ஐங்குறுநூறில் திருமண நிகழ்வுகள்

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஐங்குறுநூறு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐவகை நிலங்களைப் பற்றி ஒவ்வொரு நிலத்திற்கும் நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் கொண்ட நூல் இது.
ஐங்குறுநூறில் திருமண நிகழ்வுகள்

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஐங்குறுநூறு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐவகை நிலங்களைப் பற்றி ஒவ்வொரு நிலத்திற்கும் நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்கள் கொண்ட நூல் இது.
 இதில் நெய்தல் பற்றிய நூறு பாடல்களை எழுதியவர் புலவர் அம்மூவனார். நெய்தல் பற்றிய பாடல்கள் பத்துப் பத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் "ஞாழப்பத்து' என்பதில் அக்கால மக்களின் திருமண நிகழ்வுகள் சிலவற்றை அறிய முடிகிறது.
 ஞாழல் என்பது கொன்றைமர வகைகளுள் ஒன்றாகும். இது கடற்கரைப் பகுதியில் அதிகமாகக் காணப்படும். ஒவ்வொரு பாடலும் ஞாழல் தொடர்பைக் கொண்டிருப்பதால் இப்பகுதி ஞாழல் பத்து எனப் பெயர்பெற்றது.
 அவனும் அவளும் சந்திக்கின்றனர். ஒருவர் மனத்தில் மற்றவர் நுழைந்து காதல் கொண்டு களவு நடைபெறுகிறது. அவள் அவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டினாள். அவனோ, சிறிது காலம் கடத்துகிறான். அவள் வேதனைப்படுகிறாள். பின்னர் ஒருநாள் அவன் திருமண எண்ணத்துடன் வருகிறான். அதை அறிந்த அவள் மகிழ்ச்சியுடன் தன் தோழியிடம் சொல்லும் பாடல் இது:
 எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழினர்
 நறிய கமழும் துறைவற்கு
 இனிய மன்ற-எம், மாமைக் கவினே (ஐங்-146)
 "நீரால் உண்டாக்கப்பட்ட மணல் மேட்டில் ஞாழல் அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துகள், நறுமணம் வீசுகின்ற துறையைச் சார்ந்தவனுக்கு என் மாந்தளிரைப் போன்ற அழகு இனிமையானதே பார்த்தாயா?' என்பது பாடலின் பொருளாகும்.
 ஞாழல் அரும்பு முதிர்ந்து மலராக மணம் வீசுவதுபோல அவன் கொண்ட அன்பு முதிர்ந்து இப்போது மணமாகவும் உறுதியாகி அனைவர்க்கும் செய்தி பரப்புகிறது என்பது மறைபொருளாகும்.
 அவன் அவளைப் பெண் கேட்கச் சான்றோர் பலரைத் துணையாகக்கொண்டு அவளின் பெற்றோரை அணுகுகிறான். அவள் தாய்-தந்தையர் மகிழ்ச்சி அடைகின்றனர். வந்தவரை வரவேற்று தம் மகளை மணக்க வேண்டுமாயின் இன்னின்ன எல்லாம் மணப் பொருளாகத் தரவேண்டும் என்கின்றனர். இது மணமகளை மணப்பதற்காகத் தருகின்ற வரைபொருளாகும். அவன் அவர்கள் கேட்டவற்றைத் தந்து மேலும் தருகிறான். இதனைக் கண்ட தோழி உள்வீட்டில் இருக்கும் அவளிடம் போய்ச் சொல்லும் பாடல் இதுவாகும்.
 "எக்கர் ஞாழல் மலரின் மகளிர்
 ஒண்தழை அயரும் துறைவன்
 தண்தழை விலையென நல்கினன் நாடே'
 (ஐங்-147)
 மகளிர் மணல் குன்றில் விளையாடச் செல்கின்றனர் அங்கே ஞாழல் மலர்களைக் காணாததால் அதன் தழைகளை ஆடையாக அணிந்து விளையாடும் துறையைச் சேர்ந்தவனான நம் தலைவன் உனக்குரிய குளிர்ச்சியான தழையாடையின் விலையாகத் தனக்குரிமையான ஒரு நாட்டையே அளித்தானடி என்பது பாடலின் பொருள்.
 அவன் பெரும் செல்வக் குடியைச் சார்ந்தவன் என்பதும், அவளிடம் மிகுந்த காதல் கொண்டவன் என்பதும் கீழ்வரும் பாடல் மறைமுகமாக உணர்த்துகிறது. அவனுக்கும் அவளுக்கும் திருமணம் இனிதே நடந்தேறுகிறது. தோழி தன் தலைவியைத் தலைவனுடன் இன்புற்று மகிழுமாறு பள்ளியிடத்தே கொண்டு விடுகிறாள். அப்போது, அத்தோழி தலைவியை வாழ்த்திச் சொல்லும் பாடல் இது.
 "எக்கர் ஞாழல் இகழ்ந்துபடு பெருஞ்சினை
 வீயினிது கமழும் துறைவனை
 நீஇனிது முயங்குமதி காதலோயே'
 (ஐங்-148)
 "அன்புடையவளே! மணல் குன்றிலே எல்லை கடந்து உயர்ந்து வளர்ந்த பெரும் கிளைகளிலே பூத்துள்ள ஞாழல் பூக்கள் நாற்புறமும் மணம் வீசும் துறையைச் சார்ந்த நம் தலைவனை இனி நீ இனிதாகத் தழுவி இன்புறுவாயாக' என்பது பாடலின் பொருள். ஞாழல் பூக்களின் மணம் எல்லா இடங்களிலும் கமழ்தல் போல உன் மணவாழ்வும் இனிதாக யாவரும் போற்ற அமையட்டும் என்பது மறைபொருளாம்.
 இவ்வாறு மணம் பேசவருதல், மணமகன் மணமகளுக்கு வரைபொருள் அளித்தல், தோழி மணமகளையும் மணமகனையும் வாழ்த்தல் முதலிய செய்திகளை ஐங்குறுநூற்றில் காணமுடிகிறது.
 - வளவ. துரையன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com