அந்தி முன்னிரவு தொழுகைகள்

பகலின் இரு முனைகளிலும் இரவிலிருந்து ஒரு பகுதியிலும் தொழுகையை நிலைநிறுத்த நினைவுறுத்தும் 11-114 ஆவது வசனத்தில் இரவிலிருந்து ஒரு பகுதியிலும் என்பது
அந்தி முன்னிரவு தொழுகைகள்

பகலின் இரு முனைகளிலும் இரவிலிருந்து ஒரு பகுதியிலும் தொழுகையை நிலைநிறுத்த நினைவுறுத்தும் 11-114 ஆவது வசனத்தில் இரவிலிருந்து ஒரு பகுதியிலும் என்பது சூரியன் மறைந்த பின் தொழும் அந்த மஃரிப் தொழுகையையும் செம்மேகம் மறைந்த பின் தொழும் முன்னிரவு இஷா தொழுகையையும் குறிப்பிடுவதாக முஜாஹித் என்னும் குர்ஆன் விரிவுரையாளர் குறிப்பிடுகிறார். நூல்- ஹக்கானி, காஜின்.
 சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையுள்ள தொழுகைகளை நிலைநாட்டுமாறு கூறும் 17-78 ஆவது வசனத்தில் குறிப்பிடப்படும் இரவின் இருள் சூழும் வரை உள்ள தொழுகைகள் மஃரிப், இஷா. சூரியன் மறைந்து அந்தி துவங்கியபின் தொழுவது மஃரிப். இருள் சூழ்ந்த பின் தொழுவது இஷா என்பதை இருள் சூழும் வரையுள்ள தொழுகைகள் என்ற சொற்றொடர் குறிக்கிறது. இரவில் இருந்தும் சுஜுதுக்குப் பின்னும் இறைவனைப் புகழ புகலும் 50-40 ஆவது வசனத்தில் இரவிலிருந்து என்பதற்கான வமினல் லைலி என்னும் துவக்கச் சொல் மஃரிப், இஷா தொழுகைகளைக் குறிப்பிடுகிறது. 30-17 ஆவது வசனத்தில் வரும் தும்ஸýன என்னும் அரபி சொல்லும் மஃரிப், இஷா தொழுகைகளை குறிக்கிறது. 20-130 ஆவது வசனத்தில் உள்ள அனாவில் லைலி என்னும் அரபி சொற்களும் மஃரிப் இஷா தொழுகைகளைக் குறிக்கின்றன.
 மஃரிப் தொழுகையை ஈசா நபி முதலில் தொழுதார்கள். கண்களால் பார்த்தறிவதில் வலது, இடது முன்னுள்ள மூன்று திசைகளில் இருப்பதை நடப்பதைப் பார்த்து அதற்கேற்ப நம் நடையை போக்குவரத்தைப் பொருத்தமாக்கி கொள்ளும் புண்ணியத்திற்கு நன்னயமான நன்றியாக மஃரிபில் மூன்று ரக் அத்துகள் தொழப்படுகின்றன.
 பொழுது அடைந்து அதன் திறைக்குள் மறைந்பொழுது மாநபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுதார்கள். அறிவிப்பவர் - ஸல்மதுப்னு அக்வஃ (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ. பழகுவதற்காக எய்யப்படும் அம்பை எய்து அந்த அம்பு போய்விழும் இடம் தென்படும். அந்த அந்தி நேரத்தில் மாநபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுததாக கூறுகிறார் ராபிஃ இப்னு கதீஜ். நூல்- புகாரி, முஸ்லிம். உணவிற்காகவோ அல்லது வேறு எதற்காகவும் தொழுகையை பிற்படுத்தாதீர்கள் என்ற பெருமானார் நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை நவில்கிறார் ஜாபிர் (ரலி) நூல்- அபூதாவூத். தொழுகையை அதன் துவக்க நேரத்தில் தொழுவது செயல்களில் சிறந்த செயல் என்று செம்மை நபி (ஸல்) அவர்கள் செப்பியதை உரைக்கிறார் உம்மு பர்வஃத் (ரலி) நூல் அபுதாவூத். சிறிய பெரிய விண்மீன்கள் தென்படும் வரை பிற்படுத்தாமல் மஃரிப் தொழுகையை தொழ தோழமை நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியதை அறிவிக்கிறார் மரஸத் இப்னு அப்துல்லாஹில் யஜனிய்யி. நூல்- அபூதாவூத்.
 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் 7 ஆவது 6 ஆவது அத்தியாயங்களை ஓத கேட்டதாக ஜைதுப்னு ஸாபித் (ரலி) அவர்கள் சொன்னதாக அறிவிக்கிறார் மர்வான் இப்னுல்ஹகம் நூல்- அபூதாவூத். மாநபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் 77 ஆவது அத்தியாயத்தை ஓதியதைச் செவியுற்றதாக உம்முல் பள்ளு பகர்வது புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸஈ நூல்களில் பதிவாகியுள்ளது. மாநபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் 7 ஆவது அத்தியாயத்தை இரு ரக்அத்துகளில் பிரித்து ஓதியதாக அறிவிக்கிறார்கள் அன்னை ஆயிஷா (ரலி) நூல்- நஸஈ. இறுதி தூதர் இனிய நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் 52 ஆவது அத்தியாயத்தை ஓதியதைக் கேட்டதாக அறிவிக்கிறார் ஜுபைர் இப்னு முத்இம் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸஈ. இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மக்காவில் மஃரிப் தொழுகைகளில் 112 ஆவது அத்தியாயத்தை ஓதியதை அறிவிக்கிறார் அபூஉஸ்மான்னந்நஹ்தீ நூல் - அபூதாவூத். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் 44 ஆவது அத்தியாயத்தை ஓதினார்கள் என்று அறிவிக்கிறார் அப்துல்லா இப்னு உத்பதுப்னு மஸ்வூத். நூல் -நஸஈ. மஃரிப் தொழுதவருக்கு மறுமையில் நன்மை தீமைகளை எடையிடும் மீஸான் தராசில் நன்மையின் எடை கூடும்.
 கேட்டறிதலில் முன்னால், பின்னால், வலது, இடது ஆகிய நான்கு புறமும் எழும் ஒலிகளைக் கேட்டு அதற்கேற்ப நம் செயல்களைச் செம்மையாக்கிக் கொள்ளும் செய்நன்றி மறவாது மெய்யாகவே மேலோன் அல்லாஹ்விற்கு நன்றி நவிலுதற்காக இஷா தொழுகையில் நான்கு ரக்அத்துகள் தொழப்படுகின்றன. இஷா தொழுகையை முதலில் மூசா நபி தொழுதார்கள்.
 இஷா தொழுகையில் இனிய நபி (ஸல்) அவர்கள் 93 ஆவது அத்தியாயத்தையும் அதைப்போன்ற அத்தியாயங்களையும் ஓதியதைப் புகல்கிறார் புரைதா (ரலி) நூல் - திர்மிதீ, நஸஈ. ஒரு பயணத்தில் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகை ஒரு ரக்அத்தில் 95 ஆவது அத்தியாயத்தை ஓதியதாக பகர்கிறார் பராஃ (ரலி) நூல் புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸஈ.
 தொய்வின்றி தொடர்ந்து ஐங்கால தொழுகைகளைத் தொழுது எக்காலமும் ஏகன் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com