இந்த வாரம் கலாரசிகன்

நாளை மறுநாள் மகாகவி பாரதியாரின் 136-ஆவது பிறந்த நாள். தமிழுக்குப் புது வெளிச்சம் பாய்ச்சிய அமரர் பாரதியின் பிறந்த நாளை அவர் பிறந்த எட்டயபுரத்தில் விமரிசையாகக் கொண்டாட வேண்டும்
இந்த வாரம் கலாரசிகன்

நாளை மறுநாள் மகாகவி பாரதியாரின் 136-ஆவது பிறந்த நாள். தமிழுக்குப் புது வெளிச்சம் பாய்ச்சிய அமரர் பாரதியின் பிறந்த நாளை அவர் பிறந்த எட்டயபுரத்தில் விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்கிற கனவு நனவாகிறது. வரும் டிசம்பர் 11-ஆம் தேதி எட்டயபுரம் மட்டுமல்ல, தூத்துக்குடி மாவட்டமே விழாக்கோலம் பூண இருக்கிறது.
 லண்டன் மாநகருக்குப் போய் ஷேக்ஸ்பியரின் நினைவிடத்தையும், நமது அண்டை மாநிலமான கேரளத்துக்குப் போய் மலையாள மொழியின் பிதாமகரான துஞ்சன் எழுத்தச்சன் பிறந்த துஞ்சன்பறம்பில் அமைந்த அவரது நினைவிடத்தையும் பார்த்தவர்களுக்குத் தெரியும் தமிழுக்குப் புத்தொளி பாய்ச்சிய பாரதிக்கு நாம் உகந்த மரியாதையைத் தரவில்லை என்பது. தியாகராஜ சுவாமிகளுக்கு திருவையாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவைப் போல, பாரதியின் பிறந்த நாளை எட்டயபுரத்தில் விழாவெடுத்துக் கொண்டாட நாம் தவறிவிட்டோம்.
 எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழன்பர்கள் மனமுவந்து அன்பளிப்பு வழங்கி பாரதிக்கு மணி மண்டபம் எழுப்பிப் பெருமை சேர்த்தார்கள். ஆசிரியர் கல்கி மட்டுமல்லாமல், தோழர் ஜீவாவும், "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் , திரிலோக சீதாராமும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பாரதியின் புகழ்பாடி அந்த மகாகவிஞனின் நினைவைப் போற்றிப் பாதுகாத்தனர். அவர்கள் மட்டுமா, கவியரசு கண்ணதாசனும், தொ.மு.சி.ரகுநாதனும், ஜெயகாந்தனும் நவீன தமிழ் இலக்கியத்தின் பிதாமகன் என்று அவரது நினைவைப் போற்றித் துதித்தனர்.
 அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்க உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு, தான் வாழ்ந்த காலமெல்லாம், பாரதியின் பிறந்த நாளன்று எட்டயபுரம் சென்று மகா கவிஞனுக்கு மரியாதை செலுத்துவதைக் கடமையாகக் கொண்டிருந்தார் "கலைமாமணி' விக்கிரமன். அவருக்குத் துணையாக இருந்து உதவி புரிந்து வந்தார் "புதிய பார்வை' ம.நடராசன். அவர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், உரத்த சிந்தனை அமைப்பும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் போலவே பாரதியின் பிறந்த நாளன்று எட்டயபுரத்துக்குச் சென்று மரியாதை செலுத்தும் வழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன.
 இவை எல்லாம் இருந்தாலும் கூட, ஷேக்ஸ்பியருக்கு லண்டனிலும், துஞ்சன் எழுத்தச்சனுக்கு துஞ்சன்பறம்பிலும் கிடைக்கும் மரியாதை, அவர்களுக்கு எள்ளளவும் குறையாத வீரியமும் வேகமும் கொண்ட கவிதைக்குச் சொந்தக்காரரான நமது முண்டாசுக் கவிஞனுக்குக் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் என்னைப் போலவே பாரதியின் பிறந்த நாளுக்கு எட்டயபுரத்தில் கூடும் ஒவ்வொரு பாரதி அன்பருக்கும் இருந்து வந்தது. அந்த ஏக்கத்துக்கு இந்த ஆண்டு விடை கிடைத்துள்ளது. ஆக்கபூர்வமான மக்கள் விழாவாகப் பாரதியின் பிறந்த தினம் எட்டயபுரத்தில் கொண்டாடப்பட இருக்கிறது.
 மகாகவி பாரதிக்கு எட்டயபுரத்தில் விழா எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோதே, அந்த விழாவில் தலைசிறந்த மூத்த பாரதி ஆய்வாளர் ஒருவரை விருது வழங்கி கெüரவிக்க வேண்டும் என்கிற பேராவல் எழுந்தது. இதற்கு எங்களது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான மனோஜ்குமார் சொந்தாலியாவிடம் அனுமதி கோரியபோது, அவர் ஒருபடி மேலே போய், ""விருது வழங்கினால் மட்டும் போதாது. தினமணி நாளிதழின் சார்பில் ஆண்டு தோறும் ஓர் அறிஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தபோது, அவரது பெருந்தன்மையைப் பார்த்து பிரம்மிப்பில் சமைந்தேன்.
 பிறந்த நாளன்று எட்டயபுரத்தில் பாரதிக்கு விழா எடுப்பது என்றும், தலைசிறந்த பாரதி ஆய்வாளர் ஒருவரை "மகாகவி பாரதியார்' விருது வழங்கி சிறப்பிப்பது என்றும், முடிவெடுத்தபோது, அந்த விருதுக்கு முதற் தகுதி பெறுபவர் பெரியவர் சீனி.விசுவநாதன்தான் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கவில்லை. "சங்க இலக்கியத்துக்கு "தமிழ்த் தாத்தா' உ.வே.சா.என்றால், பாரதி இலக்கியத்துக்கு சீனி.விசுவநாதன்'' என்று கவியரசு கண்ணதாசனால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வாளர். அவருக்கு விருது வழங்கி, கெüரவிக்கப் போவது தமிழக ஆளுநர் என்பது விருதின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.
 காலை 9 மணிக்கு எட்டயபுரம் பாரதி இல்லத்திலிருந்து பாரதி மணி மண்டபம் நோக்கி ஊர்வலம் புறப்பட இருக்கிறது. தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் "பாரதி' அன்பர்கள் எட்டயபுரத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மணி மண்டபத்தில் பாரதியார் சிலைக்கு மாலையிட்டு, அஞ்சலி செலுத்திய பிறகு விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.
 "பாரதி தரிசனம் பன்முகப் பார்வை' என்கிற தலைப்பில் இளசை மணியன் தலைமையில் எழுத்தாளர் மாலன், முனைவர் ம.இராசேந்திரன், "டெல்லி' கணேஷ், "மணற்கேணி' து.இரவிக்குமார், பேரா. ஹாஜாகனி ஆகியோர் உரையாற்றுகிறார்கள். அதைத் தொடர்ந்து "தினமணி'யின் "மகாகவி பாரதியார் விருது' வழங்கும் நிகழ்ச்சி. நல்லி குப்புசாமி செட்டியார் விருதாளரை அறிமுகப்படுத்த, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பெரியவர் சீனி.விசுவநாதனுக்கு விருதும், பொற்கிழியும் வழங்கிக் கெüரவிக்கிறார்.
 நிகழ்ச்சி இத்துடன் முடிந்துவிடவில்லை. மாலையில் தூத்துக்குடியில் பாரதி விழா தொடர்கிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையில் நடைபெறும் அந்த விழா கவியரங்கம், சொல்லரங்கம், கலையரங்கம் என்று மூன்று பிரிவாக நடைபெற இருக்கிறது. பாடலாசிரியர் யுக பாரதி, கவிஞர் அமுத பாரதி, கவிஞர் ரவிசுப்பிரமணியன், கவிஞர் சொ.சேதுபதி உள்ளிட்டோர் பாரதி குறித்த தங்களது கவிதைகளை வாசித்து அரங்கேற்ற இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து சொல்லரங்கம் நிகழ்ச்சியில் "கவி உள்ளம்' என்கிற தலைப்பில் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் தனியுரையாற்றுகிறார். கலையரங்கம் நிகழ்ச்சியில் பிரபல நாட்டியக் கலைஞர் "கலைமாமணி' ஜாகீர் உசேன் குழுவினர் பாரதியாரின் பாடல்களை நாட்டியமாக்கி கலை விருந்து வழங்க இருக்கிறார்கள்.
 எட்டயபுரத்தில், இனி வரும் ஆண்டுகளில் விழாவாக இருக்கக்கூடாது பாரதியின் பிறந்த நாள், திருவிழாவாக இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்.
 
 
 விமர்சனத்துக்கு வந்திருந்த கவிஞர் ச.அருண் என்பவரின் "பாணனைத் தொடரும் வெயில்' தொகுப்பில் காணப்படும் கவிதை இது.
 ஏ பார் ஆப்பிள்...
 தொடங்கி
 ரெயின் ரெயின் கோ அவே யில்
 முடிந்தது அந்த நாள்...
 கலைந்து போன
 குழந்தைகளோடு
 கலைந்து கொண்டிருந்தது
 எங்கேயோ கேட்ட
 அறம் செய்ய விரும்பு!
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com