தமிழ்மணி

தவக்கோலம் பூண்ட தமிழ் ஞானி!

DIN

"தவக்கோலம்' பூண்ட இறையருளாளர்களுக்கிடையே "தமிழ்க்கோலம்' பூண்ட ஆதீன குருநாதர்களுள் ஒருவராக விளங்கியவர் கோவை பேரூராதீன, சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகள்.
 கொங்கு மண்டலத்து முதலிபாளையம் என்னும் சிற்றூரில், சிவராமசாமி- கற்பினி அம்மையார் தம்பதியர்க்கு 16.9.1925 ஆம் ஆண்டு மூன்றாவது மகவாகப் பிறந்தவர். தொடக்கக் கல்வியைத் தமது கிராம வழக்கப்படி பெற்ற இவர், தம் 15ஆவது வயதில் (1941) சிரவணபுரக் கெüமார மடாலயத்திற்கு வந்து திருப்பணிகள் ஆற்றி, தமிழ் கற்கத் தொடங்கினார்.
 பின்னர், 1947ஆம் ஆண்டு மயிலம் தமிழ்க் கல்லூரியின் மாணாக்கராகித் தமிழ்கற்று, 1952இல் சென்னைப் பல்கலைக்கழகத்துப் புலவர் பட்டம் பெற்றார். வீரசைவ நெறிநின்று மயிலம் ஆதீனத்து, 18ஆம் பட்டமான திருப்பெருந்திரு சிவஞானபாலைய சுவாமிகளிடம் அங்கலிங்கம் பெற்று அருட்பணியில் தலைநின்ற அடிகள், 1950இல் பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் இளவரசுப் பொறுப்பேற்றார். பின்னர், 1957இல் திருவருள் ஆறுமுக அடிகளிடமிருந்து முழுப்பொறுப்பினையும் ஏற்று அருளாட்சி தொடங்கினார்.
 அக்காலத்தே, சொத்து தொடர்பான தகராறுகளால் மனிதர்களை மனிதர்கள் பகைத்துக்கொண்டும் வஞ்சித்துக் கொலைகள் புரிந்துகொண்டும் இருந்த சூழலை மாற்றி, அமைதியும் ஒழுங்கும் நிலைகொள்ள ஆன்மிக நெறியில் வழிவகை செய்தார்.
 ஆத்திகமும் நாத்திகமும் எதிரெதிரே நின்று இயங்கிய தமிழகத்தில், சாத்விக நெறிநின்று சமய வழிகாட்டிய, தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து, ஊர்கள்தோறும் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டும், வழிபாடுகள் நிகழ்த்தியும் செயல்பட்ட அடிகள், கெüமாரத் திருமடத்து சுந்தர சுவாமிகள் உள்ளிட்ட அருளாளர்களோடு இணைந்து ஆற்றிய சமய, சமுதாயப் பணிகள் பலவாகும்.
 அருள்நெறித் திருக்கூட்டம், தெய்வீகப்பேரவை முதலிய அமைப்புகள் வாயிலாக, மேற்கொண்ட முயற்சிகள் மொழிக்கும், இனத்துக்கும், சமயத்துக்கும் உலகத்துக்கும் உயர்வளித்தன என்பது வரலாறு. அருள்நெறித் திருக்கூட்டம் வலுப்பெற்று இயங்கிய காலத்தில், கோவை மண்டலத்தில் எத்தனையோ வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறின. அவற்றுள் ஒன்று கோவைச் சிறையிலும் நிகழ்ந்தேறியது.
 அப்போது, அங்கு சிறைக்காப்பாளராகப் பணியாற்றிய அரிச்சந்திரன் என்பார் வேண்டுதலுக்கிணங்க, சிறைவாசிகளுக்கு நெறிகாட்டி, சமயவுணர்வூட்டும் திருப்பணி தொடங்கியது. அப்போதைய கோவை நகரத் தந்தை இரத்தினசபாபதி முதலியார் பங்கேற்றார். ஆயிரக்கணக்கான சிறைவாசிகள் அறவுரை கேட்டு, மன அமைதியும் ஒருமையுணர்வும் எய்தப் பெற்றனர்.
 ""சிறையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. சிறை வளாகத்தில், ஒரு பெரிய மண்டபத்தில் அம்பலவாணர் திருவுருவம் உருவாயிற்று. வாரந்தோறும் கூட்டுவழிபாடு, சொற்பொழிவுகள், திருநீறு வழங்கல் ஆகியன அடிகளார் அருளால் மலர்ந்தன. அரசியல் ஊர்வலம் கண்ட கோவை நகரம் சமய ஊர்வலத்தை நடத்தியது. சமயக் கூட்டம் பொது இடத்தில் சிதம்பரம் பூங்கா திறந்த வெளியில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். சமய உறவுகள் வளர்ந்தன'' என்று தன் வரலாற்றை உள்ளிறுத்தித் தமிழ் வரலாற்றைப் பதிவுசெய்கிறார் பேரூரடிகள்.
 தமிழ் அருச்சனை, தமிழ் வழிபாடு, தமிழ்வழிக் கல்வி, தமிழ் பயிற்றுமொழி உள்ளிட்ட தமிழ் சார்ந்த பற்பல ஆக்கப்பணிகளில் முனைப்புடன் இயங்கிய அடிகள், பள்ளிகளையும் தொடங்கி பெருமை கொண்டார். தமிழ் வளர்க்கும் ஞானப் பண்ணையாக, பேரூரில் தமிழ்க் கல்லூரி நிறுவினார். 24.6.1953இல் பேரூர் பட்டீசுவரர் கோயிலில் தமிழருச்சனை செய்து தொடங்கப்பெற்ற அக்கல்லூரி இன்று மணிவிழாக் கண்ட கலை, அறிவியல், தமிழ்க் கல்லூரியாக விளங்கி வருகிறது.
 "தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி மணிவிழாவை முன்னிட்டு வளர்தமிழ் இயக்கம் நடத்தும், தமிழ் பயிற்றுமொழி- வழிபாட்டு மொழி மாநில மாநாட்டைத் தொடங்கிவைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இக்கல்வி நிறுவனம் ஒரு சமய நிறுவனத்தோடு இணைந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. சீர்வளர்சீர் இராமசாமி அடிகள் அவர்களது தலைமையில் நடைபெறும் இக்கல்லூரி தமிழுக்காக நடந்துவருவது பெருமைக்குரியது. தவத்திரு அடிகளார் இதுவரை ஐயாயிரம் தமிழ்ப் புலவர்களை உருவாக்கி நமது தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளார். அவரின் அரும்பணியை அகமகிழ்ந்து வணங்குகிறேன்'' என்று புகழாரம் சூட்டி, 07.1.2013 அன்று அம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார் மேனாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அ.ப.ஜெ.அப்துல்கலாம்.
 அக்காலத்துப் பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இரண்டாந்தர ஆசிரியர்களாக வைக்கப்பட்டிருந்தனர். நான்காண்டு அவர்கள் பயின்று பெற்ற புலவர் படிப்பு ஒரு பட்டயப்படிப்பாகவே கருதப்பட்டது. ஏனைய பட்டதாரிகட்கு இணையான மதிப்பும், ஊதியமும் தமிழ்ப் புலவர்களுக்கு இல்லாத நிலை. புலவர் பட்டயக்கல்வித் தகுதிக்குப் பதிலாக, பி.லிட். பட்டம் பெற்றவர்களே தமிழாசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அரசு கொள்கை முடிவெடுத்த காலகட்டம்.
 அந்த வேளையில், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த அடிகள், அப்போதைய துணைவேந்தர் மால்கம் ஆதிசேஷையா கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு குழுவினை அமைத்து, தக்க தீர்வுகளைப் பரிந்துரைத்தார். அதன்வழி, மேலும் இரு தேர்வுகள் எழுதி, பி.லிட், பட்டம் பெற்றவர்களுக்கு இணையான பணி, மற்றும் ஊதியங்களைப் புலவர்கள் பெற்றனர். பணி மூப்பின் அடிப்படையில் தலைமையாசிரியராக நியமிக்கப்பெறும் வாய்ப்பினையும் ஏற்றனர். அதுபோல், கலை, அறிவியல் பாடங்களைச் சொல்லித்தரும் ஏனைய பேராசிரியர்களுக்கு இணையான நிலைப்பாட்டைத் தமிழ் பயின்ற பேராசிரியர்களும் பெற்றனர். அவர்கள், கல்லூரி முதல்வர்களாக உயர்வுபெறவும் முடிந்தது.
 இவ்வாறு, துறைதோறும் தமிழ் வளரத் துணை நின்றும் முன்னின்றும் பேரூரடிகள் ஆற்றிய பணிகள் அளப்பரியன. 31.8.2018 அன்று சுத்த அத்துவித இட்டலிங்க ஐக்கிய பரசிவக் கலப்பு எய்திய அடிகள், தமிழ் இருக்கும் இடந்தோறும் தவக்கோலம் கொண்டு தனித்தவிசில் வீற்றிருப்பார் என்பது திண்ணம்.
 - கிருங்கை சேதுபதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT