றும் அழைக்கப்படுகிறது.  இதன் முந்தைய வெளியீடான பீடோ-1 2000 ஆம் ஆண்டு முதல்  பயன்பாட்டில் உள்ளது. இதை விரிவாக்கி உலகம் முழுவதும் கண்காணிக்கும் வகையில் உருவாக்குவதே பீடோ - 2 அல்லது கேம்பஸின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐரோப்பியன் யூனியன் தனது பங்குக்கு உருவாக்கிவரும் புவியிடங்காட்டிக்கு கலிலியோ இடங்காட்டி எனப் பெயரிட்டிருக்கிறது. ஜி.என்.எஸ்.எஸ். என்பது, கலிலியோ நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (GALILEO NAVIGATION SATELLITE SYSTEM) என்பதன் சுருக்கம். இது தற்போது பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

இன்றைக்கு புவியிடங்காட்டிகள் மொபைலுக்குள் வந்துவிட்டன. கையிலிருக்கும் செல்ஃபோன் மூலமாகவே நாம் இருக்கும் இடத்தையும், செல்லும் இடத்துக்கான வழியையும் தூரத்தையும் அறிய முடிகிறது.  இது சமூக விரோதிகள், குற்றவாளிகள், கடத்தல்காரர்கள் போன்றவர்களை துரத்திப்பிடிக்க காவல்துறைக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. 

கூகுள் எர்த் போன்ற மென்பொருட்கள் உலகின் எந்தத் தெருவையும் எத்தனை துல்லியமாக வேண்டுமானாலும் பார்க்க வேண்டிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  இவற்றுக்கும் இந்த புவியிடங்காட்டியே அடிப்படை. 

ஒரு சில சட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவும், தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், இதன் துல்லியம் சற்றே குறைத்து செயல்பாட்டுக்கு விடப்பட்டிருக்கிறது. புவியிடங்காட்டியில் ஏகப்பட்ட பயன்கள் இருந்தாலும் இது தனி மனிதனுடைய சுதந்திரத்தை உடைக்கிறது எனும் குற்றச்சாட்டும் எழுகிறது. யாரோ நம்முடைய முதுகுக்குப் பின்னாலிருந்து நம்மை உற்றுப்பார்க்கும் உணர்வை இத்தகைய புவியிடங்காட்டிகள் உருவாக்கியிருப்பதால் ஒரு அச்ச உணர்வு உருவாகியிருக்கிறது. சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி அலுவலகங்கள், தனி நபர்கள் போன்றவைகளை நோட்டமிடலாம் என்ற பயமும் எழாமலில்லை! 

இனி  நாம் ஜி.பி.எஸ். ஸூக்கு பயந்து நடந்து கொள்ளவேண்டும் என்பதே உண்மை!

தொகுப்பு: கோட்டாறு ஆ.கோலப்பன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com