இந்த வாரம் கலாரசிகன்

தமிழக வரலாற்றில் வேதாரண்யத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. வடநாட்டில் "தண்டி' எப்படியோ அப்படித்தான் தென்னகத்துக்கு வேதாரண்யம்.
இந்த வாரம் கலாரசிகன்

தமிழக வரலாற்றில் வேதாரண்யத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. வடநாட்டில் "தண்டி' எப்படியோ அப்படித்தான் தென்னகத்துக்கு வேதாரண்யம்.
 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி வேதாரண்யத்திலுள்ள அகஸ்தியம்பள்ளி உப்பளத்தில்தான் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் தடையை மீறி உப்பு எடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ராஜாஜியின் பின்னால் அணிவகுத்து, திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்குப் பாத யாத்திரையாகச் சென்ற முதல் 100 விடுதலைப் போராட்ட வீரர்களில் "தினமணி' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் பெரியவர் ஏ.என். சிவராமனும் ஒருவர்.
 வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தின் வெற்றிக்கு உறுதுணையாகவும், முக்கிய காரணகர்த்தாவாகவும் விளங்கியவர் "சர்தார்' வேதரத்னம் பிள்ளை. உப்பு சத்தியாக்கிரகத்துக்கு உதவியதற்காக அவரது சொத்துகளை பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல் அவரை சிறையிலும் அடைத்தது அன்றைய ஆங்கிலேயே அரசு. அவரது தியாகமும், தேசப்பற்றும் இன்று நினைவுகூரப்படாமல் இருப்பது வேதனைக்குரியது.
 இந்திய விடுதலை வேள்வித் தலைவர்களில் "சர்தார்' என்று அழைக்கப்படுபவர்கள் வல்லபபாய் படேலும், வேதரத்னம் பிள்ளையும் மட்டுமே. பெண் விடுதலைக்கான முனைப்பும், ஹரிஜன முன்னேற்றத்தின் மீது தீவிரமும் கொண்டிருந்த "சர்தார்' வேதரத்னம் பிள்ளை, கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட, தீண்டாமையால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்களின் முன்னேற்றம்தான் அண்ணல் காந்தியடிகளின் இலக்கு என்பதால், அந்த லட்சியத்தை நிறைவேற்ற களமிறங்கினார். பெண்கள் கல்விக்காக 1946-இல் தொடங்கப்பட்ட "கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம்' கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் மேல்நிலை வகுப்பு வரை படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
 ஏழைப் பெண் குழந்தைகளுக்குக் குறிப்பாக, சமுதாயத்தின் அடித்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு உண்டு, உறைவிடக் கல்வி கற்கும் வாய்ப்பை கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் வழங்குகிறது. ஏறத்தாழ 3,500 பெண்கள் இங்கே படித்து வருகிறார்கள். "சர்தார்' வேதரத்னம் பிள்ளையைத் தொடர்ந்து அவருடைய மகன் அப்பாகுட்டிப் பிள்ளையும், இப்போது பெயரர்கள் அ.வேதரத்னம், அ. கேடிலியப்பர் ஆகியோர் இந்த குருகுலத்தை நிர்வகித்து வருகிறார்கள்.
 "கஜா' புயலால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இந்தக் குருகுலத்தின் பல கட்டடங்கள் சீர்குலைந்தன. வகுப்பறைகளின் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள் முற்றிலுமாக வேரோடு பெயர்ந்து சாய்ந்துள்ளன. இந்த நிலையில்தான் திருச்செங்கோடில் ராஜாஜியால் நிறுவப்பட்ட காந்தி ஆசிரமத்தின் தலைவர் பேராசிரியர் தேவராஜன் என்னை அழைத்தார். திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் சார்பில் வேதாரண்யம்
 கஸ்தூர்பா கன்யா குருகுலத்துக்குப் பொருளுதவி செய்ய இருப்பதாகவும், அதை ஆசிரமத்தின் சார்பில் வந்து வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
 உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்ட "தினமணி' முன்னாள் ஆசிரியர் பெரியவர் ஏ.என்.சிவராமனின் சார்பில், இப்போது அந்தப் பொறுப்பை வகிப்பவர் வழங்க வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம்.
 இத்தனை பெரிய இழப்பிலும் அந்த நிர்வாகமும், மாணவியரும் மறுசீரமைப்பில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து மலைத்துப் போனேன். காந்தியத்தின் உறுதி எத்தகையது என்பதையும், அடித்தட்டு ஹரிஜன மக்களுக்கு ஆக்கப்பூர்வமான மேம்பாட்டையும், ஆதரவையும் வழங்குவது காந்தியம்தான் என்பதையும் புரிந்து கொண்டேன். எனக்கு பகீரதன் எழுதிய "மறைக்காட்டில் ஒரு மாணிக்கம்' புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள். தமிழகம் மறந்துவிடக்கூடாத தியாகச் செம்மல் "சர்தார்' வேதரத்னம் பிள்ளை என்பதை அந்தப் புத்தகம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. ஒவ்வொரு தமிழரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
 
 என்னை சந்திக்க வரும்போதெல்லாம் தான் வெளியிட்டிருக்கும் ஏதாவது ஒரு புத்தகத்தை ஐயா ப.முத்துக்குமாரசுவாமி எனக்குத் தருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் அடிக்கடி என்னை வந்து சந்திப்பதால், எனது நூலகத்தில் அவருடைய புத்தகங்களுக்கென்றே தனியாக ஒரு பகுதியையே ஒதுக்கி வைத்திருக்கிறேன். ஏதோ புத்தகம் எழுதுகிறோம் என்று எழுதாமல் அவர் எழுதும் ஒவ்வொரு புத்தகமும் ஆவணப் பதிவாகவும், மீள் பார்வைக்கான தரவுகளை உள்ளடக்கியதாகவும் இருப்பதுதான் சிறப்பு. ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சந்திக்க வந்தபோது அவர் என்னிடம் அன்பளிப்பாகத் தந்த புத்தகம் "தமிழ்ச் செல்வம்'. இது ஒரு தொகுப்பு நூல். இதில் 49 கட்டுரைகள் அடங்கியிருக்கின்றன.
 பல்வேறு நூலகங்களுக்குச் சென்று தேர்ந்தெடுத்து, அவற்றைப் படியெடுத்துத் தொகுத்திருக்கிறார் ப. முத்துக்குமாரசுவாமி. தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள், புறப்பொருள் வெண்பா மாலை, புறத்திரட்டு போன்ற இலக்கண நூல்கள்; புறநானூறு தொடங்கி எட்டுத்தொகை நூல்கள், ஆற்றுப்படை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், திருக்குறள் என்று தமிழ்ப் புதையல்களிலிருந்து பல்வேறு தமிழறிஞர்கள் அவ்வப்போது பதிவு செய்த தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் "தமிழ்ச் செல்வம்' என்கிற இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன.
 "ரசிகமணி' டி.கே.சிதம்பரநாத முதலியாரில் தொடங்கி, கடந்த நூற்றாண்டின் அனைத்து தமிழறிஞர்களும் எழுதியிருக்கும் 49 இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையுமே இன்றைய இலக்கிய ஆய்வாளர்களின் ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடியவை. தமிழ் ஆர்வலர்களின் சிந்தனைக்குத் தீனி போடக்கூடியவை. கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்கள் யார், எவர் என்பதை எடுத்து இயம்புபவை.
 
 
 விமர்சனத்திற்கு வந்திருந்தது அழகிய சிங்கர் தொகுத்திருந்த, "மனதுக்குப் பிடித்த கவிதைகள்'. அவருக்குப் பிடித்திருந்த 100 கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. அதில் எனக்குப் பிடித்திருந்தது 40 ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் ஷண்முக சுப்பையாவின் எதார்த்தத்தைப் பதிவு செய்யும் "உலகம்' என்கிற கவிதை.
 
 அணைக்க ஒரு
 அன்பில்லா மனைவி
 வளர்க்க இரு
 நோயுற்ற சேய்கள்
 வசிக்கச் சற்றும்
 வசதியில்லா வீடு
 உண்ண என்றும்
 உருசியில்லா உணவு
 பிழைக்க ஒரு பிடிப்பில்லாத் தொழில்
 எல்லாமாகியும்
 ஏனோ உலகம்
 கசக்கவில்லை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com