விருந்தில் பாயசம்

விருந்தில் பாயசம்

"அறுசுவை உண்டி' என்பது சங்க காலத்திலேயே தமிழரிடம் வழக்கில் இருந்திருக்கிறது. அந்த அறுசுவை உணவு உடலை வளப்படுத்துவதுடன், உள்ளத்தையும் வளப்படுத்தவல்லது என்பது தமிழர்களின் நம்பிக்கை.

"அறுசுவை உண்டி' என்பது சங்க காலத்திலேயே தமிழரிடம் வழக்கில் இருந்திருக்கிறது. அந்த அறுசுவை உணவு உடலை வளப்படுத்துவதுடன், உள்ளத்தையும் வளப்படுத்தவல்லது என்பது தமிழர்களின் நம்பிக்கை.
 "விருந்து' என்ற நிலையில், அசைவர்கள் ஊன்கறி உண்பதும்; சைவர்கள் சாதாரண உணவுடன் "பாயசம்' சேர்த்துச் சாப்பிடுவதும் நெடுங்கால வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. எல்லோராலும் விரும்பிப் பேசப்படும் "பாயசம்' உண்பதற்கான காரணமும் சங்கப் பாடல் ஒன்றில் பதிவாகியுள்ளது.
 சங்ககால தொண்டை நாட்டிலுள்ள "கரும்பனூர்' என்னும் ஊரில் ஆதித்தன் என்றொரு வள்ளல் இருந்தான். அவனுக்குக் "கரும்பனூர்
 கிழான்' என்ற பெயரும் உண்டு.
 ஒருமுறை, நன்னாகனார் என்னும் சான்றோர் தன் சுற்றத்தாருடன் அவனைக் காணச் சென்றார். அவனும் அவர்கள் அனைவரையும் இனிது வரவேற்று, நல்ல விருந்த
 ளித்து சிறப்பு செய்தான். அவர்கள் அங்கேயே சில நாள்கள் தங்கியிருந்து, நல்விருந்துண்டு மகிழ்ந்திருந்தனர்.
 தாம் அவ்வாறு உண்ட விருந்தின் இனிமையை அப்புலவர் பெருமானாகிய நன்னாகனார் அழகுறப் பாடுகின்றார். "நாங்கள் அவ்வள்ளலிடம் சென்றடைந்த தொடக்க நாள்களில், இறைச்சியும் சோறுமாகிய உணவினைத் தெவிட்டும் அளவிற்கு அவனளிக்க, யாம் உண்டு மகிழ்ந்தோம். பின்பு சில நாள்களில் சற்று சலிப்புத் தோன்றியதால், அச்சலிப்பினை மாற்ற, பால் பெய்து சமைத்த பாயசம் போல்வனவற்றையும், வெல்லப்பாகு கொண்டு சமைத்த இனிய பண்ணிகாரங்களின் கரைசலையும் பருகி மகிழ்ந்தோம்' என்கிறார். இதைச் சுட்டும் புறநானூறு இலக்கியத்தின் பின்வரும் பாடலின் (381) பகுதி சுவையானது:
 "ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
 பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
 அளவுபு கலந்து மெல்லிது பருகி
 விருந்துறுத் தாற்றி யிருந்தெனமாக'
 இப்பாடலுக்கு உரைக் குறிப்பு தரும் ஒளவை துரைசாமி பிள்ளை, "பாலிற் பெய்தவும்' என்பதற்குப் "பால்பெய்து சமைத்த பாயசம்' அதாவது, "பாற்பாயசம்' என்பார். "விருந்து' என்ற நிலையில், இன்றுவரை வழக்கத்திலிருக்கும் "பாயசம்' என்பது நாவுக்கு இனிமையும், செரிமானத்திற்குத் தூண்டுதலும் செய்யவல்லது என்பதை அறிந்து போற்றிவரும் தமிழரின் திறமும் இனியதே!
 
 -முனைவர் ச.சுப்புரெத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com