பகலில் விளக்கேற்றச் சொன்னவள்

வீடுகளிலும், மாடங்களிலும் விளக்கேற்றி விழாக்கள் கொண்டாடுவது தமிழர் மரபு. ஆனால், பட்டப்பகலில் விளக்கேற்றி காத்திருந்த தலைவியைப் பற்றி அறிவீர்களா?
பகலில் விளக்கேற்றச் சொன்னவள்

வீடுகளிலும், மாடங்களிலும் விளக்கேற்றி விழாக்கள் கொண்டாடுவது தமிழர் மரபு. ஆனால், பட்டப்பகலில் விளக்கேற்றி காத்திருந்த தலைவியைப் பற்றி அறிவீர்களா?
 அது ஒரு காலைப்பொழுது, பகலவன் ஒளியில் வீடும் மாடமும் பளிச்சிட்டது. வீட்டுத் தலைவியோ சிறியதும் பெரியதுமான சரவிளக்குகளைத் தூய்மையாக்கிக் கொண்டிருந்தாள். ஒளிரும் தலைவியின் முகம் கண்ட தோழி, "இன்றென்ன தீபத் திருநாளா? தீபாவளித் திருநாளா? இந்தக் காலைப்பொழுதில் எதற்காக இத்தனை விளக்குகளையும் தூய்மை செய்கிறாய்?'' என்றாள்.
 "உன் கேள்விக்குப் பின்னர் பதில் சொல்கிறேன். முதலில் விளக்குகளில் திரியும், பசு நெய்யும் இட்டு வீட்டை அலங்காரப்படுத்து. பசு நெய் தவிர வேறு நெய் எனில், அவர் திருமேனி இன்னலுறும்'' என்றாள் தலைவி.
 விளக்குகளுக்குப் பசுநெய் இட்டு, திரிகளைப் போட்டு விளக்கேற்றி வீடு, மாடம், வாசல் என விளக்குகளால் அலங்கரித்தாள் தோழி. "கற்பூரம் கொணர்ந்திடுக! தோழி, கண்ணேறு கழிப்பாம்' என்பாய். எனவே, கற்பூரம் உள்ளதிங்கே. ஆனால், யார்தான் வரப்போகிறார்கள்? எப்படி இருப்பார் அவர் ?'' என்றாள் தோழி.
 "தோழி, விளக்கேற்றுதல் என்பது எப்பொழுதும் மங்கலமானது என்பதை நீ அறியாயோ? வேள்விகளிலும், மங்கல விழாக்களிலும் பசு நெய்யே பயன்படும். வருபவர் யார் என்கிறாய்? அவர் வேண்டுதல் வேண்டாமை இல்லார்; மெய்யே மெய்யாகி இன்ப மயமாய்க் காட்சியளிக்கும் சுத்த சிவானந்த ஜோதி'' என்று கீழ்வரும் பாடல் வாயிலாகத் தோழிக்கு பதிலுயிரைக்கிறார் அருட்பிரகாச வள்ளலார்.
 "அருளாளர் வருகின்ற தருணமிது தோழி
 ஆயிரம் ஆயிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக
 தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல்
 திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்;
 இருளேது காலை விளக்கேற்றிட வேண்டுவதோ
 என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
 மருளேல் அங்கவர் மேனி விளக்கம தெண்கடந்த
 மதிகதிர் செங்கனல் கூடிற் றென்னிலும் சாலாதே!
 (திருவருட்பா, ஆறாம் திருமுறை, 32)
 -இரா.வெ.அரங்கநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com