இந்த வாரம் கலாரசிகன்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக முனைவர் தெ.ஞானசுந்தரம் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக முனைவர் தெ.ஞானசுந்தரம் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. மிகுந்த எதிர்பார்ப்புக்கும், போராட்டத்துக்கும் பிறகு தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. அதைத் தொடர்ந்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஏற்படுத்தப்பட்டும், அமைப்பு ரீதியாக நியமனங்கள் இல்லாமல் முடக்கப்பட்டிருந்த நிலைமை இனியாவது மாறும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த வாரம் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தபோது, பல்வேறு பதிப்பகங்களின் அரங்கங்களைப் பார்வையிட்டோம். அங்கே செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பெயர்ப் பலகையுடன் கூடிய அரங்கு ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. சாகித்திய அகாதெமி, நேஷனல் புக் ட்ரஸ்ட் முதலிய அரங்குகளில் ஆர்வத்துடன் மக்கள் புத்தகம் வாங்கிக் கொண்டிருந்தனர்.

ஆனால், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தும் கூட, அந்த நிறுவனத்தின் சார்பில் யாரும் வராததால், அது வெற்றிடமாகக் காணப்பட்டது. அதைப் பார்த்தபோது வருத்தமும் கோபமும் ஒருசேர வந்தன.

இதுபோன்ற முக்கியமான இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதுகூட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்குத் தெரியாதா என்பதுதான் நமது கோபத்துக்குக் காரணம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு விடிவுகாலம் வராதா என்று ஏங்கினேன். அந்த ஏக்கத்திற்கு இவ்வளவு சீக்கிரத்தில் விடை கிடைத்திருப்பது நான் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நிறுவப்பட்டு எட்டு ஆண்டுகளாகியும் அதன் செயல்பாடுகள் முழு வீச்சில் நடைபெறாததற்கு மிக முக்கியமான காரணம், அதன் தலைவராக முதலமைச்சர் இருப்பதுதான்.

முதலமைச்சருக்கு இருக்கும் பல்வேறு பணிகளில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நேரம் ஒதுக்கி, அதன் செயல்பாடுகளை நடத்துவது என்பது இயலாத ஒன்று. அதனால், இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை முழு நேரம் ஈடுபடும் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது அதிகாரமாவது முழுமையாகத் துணைத் தலைவரிடம் தரப்பட வேண்டும்.

முன்னாள் பொறுப்பு அலுவலராக ராமசாமி இருந்த வரை, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையுடன் போராடி பல சலுகைகளை அந்த நிறுவனத்துக்குப் பெற்றுத்தர முடிந்தது. அவருக்குப் பிறகும் கூட, முழு நேர இயக்குநர்கள் இல்லாமல் வெறும் பொறுப்பு இயக்குநர்களாகவே தொடர்வது மிகப்பெரிய குறை. நிறுவனம் தொடங்கி எட்டு ஆண்டுகளாகியும் இன்னும் நியமிக்கப்பட வேண்டிய 43 இடங்களில் ஒன்றுகூட நிரப்பப்படவில்லை. முறையாகக் கோரிக்கை விடுக்கப்பட்டால், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்குத் தேவைக்கேற்ற பணம் அளிப்பதற்கு மத்திய அரசு தயாராக இருந்தும் கூட, அந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. 

முனைவர் தெ.ஞானசுந்தரத்துக்குப் போதுமான அதிகாரம் அளித்து, அவரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால், அது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொற்காலமாக அமையும். ஒரு துணை வேந்தருக்கான எல்லாத் தகுதிகளும் படைத்த முனைவர் தெ.ஞானசுந்தரம் தமிழறிஞர் மட்டுமல்லாமல், தலைசிறந்த நிர்வாகியாகவும், தொலைநோக்குப் பார்வையுள்ள சிந்தனையாளராகவும் இருப்பவர். 

இவர் நியமிக்கப்பட்டிருப்பது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பலம். அவர் முறையாகச் செயல்பட முடிந்தால், அது செம்மொழித் தமிழுக்குக் கிடைத்த வரம்.

-------------------------

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையால் "இளங்கவி' என்று பாராட்டப்பட்டவர் கவிஞர் தே.ப.பெருமாள். இன்றைய தலைமுறைக்கு இவர் அதிகமாக அறியப்படாதவராக இருந்தாலும் கூட, தமிழ் இலக்கிய உலகில் இவருக்கென்று தனியான இடம் ஒன்று உண்டு. 1944-ஆம் ஆண்டு முதன்முதலாக "கவியரங்கம்' எனும் நிகழ்ச்சி திருச்சி வானொலி நிலையத்தால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. "எழில்' என்ற தலைப்பில் நடைபெற்ற அந்தக் கவியரங்கத்துக்கு ரசிகமணி டி.கே.சி. தலைமை தாங்கினார். அந்தக் கவியரங்கத்தில், அன்றைய பிரபல தமிழ்க் கவிஞர்களான பாஸ்கர தொண்டைமான், தொ.மு.சி.ரகுநாதன், நா.பிச்சமூர்த்தி, திருலோக சீதாராம், கவி. கா.மு.ஷெரீப் முதலிய 14 கவிஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுள் கவிஞர் தே.ப.பெருமாளும் ஒருவர்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மட்டுமல்லாமல், பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர், நாவலர் சோமசுந்தர பாரதியார், ஒளவை தி.க.சண்முகம், பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார், கவியரசு கண்ணதாசன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பும், அவர்களது நன்மதிப்பும் பெற்றவர் கவிஞர் தே.ப.பெருமாள். அவரது நூற்றாண்டு விழா இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்தது. அந்த நூற்றாண்டு விழாவின் போது அவருடைய நூல்கள் தொகுக்கப்பட வேண்டும் என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அவருடைய திருமகனார் தே.ப.தேசிக விநாயகம் கவிஞரின் ஏழு கவிதை நூல்களை ஒரே நூலாக்கி "தே.ப.பெருமாள் கவிதைகள்' என்கிற தலைப்பில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். 

இவருடைய கவிதைகள் மட்டுமல்லாமல், இவருடைய கதைகள், நாவல்கள், நாடகங்கள், இலக்கியக் கட்டுரைகள், வரலாற்று நூல்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. அவையும் விரைவிலேயே தொகுத்துப் புத்தகமாக வெளிவர இருப்பதாகத் தெரிகிறது. குமரி மண் தந்த தனிப்பெரும் கவிஞரான தே.ப.பெருமாளின் படைப்புகள் இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுவது பாராட்டுக்குரியது.


தஞ்சை தரணி தந்த கவிஞர்களில் அ.முகம்மது இக்பால் குறிப்பிடத்தக்கவர். "தஞ்சை தாமு', "வல்லம் தாஜுபால்' உள்ளிட்ட புனை பெயர்களில் கவிதை எழுதும் இவரது கவிதை ஒன்றை இணையத்தில் படித்தேன். "துச்சாதனம்' எனும் தலைப்பிலான அந்தக் கவிதை மனதை உலுக்கியது.

எத்தனை மணிக்கு
எந்த இடத்தில்
எத்தனை பேர்
எவ்வளவு நேரம்
கூண்டில் நின்றவள்
குறுக்கு விசாரணையால்
மீண்டும் மீண்டும் 
துகில் உரியப்பட்டாள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com