சேவை மனப்பான்மை!

லக்ஷ்மி, 12 ஆம் வகுப்பு முடிந்து விட்டது! விடுமுறையும் விட்டாகிவிட்டது! அடுத்து என்ன செய்யப்போகிறாய்?...
சேவை மனப்பான்மை!

அரங்கம்
 காட்சி - 1,
 இடம் - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
 மாந்தர் - தலைமை ஆசிரியை மற்றும் மாணவிகள்
 
 (12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலை. 12 ஆம் வகுப்பு மாணவிகளிடம் தலைமை ஆசிரியை சாரதா கலந்துரையாடுகிறார்)
 
 தலைமை ஆசிரியை சாரதா : லக்ஷ்மி, 12 ஆம் வகுப்பு முடிந்து விட்டது! விடுமுறையும் விட்டாகிவிட்டது! அடுத்து என்ன செய்யப்போகிறாய்?...
 லக்ஷ்மி : வணக்கம் டீச்சர்!.... நான் கல்லூரியில் சேர விரும்புகிறேன்.... டிகிரி முடிந்தவுடன் ஐ.ஏ.எஸ். பரிட்சை எழுத நினைக்கிறேன்.... அதற்கான ஆயத்தங்களை நான் முன்னாலேயே செய்து கொண்டிருக்கிறேன்.
 த.ஆசிரியை சாரதா : வெரி குட்!.... விஜயா, நீ என்ன செய்ய இருக்கிறாய்?...
 விஜயா: பிளஸ் டூ முடிந்து விடும் நிலையில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர இருக்கிறேன்.... ஆசிரியராக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் டீச்சர்!
 த.ஆ.சாரதா: நல்லது!... வாழ்த்துகள்!...சாந்தி!.... உன் விருப்பம் என்ன?
 சாந்தி : நான் நர்ஸ் ஆக விரும்புகிறேன்.... அதற்கான கல்லூரியில் சேர்வேன்... பி.எஸ்.சி. சயின்ஸ் எடுத்துப் படிப்பேன்.... நர்ஸ் பயிற்சி பெறுவேன்!.... மருத்துவ மனையில் நர்ஸாக வேலை செய்ய வேண்டும்.... இதுதான் என் ஆசை.... மற்றும் திட்டம் டீச்சர்!
 த.ஆ.சாரதா : எவ்வளவோ துறைகள்.... எவ்வளவோ வேலைகள்.... ஏன் நர்ஸ் ஆவது உனக்குப் பிடிக்கிறது? நோயாளிகளிடம் பழக வேண்டுமே....
 சாந்தி : என் அம்மா நான் நர்ஸ் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்.... அதில்தான் மகிழ்ச்சி வரும் என்கிறார்கள்.... நோயாளிகளிடம் அன்பு செலுத்தி, ஆறுதல் தரும் சிறந்த சேவை அது என்கிறார்.... நோயுற்றவர்களின் மனதில் நம்பிக்கையையும் ஏற்படுத்த முடியும்... நோயிலிருந்து விடுபட வைக்கும் புனிதமான தொழில் அது என்கிறார்....மேலும் நோயிலிருந்து விடுபட்ட நோயாளிகளின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணும் அனுபவம் கிடைக்கும் என்கிறார்....எனக்கும் அந்த சேவை மிகவும் பிடிக்கிறது!....
 த.ஆ,சாரதா : எல்லோருக்கும் வாழ்த்துகள்!.... அவரவர்கள் விருப்பப்படி எல்லாம் நடக்கட்டும்.... இறைவன் துணை புரிவார்!
 (கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிவடைகிறது. அவரவர்கள் வீட்டுக்குச் செல்கிறார்கள்.
 
 காட்சி - 2,
 இடம் - சாலை, அதன் இடது புறத்தில் ஒரு கார்,
 மாந்தர் - சாந்தி, ஆம்புலன்ஸ் வேன் ஊழியர்கள்-
 முருகேசன், கேசவன், தமிழரசன்.)
 (சாந்தி அந்த சாலையைக் கடக்க வேண்டும். நின்று கொண்டிருக்கிறாள். ஒரு கார் வந்து பக்கத்தில் நிற்கிறது. அதன் உள்ளே எட்டிப் பார்க்கிறாள். காரை ஓட்டி வந்தவர் மயக்கம் வந்ததால் ஓரமாகக் கரை நிறுத்தி விடுகிறார். அவருக்கு மயக்கம் அதிகமாகிறது! அப்படியே ஸ்டீயரிங்கில் சாய்ந்து விடுகிறார்.....அவரது உடல்அதிகமான வியர்வையில் நனைந்திருக்கிறது.....சாந்தி, தன் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை அவர் மீது தெளிக்கிறாள்... சட்டையைத் தளர்த்தி விடுகிறாள்..... தன் செல்ஃபோனை எடுத்து 108 க்கு ஃபோன் செய்கிறாள். கடவுள் செயல்போல் ஆம்புலன்ஸ் உடனே அருகில் வந்துவிட்டது!... விறுவிறு வென்று ஆம்புலன்ஸிலிருந்து மூவர் -- (முருகேசன்...கேசவன்.... தமிழரசன்) -இறங்கினார்கள்....)
 
 முருகேசன் : என்னம்மா என்ன ஆச்சு?
 சாந்தி : இந்தக் கார்தான் சார்!... யாரோ தெரியலே..... மயக்கம் போலிருக்கு!.... நல்ல காலம்!.... காரை ஓரமாக நிறுத்திவிட்டார்...
 கேசவன் : சரி,... என்ன இது, மூச்சுப் பேச்சையே காணோம்!....தமிழரசன் ஒரு கை பிடி!....ஆளை வண்டியிலே ஏத்திடலாம்....முதலுதவி செஞ்சாகணும்!... ஏம்மா, நீ எங்க கூட ஆஸ்பத்திரி வரைக்கும் வர்றியா?....
 சாந்தி : சரி.
 முருகேசன் : தமிழரசன்!... உனக்குத்தான் கார் ஓட்டத் தெரியுமே!... காரை ஆம்புலன்ஸ் பின்னாலேயே ஓட்டிக்கிட்டு ஆஸ்பத்திரி வரைக்கும் வா!
 தமிழரசன் : சரி...
 (கார் கதவைத் திறந்து மயக்கமுற்றவரை ஆம்புலன்ஸில் ஏற்றுகின்றனர்.)
 முருகேசன் : கேசவன், நீ... அவருக்கு கொஞ்சம் முதலுதவி செய்!... ஆக்ஸிஜன் சிலிண்டர் கூட வண்டியிலே இருக்கு.... பார்த்துக்க... யாரோ பாவம்!.....உடம்பிலே அசைவே இல்லை....உயிர் இருக்கா, இல்லையான்னே தெரியலே....
 கேசவன் : என்னாலே முடிஞ்ச முதலுதவியை நான் செய்யறேன்!... நீங்க வண்டியை ஓட்டுங்க.... ஏம்மா,.... நீங்க அவர் பக்கத்திலே உட்கார்ந்துக்குங்க...
 சாந்தி : சரிங்க....(ஆம்புலன்ஸில் ஏறுகிறாள்...)
 
 காட்சி - 3,
 இடம் - ஆம்புலன்ஸிற்குள்,
 மாந்தர் - சாந்தி, கேசவன், முருகேசன்
 
 (கேசவன் முதலுதவி செய்கிறார்.... உடல் சற்று அசைகிறது..... மயக்கம் சற்று தெளிகிறது....நினைவு வருகிறது...விழித்துப் பார்க்கிறார்.... கேசவனும், முருகேசனும் சந்தோஷமடைகிறார்கள்.... காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது... )
 
 படுத்திருப்பவர் : (மயக்கம் தெளிந்து விழித்துப் பார்த்து....) என்னம்மா இது? நான் காரில் அல்லவா வந்தேன்!....
 சாந்தி : சார்!.... காரில்தான் வந்தீங்க....நீங்க ரொம்ப மயக்க
 மடைஞ்சிட்டீங்க.... இப்போ சரியாயிட்டீங்க.... (கேசவனைக் காட்டி) இவர்தான் முதலுதவி செய்து உங்க உயிரைத் திரும்பக் கொண்டு வந்தார்.... உங்கள் கார் பின்னாலே வந்துகொண்டிருக்கிறது.... நாம் இப்போ அரசு மருத்தவ மனைக்குப் போகிறோம்!...
 கேசவன் : ஆமாம் சார்!.... நான்தான் ஹார்ட் ஃபெயிலியர் ஆகியிருக்குமோன்னு முதலுதவி செய்தேன்....கடவுள் கை விடவில்லை.... பிழைச்சுக்கிட்டீங்க.... இந்தப் பெண் ஃபோன் செய்யலேன்னா எங்களுக்கே தெரிஞ்சிருக்காது!...
 படுத்திருப்பவர் : எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ்ப்பா!.... ஏம்மா!... உனக்கும் ரொம்ப தேங்க்ஸ்மா....
 
 காட்சி - 4,
 இடம் - அரசு மருத்துவ மனை,
 மாந்தர் - டாக்டர் அப்துல், அரசு மருத்துவர்கள், டாக்டர் லாரன்ஸ், முருகேசன், கேசவன், தமிழரசன்
 
 (அரசு மருத்துவ மனையில் வேன் நிற்கிறது....தமிழரசன் ஓட்டிக் கொண்டு வந்த காரும் வந்து சேருகிறது... டாக்டர் அப்துலுடன், அலுவலர்களும் கூட வருகின்றனர்....)
 
 டாக்டர் அப்துல் : ( ஸ்ட்ரெச்சரில் படுத்திருப்பவரைப் பார்த்து... வியப்பும், பதட்டமும் மேலிட....) டாக்டர் லாரன்ஸ்!.... என்ன இது?... உங்களுக்கு என்ன?.... ஏன் இப்படி?....
 (முருகேசன் நடந்தவற்றை விவரிக்கிறார்... சாந்தியை டாக்டர் அப்துல் தட்டிக் கொடுக்கிறார். எல்லோரும் சாந்தியைப் பாராட்டுகின்றனர்... )
 டாக்டர் அப்துல் : இந்த டாக்டர் லாரன்ஸ் எத்தனை உயிர்களை நோயிலிருந்து மீட்டிருக்கிறார்....காப்பாற்றியிருக்கிறார்....
 சாந்தி : டாக்டர் சார்!.... (கேசவனைக் காட்டி) இவங்க இல்லேன்னா இவர் பிழைத்திருப்பது கஷ்டம்.... அதிலும் இவர் முதலுதவி நல்ல பலனைத் தந்தது!....
 முருகேசன் : இந்தப் பொண்ணுதான் ஃபோன் செஞ்சது....
 டாக்டர் அப்துல் : (சாந்தியைப் பார்த்து...) உங்க ஃபோன்தான் அவரைக் காப்பாத்தியிருக்கு.... எத்தனையோ பேரை அவர் காப்பாத்தியிருக்கிறார்.... சொந்தமா மருத்துவமனை நடத்துகிறார்... அந்த டாக்டரையே நீங்க காப்பாத்தியிருக்கீங்க....
 (உடனடியாக டாக்டர் லாரன்ûஸ ஐ,சி.யு. விற்கு எடுத்துச் செல்கிறார்கள்... சிகிச்சை அளிக்கப்படுகிறது... )
 
 டாக்டர் அப்துல் : லாரன்ஸ் சார், நீங்க கொஞ்ச நேரம் எங்க மேற்பார்வையிலே இருந்தால் நல்லது... வீட்டுக்கும் மருத்துவ மனைக்கும் சேதி சொல்லி விடலாம்!.... வீட்டு ஃபோன் நம்பர் தாங்க... மருத்துவ மனை நம்பர் எனக்குத் தெரியும்...
 லாரன்ஸ் : வீட்டுக்கு வேண்டாம்!... வெளியூர் போயிருக்காங்க... பயந்துடுவாங்க....அலறி அடிச்சுக்கிட்டு வந்துடுவாங்க....இப்போ வேணாம்.... அப்புறம் சொல்லிக்கலாம்.... மருத்துவமனைக்குச் சொல்லிடுங்க...
 டாக்டர் அப்துல் : யாராவது தெரிஞ்சவங்க கூட இருந்தால் தேவலை... (சாந்தியைப் பார்த்து) ஏம்மா நீங்க இருக்கீங்களா?
 சாந்தி : சரி டாக்டர்!...
 (வீட்டுக்கு ஃபோன் செய்து நடந்த விஷயங்களைச் சொல்லி தான் வர தாமதமாகும் என்று தெரிவிக்கிறாள். சற்று நேரத்தில் டாக்டர் லாரன்ஸின் மருத்துவமனையிலிருந்து பலர் வந்து பார்க்கின்றனர். அனைவரும் நடந்ததைக் கேள்விப்பட்டு சாந்தியைப் பாராட்டுகின்றனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களையும் பாராட்டுகின்றனர்.... பின் டாக்டரை அவரது காரில் அழைத்துச் செல்கின்றனர்... லாரன்ஸ் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு விடை பெறுகிறார். )
 
 சாந்தி : அப்போ நான் வரேங்க....
 டாக்டர் லாரன்ஸ் : என் கூட என் மருத்துவமனைக்கு வாம்மா!... அங்கேயிருந்து உன்னை நான் உன் வீட்டில் ட்ராப் செய்யச் சொல்றேன்....
 சாந்தி : சரிங்க...
 
 காட்சி - 5,
 இடம் - டாக்டர் லாரன்ஸின் மருத்துவமனை,
 மாந்தர் - மருத்துவமனை ஊழியர்கள்,
 டாக்டர் லாரன்ஸ், சாந்தி.
 
 (டாக்டர் லாரன்ஸ் மருத்துவமனைக்குள் நுழைகிறார். எல்லோரும் அவருக்கு வணக்கம் சொல்லி வரவேற்கின்றனர்)
 டாக்டர் லாரன்ஸ் : சாந்தி உன் உதவுகிற எண்ணம்தான் என்னைக் காப்பாற்றியது!.... உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?.... கேளம்மா!.....
 சாந்தி : நான் ப்ளஸ் டூ பரிட்சை எழுதியிருக்கிறேன்....நர்ஸ் ஆக விரும்புகிறேன்.... என் அம்மாவும் அதைத்தான் விரும்புகிறார்....
 டாக்டர் : நர்ஸ் என்ன? உன்னை டாக்டராகவே ஆக்குகிறேன்!....
 சாந்தி : வேண்டாம்!.... என் அம்மா என்னை நர்ஸ் ஆகணும்தான் விரும்பறாங்க.... அதற்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா உங்களை நான் கேட்கிறேன்...இப்போ விடை கொடுங்க....
 (லாரன்ஸ் அந்தப் பெண்ணின் சேவை மனப்பான்மையைக் கண்டு வியப்பும், மகிழ்ச்சியும், அடைகிறார்...)
 (திரை)
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com