பெண்பாவம் பொல்லாதது

தலைவியை மணம் செய்து கொள்ள நினையாமல் இரவுக்குறியில் சந்தித்துக் களவு வாழ்க்கை வாழ்வதிலே பெருவிருப்பம் கொண்டிருந்தான் தலைவன்.
பெண்பாவம் பொல்லாதது

தலைவியை மணம் செய்து கொள்ள நினையாமல் இரவுக்குறியில் சந்தித்துக் களவு வாழ்க்கை வாழ்வதிலே பெருவிருப்பம் கொண்டிருந்தான் தலைவன். இதனையறிந்த தோழி, தலைவிக்கு மணவாழ்க்கை நிகழவேண்டுமென எண்ணினாள். தலைவனிடம் இதைப் பற்றி எப்படிப் பேசுவது எனச் சிந்தித்தாள்.
ஒருநாள் இரவு நேரத்தில், தலைவியின் வீட்டுக்குப் பின்புறம் உள்ள வேலியோரத்தில் பிறர் அறியாதவாறு தலைவியைச் சந்திக்க தலைவன் வந்ததைத் தோழி அறிந்தாள். அந்நேரத்தில் அங்கு நின்றிருந்த தலைவன் கேட்கும்படியாகத் தலைவியிடம் தோழி பேசுகிறாள்.
"ஒருநாள் நம் இல்லத்திற்கு விருந்தினர்கள் வந்திருந்தனர். தலைவனும் அவர்களுடன் வந்தான். அவனைக் கண்டு ஐயம் கொண்ட அன்னை, அன்றுமுதல் பகைவரது போர்க்களத்தின் பக்கத்திலுள்ள ஊரினர் எவ்வாறு தூங்காமல் இருப்பரோ, அவர்கள் போன்று இரவில் தூங்காமல் இருக்கிறாள். நீராடச்சென்ற ஒளிபொருந்திய நெற்றியையுடைய பெண் ஒருத்தி, நன்னன் என்னும் மன்னன் தோட்டத்தில் இருந்த மாமரத்திலிருந்து விழுந்து, ஆற்றுநீரில் அடித்து வந்த மாங்காயைத் தின்றுவிட்டாள். இதனால் உண்டாகிய குற்றத்திற்காக அப்பெண்ணின் தந்தை, எண்பத்தொரு களிற்று யானைகளையும், அப்பெண்ணின் எடைக்கு நிகரான பொன்னாலான பாவையையும் கொடுத்தான். அதனை ஏற்காத மன்னன் அப்பெண்ணைக் கொலை செய்தான். அதனால், நன்னன் மீண்டுவர முடியாத கொடிய நரகத்திற்குச் சென்றான். அத்தகைய நரகத்திற்கு நம் அன்னையும் போவாளாக' என்றாள்.
"மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றென்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே' (குறுந்- 292)
தலைவனைச் சந்திக்க முடியாத வகையில் தலைவிக்குப் பாதுகாப்பு மிகுந்திருக்கிறது என்பதை அன்னையின் செயல் மூலம் தலைவனுக்கு உணர்த்தினாள். இதன் மூலம் இரவில் இனியும் தலைவியைச் சந்திக்க முடியாது என்பதைத் தலைவன் கேட்கும்படித் தெளிவுபட தோழி கூறிவிட்டாள். மேலும், தலைவனைச் சந்திக்க விடாமல் தடுக்கும் அன்னை, பெண்ணைக் கொலை செய்த நன்னன் அடைந்த நரகத்தை அடைவாள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இரவில் தலைவன் வரவை ஊரினர் அறிந்தால் "அலர்' ஏற்பட்டு தலைவிக்கு அவப்பெயர் உண்டாகும். மேலும், தலைவன் திருமணத்தை நீட்டித்துக்கொண்டே சென்றால், தலைவி துயரப்பட்டு இறக்கவும் நேரிடலாம். அதனால், தலைவனுக்குப் பாவம் ஏற்படலாம் எனக் கூறுவதாகவும் அமைகிறது. இக்கூற்றைக் கேட்ட தலைவன் உன்னை விரைவில் மணம்செய்து கொள்வான் எனக்கருதவும் இடமுண்டு.
இன்றைக்கும் ஆண்களில் சிலர் பெண்களிடம் "திருமணம் செய்து கொள்கிறேன்' எனக்கூறி, காலம் நீட்டித்து ஏமாற்றுவதைக் காணமுடிகிறது. இதனால், பெண்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது. இத்தகைய பெண்பாவம் பொல்லாதது என்கிற செய்தியைத்தான் புலவர்கள் அன்றே நம் சங்க இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.
- முனைவர் கி. இராம்கணேஷ்





 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com