கவி பாடலாம் வாங்க - 33

ஒரடிக்குள்ளே பல சீர்களில் அமையும் மோனை, எதுகைகள் இணை முதலியவையாகப் பெயர் பெறும். நான்கு சீர்களையுடைய பாட்டில் வரும் மோனை முதலிய தொடைகளுக்கே அதனதன் நிலைக்கு ஏற்பத் தனித்தனியே
கவி பாடலாம் வாங்க - 33

4-மோனை எதுகைகளின் வகை (2)

ஒரடிக்குள்ளே பல சீர்களில் அமையும் மோனை, எதுகைகள் இணை முதலியவையாகப் பெயர் பெறும். நான்கு சீர்களையுடைய பாட்டில் வரும் மோனை முதலிய தொடைகளுக்கே அதனதன் நிலைக்கு ஏற்பத் தனித்தனியே பெயர் அமைத்திருக்கிறார்கள். அவையே இணை முதல் முற்றுவரையுள்ள விகற்பங்கள்.
1. இணை: முதல் இரண்டு சீர்களில் அமைவது.
"அணிமலர் அசோகின் தளிர்நலம் வென்று'
இந்த ஆசிரியப்பாவின் அடியில் முதல் இரண்டு சீர்களில் மோனை வந்திருக்கிறது. இது இணை மோனை.
"பொன்னின் அன்ன பொறிசுணங் கேந்தி'
இந்த ஆசிரியப்பாவின் அடியில் முதல் இரண்டு சீர்களில் எதுகை வந்தது. இது இணை எதுகை.
"பாரதப் பண்பைத் தெரிந்துணர் அன்பர்கள்
சீருறத் தேயம் ஓங்குதல் வேண்டிக்
காந்தி கருத்தறிந் தெனைப்பல தொண்டை
மாந்தர்கள் வாழுந் திறத்தினிற் செய்தனர்
ஆங்கவர் ஆற்றிய செயலால்
தீங்கெலாம் தீரப் பெற்றனம் யாமே'
இந்த நேரிசையாசிரியப்பாவில் அடிதோறும் இணை மோனை வந்தமை காண்க. இணை என்பது இரட்டைக்குப் பெயர். முதல் இரண்டு சீர்களில் அடுத்தடுத்து வந்தமையால் இப்பெயர் பெற்றது.
2. பொழிப்பு: முதற் சீரிலும் மூன்றாம் சீரிலும் அமைவது.
"அம்பதும மாமலர் போல் அழகொழுகும் திருவடியை'
இதில் பொழிப்பு மோனை வந்தது. 
"செம்பொன் அன்ன அம்பொற் சுடருரு' 
இதில் பொழிப்பெதுகை வந்தது. நான்கு சீருடைய பாடல்களில் பொழிப்பு மோனை வரும்படி பாடுவதே சிறப்பு. புலவர்களின் செய்யுட்களில் இந்த அமைதியைக் காணலாம். ஆசிரியப்பாவில் அடி எதுகை வராதபோது பொழிப்பெதுகை அமையும்படி பாடுதல் சிறப்பு.
3. ஒரூஉ: முதல் சீரிலும் நான்காவது சீரிலும் அமைவது
"அன்பருளம் மேவும் முருகன் அடிமலரே'
இந்த வெண்பா அடியில் ஒரூஉ மோனை வந்தது.
4. கூழை: முதல் மூன்று சீரிலும் அமைவது.
"வேதம் விரித்த வியன்மலர்த் திருவாய்'
இந்த அகவலடியில் கூழை மோனை வந்தது. 
"வேலன் பாலன் போலும் நெஞ்சன்'
இந்த ஆசிரிய அடியில் கூழை எதுகை வந்தது.
5. மேற்கதுவாய்: இரண்டாம் சீரிலன்றி மற்ற மூன்று சீர்களில் அமைவது.
"ஆறு முகத்தா னாகும் அமுதம்'
இதில் மேற்கதுவாய் மோனை வந்தது.
"கற்றவர் போற்றும் நற்றவச் சுற்றம்'
இதில் மேற்கதுவாய் எதுகை வந்தது. இரண்டாம் சீரில் முதல் எழுத்து நெடிலாக வந்தமையால் எதுகை அமையவில்லை.
6. கீழ்க்கதுவாய்: மூன்றாவது சீரிலின்றி மற்ற மூன்று சீர்களில் வருவது.
"அவிர்மதி அனைய திருநுதல் அரிவை'
இதில் கீழ்க்கதுவாய் மோனை வந்தது.
"அன்ன மென்ன அழகுற மன்னும்'
இதில் கீழ்க்கதுவாய் எதுகை வந்தது.
7. முற்று: நான்கு சீரிலும் வருவது.
"தூய துணைவன் துறந்தமை தூற்றும்'
இதில் முற்று மோனை வந்தது.
"இங்கித மங்கள மெங்குமி லங்குக'
இதில் முற்றெதுகை வந்தது.
இங்கே சொன்ன கீழ்க்கதுவாயை மேற்கதுவாய் என்றும் மேற்கதுவாயைக் கீழ்க்கதுவாய் என்றும் சில ஆசிரியர்கள் மாற்றிச் சொல்வதுண்டு.
(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com