கருவூலம்: மிக நீளமான "போகிபீல்' பாலம்!

"போகிபீல் பாலம்' என்று அழைக்கப்படும் இந்தப் பாலம் நாட்டிலேயே மிக நீளமான ரெயில்  மற்றும் சாலைப் போக்குவரத்துப்பாலம்!
கருவூலம்: மிக நீளமான "போகிபீல்' பாலம்!

"போகிபீல் பாலம்' என்று அழைக்கப்படும் இந்தப் பாலம் நாட்டிலேயே மிக நீளமான ரெயில்  மற்றும் சாலைப் போக்குவரத்துப்பாலம்! அது மட்டுமின்றி பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட நான்காவது ரெயில் மற்றும் சாலை பாலம் ஆகும்!

அடுக்கு மாடி போல் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் மேற்புறம் தரை வழிப் போக்குவரத்தும், கீழே ரயில்களும் செல்லும்படியாக அமைக்கப்பட்டுள்ளது! 

பாலத்தின் நீளம் 4.94 கி.மீ. ஆகும். பாலத்தைத் தாங்கும் வகையில் 42 உறுதியான தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

கீழ்ப்பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்காக இரட்டை அகல ரெயில் பாதை போடப்பட்டுள்ளது. 

மேலேயுள்ள தளத்தில் சாலைப் போக்குவரத்துக்காக மூன்று வழிச்சாலை போடப்பட்டுள்ளது. 

இந்த சாலையால், திப்ரூகருக்கும், அருணாசல பிரதேச தலைநகர் இடா நகருக்கும் இடையிலான சாலை வழி தூரம் 150 கி.மீ. குறையும். அதே சமயத்தில் ரயில் வழி தூரம் 705 கி.மீ. குறையும். பயண நேரம் 10 மணி நேரம் குறையும்.

திப்ரூகரில்தான் பெரிய ஆஸ்பத்திரிகள், மருத்துவக் கல்லூரிகள், விமான நிலையம் ஆகியவை அமைந்துள்ளதால், அங்கு செல்லும் மக்களுக்கு இப்பாலம் மிக உதவியாக இருக்கும்.

இந்தியா - சீனா எல்லையில் 75 சதவீதப் பகுதி அருணாசல பிரதேசத்தில்தான் உள்ளது. அருணாசல பிரதேசம் அருகே இப்பாலம் அமைந்திருப்பதால் அங்கு எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு போர் தளவாடங்கள் கொண்டு செல்ல இப்பாலம் பெரிதும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. 

ராணுவ வீரர்களை விரைவாக வந்து சேருவதற்கும் பயன்படும். அவசர காலத்தில் இந்தச் சாலையில் போர் விமானங்கள் கூடத் தரையிறங்க முடியும்! இப்பாலம் தேசப் பாதுகாப்புக்குப் பெரிதும் துணை புரியும் என ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்!

மிகப் பெரிய ரயில்வே பாலம்!

உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் இந்தியாவில் அமைய இருக்கிறது. இந்த ரயில் பாலம் மலைகளுக்கு இடையே ஆர்பரித்து ஓடும் ஆற்றின் மேலே பிரம்மாண்டமான வளைவுகளுடன் உருவாகி வருகிறது! 

இந்த ரயில்வே பாலம் காஷமீரில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தின் பெயர் "சேனாப் பாலம்' ஆகும்! 

காஷ்மீரின் "கவரி'  - "பத்கல்'  பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இப்பாலம் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் தரை மட்டத்திலிருந்து 359 மீட்டர் உயரத்தில் 1315 மீட்டர் நீளத்தில் கட்டப்படுகிறது. இந்தப் பாலம் கட்டப்படும் பகுதி அடிக்கடி நில நடுக்கத்தால் பாதிக்கப்படும் பகுதியாகும்.  மற்றும் இப்பகுதியில் சில நேரங்களில் மணிக்கு நூறு கிலே மீட்டர் வேகத்தில் பலமாகக் காற்று வீசும்! எனவே இயற்கைச் சீற்றங்களால் பாலம் பாதிக்கப்படாமல் இருக்க அதி நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இப்பாலத்தைக் கட்டுகின்றனர்! 

இருமலைகளுக்கு இடையே 480 மீட்டர் அகலத்தில் இரும்பு வளைவுகளுடன் பாலம் உருவாக்கப்படுகிறது. டில்லியில் உள்ள குதுப் மினாரைவிட இந்தப் பாலம் ஐந்து மடங்கு உயரம் அதிகமாயிருக்கும்! உலகிலேயே அதிக உயரமான பாலமாகக் கருதப்படும் பிரான்ஸ் நாட்டின் மில்லவ் பாலத்தைவிட இது 17 மீட்டர் உயரம் அதிகம்!

உலகின் அதி வேகப் போக்குவரத்துத் தொழில் நுட்பங்கள்!

புல்லட் இரயில், பறக்கும் டாக்ஸிகள், ஹைபர் லூப், சூப்பர்சானிக் விமானங்கள், டிரைவரில்லா டாக்ஸிகள் போன்றவை அடங்கிய போக்குவரத்துப் புரட்சியை இந்த உலகம் சீக்கிரமாக சந்திக்க இருக்கிறது. பயண நேரத்தை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு குறைக்க முடியுமா?.... என்னும் கேள்விக்கு பதில் சொல்லும் தொழில் நுட்பம் ஹைபர் லூப்!

ஹைபர் லூப்!

காற்றின் அழுத்தம் மிகக் குறைவாக உள்ள ஒரு கண்ணாடிக் குழாயில் அமர்ந்து மணிக்கு 1500 கிலோ மீட்டருக்கும் மேலாக, அதிவேகமாகப் பயணிக்கும் போக்குவரத்துத் தொழில் நுட்பமே ஹைபர் லூப்! இத்தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் "எலன் மாக்ஸ்!'

பூமிக்கு மேலே பாலத்திலோ அல்லது பூமிக்கு உள்ளே குழாய் போன்ற சுரங்கம் அமைத்தோ இந்தப் போக்குவரத்தை நடத்தலாம்!

பயணிகள் அமர்ந்து பயணிக்க உதவும் இருக்கைகள் அடங்கிய கண்ணாடிக் குழாய்க்கு  "கேப்ஸ்யூல்கள்' என்று பெயர்.  இந்த பயணிகள் அமர்ந்திருக்கும் கண்ணாடிக் குழாய் கேப்ஸ்யூல்கள் ஒரு மிக நீண்ட ஓடு பாதைக் குழாயின் உள்ளே இருக்கும்! கேப்ஸ்யூலுக்கும் வெளிக்குழாய்க்கும் இடையில் காந்தப் புலம் உருவாக்கப்படும். அதனால் ஏற்படும் காந்த விசையின் காரணமாக கண்ணாடிக்குழாய் காப்ஸ்யூல் நதரும். பொதுவாக வாகனம் ஒன்று நகரும்போது  காற்றினால் உராய்வு ஏற்படும். அதனால் வாகனத்தின் வேகம் குறையும்.  இந்த உராய்வைகக் குறைக்கவும், வாகனத்தின் வேகத்தை அதிகரிக்கவும் ஒரு அருமையான யுக்தியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 
அதாவது ஹைபர் லூப் வாகனத்தின் வேகத்தை அதிகரிக்க ஏதுவாக குழாயின் முன் பகுதியில் உள்ள காற்றை உறிஞ்சி பின்னுக்குத் தள்ளும் கம்ப்ரஸர் அமைப்பும் இதில் இருக்கும்! 

எரிபொருள் தேவையில்லை!

இந்த வாகனம் எரிபொருள் ஏதுமின்றி குழாய்களின் மேலே பதிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தகடுகளில் இருந்து கிடைக்கும் மாசற்ற எரிசக்தியின் மூலம் இயங்கும்! இது 2013-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் சோதிக்கப்பட்டது. அந்த ஹைபர் லூப் கண்ணாடிக் குழாயில் ஐந்து பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். தற்போது கேப்ஸ்யூல் கண்ணாடிக் குழாய்களை அதிக எண்ணிக்கையில் மனிதர்கள் பயணம் செய்யும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்! 

சீனாவில்....

இந்த ஹைபர்லூப் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி "மின்னல் வேக ரயிலை' உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது! இந்த மின்னல் வேக ரயிலை வெள்ளோட்டம் விடுவதற்கு சீனா ஆர்வமாக இருக்கிறது. இந்த ரயில் சீனாவின் தென்மேற்கு "சிச்சுவான்' மாகாணத்தில் இயக்கப்பட உள்ளது! வேகம் என்ன என்றுதானே கேட்கிறீர்கள்?.... மணிக்கு சுமார் 1500 கிலோ மீட்டர்கள்! 

இந்தியாவில்!

முதல் முறையாக ஹைபர் லூப் போக்குவரத்து ஆந்திர மாநில தலைநகர் அமராவதிக்கும், விஜயவாடா நகருக்கும் (35 கி.மீ. தொலைவு) அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த இரு நகரங்களுக்கு இடையேயான ஒரு மணி நேரப் பயணம் வெறும் ஐந்து நிமிடப் பயணமாகக் குறைகிறது. )

அதாவது சென்னையிலிருக்கும் ஒருவர், மதுரையில் இருக்கும் ஒருவரை, ""அரை மணி நேரத்தில் வந்து சேர்!.... டிபன் ரெடி !.... என்று கூப்பிடலாம்!...'' ஆனால் இப்போது ரயிலில் ஜன்னல் ஓர சீட்டுகளில் காடுகளையும், மலைகளையும், வயல்களையும் வேடிக்கை பார்த்து ரசித்துக்க்கொண்டே செல்லும் அனுபவம் அதில் கிடைக்குமா?.... 

மேலும் சில தகவல்கள்!

உலகின் வேகமான பயண மார்க்கங்கள்!
சூப்பர் சானிக் விமானம் மணிக்கு    2179 கி.மீ. 
ஹைபர் லூப் மணிக்கு    1200 கி.மீ
(இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.)
ஜெட் விமானம் மணிக்கு    900 கி.மீ. 
ஃபுக்ஸிங் புல்லட் இரயில் மணிக்கு    350 கி.மீ. 
மாக்லெவ் புல்லட் இரயில் பிரான்ஸ் மணிக்கு    320 கி.மீ.

இந்தியாவின் முதல் 14 வழிச்சாலை

இந்தியாவின் முதல் 14 வழிச்சாலை தில்லி - மீரட் பாதையில் அமையவிருக்கிறது. இதன் தூரம் 149 கி.மீ. இத்தூரத்தில், முதல் 27.74 கி.மீ. வரை 14 வழிச் சாலையாகவும், எஞ்சிய தொலைவு ஆறு வழிச் சாலையாகவும் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான மதிப்பீடு 10,000 கோடி ரூபாய். 

இத்திட்டத்திற்கு 2015 அடிக்கல் நாட்டப்பட்டது. 14 வழிச் சாலை அமையும் 27.74 கிலோ மீட்டரில் தற்போது, முதல் 9 கி.மீ. வரையிலான பணிகள் நிறைவடைந்து விட்டன. உத்திரப் பிரதேசத்தில் உள்ள "பக்பத்'  என்ன இடத்தில் பிரதமர் இச்சாலையைத் திறந்து வைத்தார்.

சூரிய ஒளியால் இயங்கும் விளக்குகள் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலையின் இருபுறமும் ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியிலும் மழை நீர் சேமிப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன! இதன் மூலம் தில்லி - மீரட் இடையேயான பயண நேரம் வெகுவாகக் குறையும். தில்லியின் மாசு 27 சதவீதமும், போக்குவரத்து நெரிசல் 41 சதவீதமும் குறையும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை கூறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com