தமிழ்மணி

இந்த வார கலாரசிகன்

DIN

தமிழ் இதழியல் துறையில் நாங்கள் இருவரும் ஏறத்தாழ சமகாலத்தில் பயணித்திருந்தும்கூட, நானும் கார்ட்டூனிஸ்ட் மதனும் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், மதனின் கார்ட்டூன்களிலும், அவரது எழுத்துகளிலும் ஈடுபாடு கொண்ட  ஆயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவனாக இருந்து வருகிறேன். அவர் எழுதிய "வந்தார்கள் வென்றார்கள்' புத்தகத்தை நூற்றுக்கும் அதிகமான இளைஞர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிறேன்.

கடந்த மாதம்தான் அவரை சந்தித்தேன். இதுவரை நான் சந்தித்த ஓவியர்களும் சரி, கார்ட்டூனிஸ்டுகளும் சரி, தங்களது படைப்புக்குத் தனிமையை விரும்புகிறவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, கார்ட்டூன் வரைபவர்கள், அதற்காக இரவு பகலாய் சிந்தித்து, பென்சிலால் வரைந்து, பலமுறை அடித்துத் திருத்தி கடைசியில் வடிவம் தருபவர்களாகவும்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், மதன் அவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுகிறார்.

நம்மிடம் பேசிக்கொண்டே, சர்வ சாதாரணமாக அவர் ஒன்றன்பின் ஒன்றாக கார்ட்டூன்களை வரைந்து தள்ளும் லாகவம் அவரது தனித்துவம். இந்த கார்ட்டூன் வேண்டாமே என்று சொல்வதற்குள், அதற்குப் பதிலாக இரண்டு மூன்று கார்ட்டூன்களை வரைந்து, இதில் எதையாவது எடுத்துக் கொள்ளுங்கள், என்று அவர் தந்தபோது, வியப்பில் வாயடைத்துப் போனேன்.
""கார்ட்டூன் எதைப்பற்றி இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும், அதை எவ்வாறு பிரசுரிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது ஆசிரியரின் உரிமை. உங்களுக்குத் திருப்தி இல்லாவிட்டால் இன்னொரு கார்ட்டூன் வரைந்து தருகிறேன், அவ்வளவுதானே'' என்று மதன் கூறியபோது, "நிறைகுடம் ததும்பாது' என்கிற பழமொழி நினைவுக்கு வந்தது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக "தினமணி' நாளிதழில் "கார்ட்டூன்' இல்லை என்கிற குறை இருந்தது. கார்ட்டூனிஸ்ட் மதன் அந்தக் குறையைத் தீர்க்க வந்துவிட்டார். "வந்துவிட்டார்' என்று சொன்னால் தவறு. "மீண்டும் வந்துவிட்டார்' என்று சொல்ல வேண்டும்.
""நான் கார்ட்டூனிஸ்ட்டாக அறிமுகமானதே தினமணி கதிரில்தான்'' என்று மதன் கூறியபோது, எனக்கே வியப்பாக இருந்தது. தனது கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, கார்ட்டூனிஸ்ட்டாக மதனை அறிமுகப்படுத்தியதே தினமணி கதிர்தான் என்று அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். ரா.அ. பத்மநாபன் தினமணி கதிரின் ஆசிரியராக இருந்தபோது தொடங்கி, அவருக்குப் பின்னால் சாவி சார் ஆசிரியராகத் தொடர்ந்தபோதும் தினமணி கதிரில் கார்ட்டூன்கள் போட்டு வந்ததாகத் தெரிவித்தார் மதன்.

தினமணிக்கு மதன் திரும்பி வந்தது பெரிதல்ல. தொடங்கிய இடத்துக்கே விரும்பி வந்திருக்கிறார். நான் எட்ட இருந்து வியந்து பார்த்த சக இதழியலாளருடன் கிட்ட இருந்து பயணிப்பது மகிழ்ச்சி தரும் அனுபவம். சொடுக்குப் போடும் நேரத்தில் கார்ட்டூன் போட்டுத் தந்துவிடும் மதனின் வித்தகத்தை நினைத்து நினைத்து மலைக்கிறேன். 


முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்றாலும்கூட,  கல்லூரிப் பருவத்திலிருந்தே  எனக்கு "ஏழிசை வேந்தர்' எம்.கே. தியாகராஜ பாகவதர் மீது ஒருவித ஈர்ப்பு உண்டு. தினமணி கதிரில் தொடராக வெளிவந்த விந்தன் எழுதிய  "பாகவதரின் கதை'தான் அந்த ஈர்ப்பு ஏற்பட்டதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிவந்த புத்தகங்களில் டி.வி. பாலகிருஷ்ணன் எழுதிய "எம்.கே.டி.பாகவதர் இசையும் வாழ்க்கையும்' புத்தகமும் ஒன்று.

""பாகவதர் அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவரைச் சுற்றி ஒளி வீசிக் கொண்டிருந்ததாக உணர்ந்தேன். அந்த இடத்தில் எத்தனையோ விளக்குகள் போடப்பட்டிருந்தாலும், பாகவதர் அவர்கள் அந்த இடத்தைவிட்டு அகன்றதும் ஏதோ ஒரு இருள் கப்பிக்கொண்டது போலத் தோன்றுகிறது.  பொன் நிறமான மேனி. கழுத்தைச் சுற்றி சரிகை மட்டும் தெரியும் மேல் வேஷ்டி. காதுகளிலும் கைகளிலும் மின்னும் வைரங்கள். அழகான சுருட்டை முடி. சிரித்தபடி அவர்  நடந்து வருவதைக் காணும் யாரும் தங்கத்தாலானா உருவம் உயிர் பெற்று வருவது போலவே எண்ணுவார்கள்!''  1959- இல் "நடிகன் குரல்' பத்திரிகை வெளிக்கொணர்ந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் நினைவு மலரில் இப்படி எழுதி இருப்பது எம்.ஜி.ஆர். என்றால், பாகவதரின் புகழும் செல்வாக்கும் எத்தகையது என்பதை நாம் உணரலாம்.

பாகவதர் குறித்த அத்தனை தகவல்களையும், அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் அநேகமான ஒன்று விடாமல் தொகுத்துப் புத்தக வடிவம் தந்திருக்கிறார் பாகவதரின் தீவிர ரசிகரான, அவரை நேரில் பார்த்திருக்கும் டி.வி.பாலகிருஷ்ணன்.  14 திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கும் தமிழகத்தின் முதலாவது "சூப்பர் ஸ்டார்' எம்.கே.தியாகராஜ பாகவதர் தொடர்பான அத்தனை புகைப்படங்களையும் இணைத்திருப்பது தனிச்சிறப்பு. 

அவர் நடித்த படங்களில் பவளக்கொடி,  நவீன சாரங்கதரா, சத்தியசீலன், ராஜமுக்தி ஆகியவை கிடைக்கவில்லை என்றும், பவளக்கொடியின் ஒரே ஒரு பிரதி  புணே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது இந்தப் புத்தகம்.  அது  எண்மப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை திரையுலகம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கட்டாயம் படிக்க வேண்டிய சுவாரசியமான புத்தகம்.  இந்தப் பதிவுக்காக ஓய்வுபெற்ற  இந்தியன் வங்கி  உதவிப் பொது மேலாளர் டி.வி.பாலகிருஷ்ணனுக்கு தமிழகம் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறது. 


சென்னை புத்தகத் திருவிழாவில், நண்பர் வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தொகுத்து வெளியிட்டிருக்கும் ஜெகவீரபாண்டியனாரின் "பாஞ்சாலங்குறிச்சி வீரசரிதம்' புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். அரங்குகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, "அன்னம்' பதிப்பக அரங்கில் கவிஞர் அறிவுமதியை சந்தித்தேன்.

"படித்துப் பாருங்கள்' என்று அவர் தனது "மழைப் பேச்சு' கவிதைத் தொகுதியைத் தந்தார். பார்த்ததும் அங்கேயே பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அதிலிருந்த ஒரு கவிதை கருத்தைக் கவர்ந்தது. 
நமது ஒவ்வொரு சொல்லும்கூட 

முத்தம்தானே... யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.
ஒத்துழைத்த உதடுகளுக்கு நன்றி
முத்தம் எச்சில் சொற்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT