சிறுவர்மணி

அரங்கம்: வடை

என்.எஸ்.வி.குருமூர்த்தி

காட்சி  - 1   
இடம் -  வீதியிலுள்ள பெரு நகர சினிமா ஸ்டுடியோ அருகில்,    மாந்தர் -  கிராமத்து இளைஞன் பழனி, டீக்கடை முதலாளி சண்முகம் 

பழனி : சார் ரெண்டு வடையும் டீயும் கொடுங்க.
(டீக்கடைக் கார  சண்முகம் வடையை ஒரு செய்தித் தாளில் வைத்துத் தருகிறார்)

சண்முகம் : தம்பி, வடையைச்சாப்பிடுங்க.. அப்புறம் டீ தர்றேன்.
(பழனி வடையில் சேர்ந்துள்ள எண்ணெயை தாளில் அமுக்கி எடுத்து விட்டுச் சாப்பிடுகிறான்)

பழனி : ஐயா வடை ருசியா இருக்கு....  ஆனா, நான் ஒண்ணு சொல்லலாமா?...
சண்முகம் : நல்லா சொல்லுப்பா.....இந்தா டீ!...

(பழனி டீயை உறிஞ்சியபடி - வடையில் எண்ணெய் குடிக்காம இருக்க ஒரு வழி இருக்கு.. அதே சமயம் மொறு மொறுப்பு குறையாமல் இருக்கவும் செய்யலாம்)

சண்முகம் : அப்படியா!..... உனக்கு எப்படி தெரியும்?...
பழனி : கிராமத்தில் டீக் கடை வச்சிருக்கோம்.... அம்மா வடை போடுவாங்க!.... நான் ஒத்தாசை செய்வேன்.....  அப்பா டீ மாஸ்டர்!....
சண்முகம் : அப்புறம் இங்கே எதுக்குப்பா வந்தே?....
பழனி : சினிமா சான்ஸ் வாங்கத்தான்..
சண்முகம் : நல்ல கதை!...... இருக்கிற ஆளுங்களுக்கே இங்கே வேலை இல்லாம தவிக்கிறாங்க..... சினிமா தொழில் நலிவடைஞ்சு வருது..... ஸ்மார்ட் ஃபோன் வந்த துக்குப் பின்  தியேட்டருக்கு யாரு போறாங்க?....,,  எல்லாம், "கையில் தெரியுது பார் கைலாசம்"ன்னு உள்ளங்கையில் பார்த்திடறாங்க.
பழனி : ஐயா.. அந்த ஃபோனிலும் பார்க்க சினிமா வேணுமில்லையா,..... வெளி நாடுகளில் படங்களுக்கு நல்ல கிராக்கி இருக்கு.  நல்ல படங்களை அந்தந்த நாட்டு மொழிகளில் டப்பிங் செய்து சீனா, கொரியா, ஜப்பான் ஆப்பிரிக்க நாடுகளில் வெளியிடறாங்க..... சவுதியிலும் தியேட்டர் வந்தாச்சு!...,  நம் நாட்டுக்குஅன்னியச் செலாவணி ஈட்டுவதில் சினிமாவின் பங்கும் கணிசமா இருக்குங்க ஐயா.
சண்முகம் : சரிப்பா!.... வடை சுட எனக்கே ஆளு வேணும்!....  என் வீட்டில் தங்கிக்க.  நல்ல விதமா எப்படி வடை சுடறதுன்னு சொல்லு!.....
(மாலை கடை விட்டு பழனியை வீட்டுக்கு அழைத்துப் போகிறார் சண்முகம்.)

காட்சி - 2
இடம்  - சண்முகத்தின் சிறிய போர்ஷன்,   மாந்தர் - சண்முகம், அவர் மனைவி வள்ளி, பழனி

(கிரைண்டரில் உளுத்தம் மாவு அரைக்க வள்ளி ஊற வைத்த உளுந்தை எடுக்க...)

பழனி : அம்மா,  உளுந்தை கிரைண்டரில் போடுமுன் அதை ஒரு துணியில் கொட்டி தண்ணீர் இல்லாம வடிந்ததும் கொஞ்சம் கொஞ்சமா போட்டு தண்ணீரை இடைவெளி  விட்டு  தெளிச்சு அறைங்க....
வள்ளி : சரிப்பா!.... நீ ஒரு தரம் எப்படின்னு அரைச்சுக் காட்டு!....
சண்முகம் :  வள்ளி,  தம்பிக்கு கொஞ்சம் காபி கொடு...
(பழனி மாவை அறைத்து பந்து போல எடுக்க மாவு உப்பி காட்சியளிக்கிறது)

பழனி : இப்போ இதில் கொஞ்சம் சோள மாவு இல்லே அரிசி மாவு இருந்தா கொஞ்சம் போடுங்க!...
வள்ளி : அது எதுக்கு?
பழனி : சுடுமுன் அந்த மாவைப் போட்டு அப்பப்போ பிசைஞ்ச்சுகிட்டா மொறு மொறு என இருக்கும்.. துணி மாதிரி ஆகாது!....
சண்முகம் வள்ளி இருவரும் : அப்படியா!...
பழனி : கொஞ்சம் பெருங்காயம், சின்ன வெங்காயம்  துளி இஞ்சி, பச்சை மிளகாய் கருவேப்பிலை மிக்ஸியில் அடிச்சு பசையா தாங்க.. மாவுடன் சேர்க்கணும்!....
(வள்ளி அப்படி செய்து தர   மாவுடன் கலக்கிறான் பழனி.  பின் அரிசி மாவை மேலாகத் தூவி கலக்கிறான்..அளவாக கல்  உப்பையும் இடுகிறான்)

பழனி : அம்மா, இப்போ இரண்டு எண்ணெய் சட்டிகள் வச்சு ஒவ்வொன்றிலும் ஒரு லிட்டர் விடுங்க.  ஒரு சட்டி எண்ணெய் நல்லா காயணும்!.... சூடாக புகை வர...... மற்றது மிதமாக வழக்கம் போல சூடாகணும்...வடையைக் கையால் தட்டி விரலால் துளையிட்டு மிதச் சூட்டு சட்டியில் பத்து வடைகளைப் போட்டு ஒரு கம்பியால் புரட்டி புரட்டி வேக விடுகிறான்.  பின் சற்று நிறம் மாறிய வடைகளை வெளியே எடுக்க...)
வள்ளி : தம்பி,  நல்லா வேக விடுப்பா!.....வேகாட்டி உள்ளே மாவா இருக்கும்!...
பழனி : இருங்க,.....  இப்போ இதை இரண்டாவது சட்டியில் போடப் போறேன்...
(அதில் வடைகள் நல்ல சூட்டில் உள்ள புகை வரும் எண்ணெயில்  சிறிதே வேக வைத்து தங்க நிறத்தில் முறுகலாக வெளிப்புறம் மாறியதும்வடைகளை அள்ளி எடுத்து எண்ணெய் வடியும் சட்டியில் வைக்கிறான். ஒரு வடையை சண்முகத்திடமும் வள்ளியிடமும் நீட்டி – ருசி எப்படி இருக்குன்னு கேட்க....
--இருவரும் தின்று பார்த்து--...)

 சண்முகம் : அட டே!  பார்க்கவேஅழகா  இருக்கே!.... என்ன ருசி, மொறு மொறுப்பு !... பஞ்சு பஞ்சா !.... கையில் எண்ணெய் ஒட்டவே இல்லையே!  அப்படியே நான் சுட்டு எடுக்கிறேன்..... கடைக்குப் போகலாம்.

காட்சி - 3
இடம் - சினிமா ஸ்டுடியோ வீதி டீ க்கடை,   
மாந்தர் - சண்முகம், சினிமாஸ்டுடியோ சிப்பந்தி, பழனி

(வடையை வாங்குபவர்கள் ருசியாக இருப்பதை அறிந்து மறுபடி ஒன்று வாங்குகின்றனர்)

அப்போது ஒரு  ஸ்டுடியோ சிப்பந்தி : டீக்கடைக் கார அண்ணே!  டைரக்டர் சங்கரதேவன் இருபது வடை வாங்கி வரச் சொன்னார்.  சூடா இருக்குமா'
சண்முகம் :  இப்போதாங்க போட்டு வருது வீட்டில் இருந்து....
(பார்சல் கட்டித் தர வாங்கிப் போகிறார் சிப்பந்தி....அரை மணி கழித்து அதே சிப்பந்தி வருகிறார்.)

சிப்பந்தி : டீக்கடைக் கார அண்ணே.. எப்பவும் போல வடை இல்லியே
சண்முகம் : என்ன சொல்றீங்கய....
சிப்பந்தி : எப்பவும் கை பூரா எண்ணெய் பிசு பிசுக்கும்!... வாங்கிப் போன பத்து நிமிஷத்தில் துணி மாதிரி ஆயிடும்!...  இப்போ எண்ணெய் ஒட்டலே!... என்ன மணம்!... என்ன ருசி!.... பஞ்சு பஞ்சா.. இன்னும்  பத்து வடை வாங்கி வரச்சொன்னார் சங்கரதேவன்.  இது அவர் வீட்டுக்கு!....  நல்லா கட்டிக் குடுங்க!....
(சண்முகம் கட்டித் தருகிறார்)

காட்சி - 4
இடம் - டீக்கடை,   காலம் - காலை பதினோரு மணி,   மாந்தர் -  இயக்குனர் சங்கர தேவன், சண்முகம், பழனி,

(ஒரு கார் கடை ஓரம் வந்து நிற்க அதில் இருந்து இயக்குனர் சங்கர தேவன் இறங்க)
சண்முகம் : ஐயா,  நீங்களா வாங்க வாங்க. சொல்லி இருந்தா நானே வருவேனே....
சங்கர தேவன் : இல்லே,  ஒண்ணு தெரிஞ்சுக்கத்தான் வந்தேன்!....  ரொம்ப வருஷமா உங்க கடையில் டீ வடை வாங்கி வரச் சொல்லுவேன்.  இப்போ மூணு மாசமா வடை ரொம்ப டேஸ்ட்டா இருக்கு.  டீயும் வாசனையா குடிக்க ஆசையா இருக்கு.  என்ன மந்திரம் செஞ்சீங்க?....
சண்முகம் : மந்திரம் செஞ்சதெல்லாம்  இந்த புது கிராமத்துப் பையன் பழனிதான் சார். சினிமா சான்ஸ் தேடி வந்தவன் இங்கே செட்டில் ஆயிட்டான்!.....
(பழனியின் விவரங்களைச் சொல்ல  சங்கர தேவன் பழனியை ஒரு கணம் உற்றுப் பார்த்து விட்டு...)  

சங்கர தேவன் : சண்முகம்,  இந்தப் பழனியை  சமையலுக்கு வச்சிக்கலாம்ன்னு தோணுது!....  அடிக்கடி வெளியூர் படபிடிப்புக்கு போறோம். அங்கே சமையல் எனக்கு தனியா நடக்கும்.  பழைய ஆள் ஒருத்தர் ரொம்ப வயசாயி நின்னுட்டார். இவரை ரொம்பப  பிடிச்சிருக்கு,. உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா அனுப்பறீங்களா..?
சண்முகம் : ஐயா நல்லா அழைச்சுப் போங்க....  பழனி  வாப்பா!... சார் கூட போ!.... நல்ல காலம் பொறந்திட்டு உனக்கு!
(காரில் ஏற்றி பழனியை அழைத்துச் செல்கிறார் சங்கர தேவன்....---காலம் வேகமாகச் சுழல்கிறது---)

காட்சி - 5
இடம் - சண்முகத்தின் வீடு, மாந்தர் - சண்முகம், வள்ளி பழனி

(ஒரு ஆட்டோ வந்து நிற்கிறது....அதிலிருந்து பழனி இறங்கி ஒரு பெரிய பெட்டியுடன் உள்ளே போகிறான்.)

வள்ளி :  என்னங்க,  நம்ம பழனி தம்பி வந்திருக்குங்க!
சண்முகம் : பழனி, வாப்பா! செளரியமா..... இத்தனை நாளா பார்க்க வே வரலியே....
(ஒரு பெரிய தட்டில் பழம் புடவை வேஷ்டி இனிப்புகளை வைத்து அவர் காலில் விழுந்து வணங்குகிறான் பழனி)

பழனி : ஐயா!.... கிராமத்தில் வீடு புதுசா கட்டி கிரகப் பிரவேசம் பண்றேன்!.... இயக்குனர் சங்கரதேவன் ஐயா தான் திறக்கிறார்.  அக்காவும் நீங்களும் அவசியம் வரணும்!
இருவரும் : ரொம்ப சந்தோஷம்! கண்டிப்பா வர்றோம்!....
(பழனி போனதும் வேஷ்டி சட்டை பெட்டியைத் திறக்க அதில் இருபதாயிரம் ரொக்கமும்  குரு காணிக்கை என ஒரு சீட்டும் இருக்கிறது.....அதைப் பார்த்து வள்ளி சண்முகம் இருவர்  கண்ணிலும் நீர் துளிர்க்கிறது.)
சண்முகம் : குரு பட்டம் நாமதான் அவனுக்குக் கொடுக்கணும்...என்ன நுணுக்கம்!.... என்ன சுறுசுறுப்பு!.... இப்போ நடக்கிற நல்ல வியாபாரத்துக்கு அவன்தானே காரணம்!.... கொஞ்ச நாள் ஆதரிச்சதுக்கு நமக்கு "குரு' பட்டமும் கொடுத்து, காணிக்கையும் தந்திருக்கான்.... கண்டிப்பா கிரகப் பிரவேசத்துக்குப் போகணும்!
வள்ளி : ஆமாங்க.... தங்கமான  குணம்! கண்டிப்பா போகணுங்க!... 

- (திரை) -

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT