இந்த வாரம் கலாரசிகன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, "சிவமொக்கா' தமிழ்ச் சங்கத்துக்குக் சென்று வந்த பெருவியப்பிலிருந்து நான் இன்னும் மீண்டபாடில்லை.
இந்த வாரம் கலாரசிகன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, "சிவமொக்கா' தமிழ்ச் சங்கத்துக்குக் சென்று வந்த பெருவியப்பிலிருந்து நான் இன்னும் மீண்டபாடில்லை. சொந்தமாகத் தமிழ்ச் சங்கத்துக்குக் கட்டடம், திருமண மண்டபம் மட்டுமல்லாமல், இப்போது வெளியூர்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்தால் தங்குவதற்கு 35 அறைகளையும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள், சிவமொக்கா தமிழ்ச் சங்கத்தினர்.

ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் சிவமொக்கா தமிழ்ச் சங்கக் கட்டடத்தின் முகப்பில் திருவள்ளுவர் சிலை ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது. இப்போதைய தலைவரான ராஜசேகருக்கு சிவமொக்கா தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் விதித்த ஒரே கட்டளை, எப்படியாவது திருமண மண்டபத்தைக் கட்டிமுடிக்க வேண்டும் என்பதுதான்.

மும்பை, புவனேஷ்வர், திருவனந்தபுரம், பாலக்காடு, கொல்லம், புதுவை, திருவண்ணாமலை, விழுப்புரம் என்று கர்நாடகத்துக்கு வெளியே இயங்கும் பல தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் அங்கே குழுமியிருந்தது எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

சிவமொக்கா தமிழ்ச் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ராஜூ என்னை "ஜோக்' அருவிக்கும், சிவமொக்காவிலுள்ள முருகன் கோயிலுக்கும் அழைத்துச் சென்றார். சிவமொக்கா ஊரையொட்டியுள்ள குன்றின் மீது அமைந்திருக்கிறது அந்த அழகான முருகன் கோயில்.

ஒரு நூற்றாண்டிற்கும் முன்னர் தமிழகத்திலிருந்து வந்திருந்த மூதாட்டி ஒருவரால், சிறிய அளவில் உருவாக்கப்பட்ட அந்த முருகன் கோயில் இப்போது மூன்று திருமண மண்டபங்களுடன் கூடிய மிகப்பெரிய கோயில் வளாகமாக மாறியிருக்கிறது. சிவமொக்கா தமிழை மட்டும் வளர்க்கவில்லை; தமிழ்க் கடவுளுக்கும் கோயில் எழுப்பிப் போற்றுகிறது. அடுத்த முறை எப்போது சிவமொக்கா பயணம் என்று என் மனது இப்போதே கேட்கத் தொடங்கிவிட்டது!
 
*

சிவமொக்காவில் தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடுவது குறித்து கடந்த வாரம் பதிவு செய்திருந்ததன் விளைவோ என்னவோ தெரியவில்லை. அதேபோன்ற தாக்கம் தமிழகத்திலும் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு திருவண்ணாமலையிலிருந்து பா.இந்திரராஜனும், கவிஞர் முகில் வண்ணனும், திருவை. பாபுவும் என்னைச் சந்திக்க வந்திருந்தனர்.

அவர்கள் தமிழகம் எங்கும் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். முனைவர் தெ.ஞானசுந்தரம் தலைமையில் இதுகுறித்துக் கலந்தாலோசிக்க அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை, மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் கூடுவது என்று முடிவெடுத்திருப்பதாகச் சொன்னார்கள்.

தமிழகம் எங்கும் இயங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதிநிதிகள் கலந்துகொள்ள வேண்டும் என்பது அவர்களது வேண்டுகோள். 2012-ஆம் ஆண்டில் தினமணியின் சார்பில் தில்லியில் கூட்டிய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடு போல, தமிழக அளவிலுள்ள இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சிதான் இது என்று தெரிவிக்கிறார்கள்.

முனைவர் தெ.ஞானசுந்தரத்தின் தலைமையில் நடைபெற இருக்கும் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்கான கலந்தாய்வுக் கூட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

*
 
தமிழறிஞர்களும், இதழியலாளர்களும், கவிஞர்களும், படைப்பிலக்கியவாதிகள் அல்லர் என்று யார் சொன்னது? மிக அருமையான சிறுகதைகளை அரசியல்வாதிகள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் எழுதியிருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது. அந்த மாயையை உடைக்கிறது பாவை சந்திரனால் தொகுக்கப்பட்ட "இன்னொரு முகம்' என்கிற புத்தகம். கடந்தவார ரயில் பயணத்தின்போது அலுப்பே தட்டாமல் நேரம் நகர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

தமிழில் கவிதை மரபு என்பது தொன்றுதொட்டே இருந்து வருகிறது. கடந்த நூற்றாண்டு வரையிலும் கூட, கடிதப் பரிமாற்றங்கள், சீட்டுக் கவியாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. வசன நடை என்பது ஐரோப்பியர்கள் தமிழுக்குத் தந்த கொடை என்று கூறினால் தவறில்லை. அதிலும் குறிப்பாக, கிறிஸ்தவ மத போதகர்கள் தங்கள் மதத்தைத் தூக்கிப் பிடிக்கவும், சாமானிய மக்களுடன் தொடர்பு கொள்ளவும், அதன் மூலம் மதத்தைப் பரப்பவும் வசன நடையைப் பயன்படுத்தினார்கள்.

வீரமாமுனிவர் என்று பரவலாக அறியப்படும் இத்தாலிய மதபோதகரான கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கிதான் "பரமார்த்த குருவும் சீடர்களும்' என்ற நூலை எழுதி, வசன நடைக்குப் பிள்ளையார் சுழி போட்டவர். அவரைத் தொடர்ந்து விக்கிரமாதித்தன் கதைகள் (இப்ராஹிம் ராவுத்தர்), பிரதாப முதலியார் சரித்திரம் (மாயூரம் வேதநாயகம் பிள்ளை), கமலாம்பாள் சரித்திரம் (அ.மாதவையா), ஆறுமுக நாவலரின் பைபிள் மொழிபெயர்ப்பு ஆகியவை வெளிவந்தன.

மகாகவி பாரதியாரின் வசன இலக்கியங்கள், வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரசமரம் என்று தொடங்கி, இப்போது வசனம் சார்ந்த படைப்புகள் சிறுகதையாகவும், நாவலாகவும், குறுநாவலாகவும் பல்கிப் பெருகிவிட்டன. நூற்றுக்கணக்கான தமிழ்ப் படைப்பிலக்கியவாதிகள் தோன்றி, சர்வதேச இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடிய அளவிலான உரைநடை இலக்கியங்களைப் படைத்து வருகிறார்கள்.

"இன்னொரு முகம்' புத்தகத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், வேறு துறையில் பயணம் நடத்தி, அதற்கிடையில் சிறுகதை எழுதுவதிலும் கவனம் செலுத்திய அரசியல்வாதிகள், அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள் ஆகியோர் எழுதிய அபூர்வச் சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருப்பதுதான். பாரதியார், வ.ச.ஸ்ரீநிவாச சாஸ்திரி, மு.கதிரேச செட்டியார், வெ.சாமிநாத சர்மா, ராஜாஜி, பாரதி தாசன், சுத்தானந்த பாரதியார், எஸ்.வையாபுரிப் பிள்ளை, அ.சீநிவாஸ ராகவன், பெ.நா.அப்புசாமி முதலிய 16 பிரமுகர்களின் சிறுகதைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.
 
 *

இந்தவாரத் தேர்வு திருவாரூர் த.ரெ. தமிழ்மணி எழுதிய "விலை பேசுகிறார்கள்' என்கிற கவிதை. இதைப் பரிந்துரைத்தவர் கவிஞர் ஆரூர் புதியவன்.
 

கரையில்
  மீனுக்கு...
கடலில்
  மீனவனுக்கு...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com