கவி பாடலாம் வாங்க - 51

கவி பாடலாம் வாங்க - 51
கவி பாடலாம் வாங்க - 51

வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன்


13.மயங்கிசைக் கலிப்பா வகை (1)
கலிப்பாவுக்கு உரிய உறுப்புக்கள் தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு என்பதை முன்பே அறிவோம். இந்த ஆறு உறுப்புக்களும் மிகுதியாகவும் குறைவாகவும் இடம் மாறியும் வந்தால் அது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவாகும்.
(தரவு)
மணிகொண்ட திரையாழி
சுரிநிமிர மருங்கசைஇப்
பணிகொண்ட முடிச்சென்னி
அரங்காடும் பைந்தொடியும் 
பூந்தொத்துக் கொத்தவிழ்ந்த
புனத்துழாய் நீழல்வளர்
தேந்தத்து நறைக்கஞ்சத்
தஞ்சாயல் திருந்திழையும்
மனைக்கிழவன் திருமார்பும்
மணிக்குறங்கும் வறிதெய்தத்
தனக்குரிமைப் பணிபூண்டு
முதற்கற்பின் தலைநிற்ப
அம்பொன்முடி முடிசூடும்
அபிடேக வல்லியொடும்
செம்பொன்மதில் தமிழ்க்கூடல்
திருநகரம் பொலிந்தோய்கேள்
(தாழிசை)
விண்ணரசும் பிறஅரசும்
சிலரெய்த விடுத்தொருநீ
பெண்அரசு தரக்கொண்ட
பேரரசு செலுத்தினையே (1)
தேம்பழுத்த கற்பகத்தின்
நறுந்தெரியல் சிலர்க்கமைத்து
வேம்பழுத்து நறைக்கண்ணி
முடிச்சென்னி மிலைச்சினையே (2)
வானேறும் சிலபுள்ளும்
பலர்அங்கு வலனுயர்த்த
மீனேறோ ஆனேறும்
விடுத்தடிகள் எடுப்பதே (3) 
மனவட்ட மிடுஞ்சுருதி
வயப்பரிக்கு மாறன்றே
கனவட்டம் தினவட்ட
மிடக்கண்டு களிப்பதே (4)
விண்ணாறு தலைமடுப்ப
நனையாநீ விரைப்பொருநைத்
தண்ணாறு குடைந்துவையைத்
தண்டுறையும் படிந்தனையே (5)
பொழிந்தொழுகு முதுமறையின்
சுவைகண்டும் புத்தமுதம்
வழிந்தொழுகும் தீந்தமிழின்
மழலைசெவி மடுத்தனையே (6)
(அராகம்)
அவனவ ளதுவெனு மவைகளி லொருபொருள்
இவனென உணர்வுகொ டெழுதரு முருவினை (1)
இலதென உள்தென இலதுள தெனுமவை
அலதென அளவிட அரியதொ ரளவினை (2)
குறியில னலதொரு குணமிலன் எனநிலை
அறிபவர் அறிவினும் அறிவரு நெறியினை (3)
இருமையும் உதவுவ னெவனவன் எனநின
தருமையை உணர்வறி னமிழ்தினும் இனிமையை (4)
(தாழிசை)
வைகைக்கோ புனற்கங்கை
வானதிக்கோ சொரிந்துகரை 
செய்கைக்கென் றறியேமால்
திருமுடிமண் சுமந்ததே (1)
அரும்பிட்டுப் பச்சிலையிட்
டாட்செய்யும் அன்னையவள்
தரும்பிட்டுப் பிட்டுண்டாய்
தலையன்பிற் கட்டுண்டே (2)
முலைகொண்டு குழைத்திட்ட
மொய்வளைகை வளையன்றே
மலைகொண்ட புயத்தென்னி
வளைகொண்டு சுமந்ததே (3)
ஊன்வலையி லகப்பட்டார்க்
குட்படாய் நின்புயத்தோர்
மீன்வலைகொண் டதுமொருத்தி
விழிவலையிற் பட்டன்றே (4)
(அம்போதரங்கம்)
போகமாய் விளைந்தோய் நீ
புவனமாய்ப் பொலிந்தோய் நீ
ஏகமாய் இருந்தோய் நீ
எண்ணிறந்து நின்றோய் நீ
வானும் நீ-நிலனும் நீ
மதியும் நீ-கதிரும் நீ
ஊனும் நீ-உயிரும் நீ 
உளதும் நீ-இலதும் நீ
(தனிச்சொல்)
எனவாங்கு 
(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com