வெள்ளிமணி

குழவி கல் போன்று உருவான அம்மன்!

DIN

சேலம் செவ்வாய்ப்பேட்டை என்று அழைக்கப்படும் செவ்வை நகர் பகுதி கி.பி.1792 -ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் வசம் இருந்தது. பேட்டை என்றால் தொழில்களால் சிறப்புப் பெற்ற ஊர் என்று பொருள். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் இங்கு சந்தை கூடும். இதை மங்களபுரி என்றும் சொல்வார்கள். இந்த சந்தை கூடும் இடத்துக்கு இரண்டு உறவினர்கள் செவ்வை நகர் மறு எல்லையில் இருந்து தவறாமல் வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வழக்கமாக வாங்கிச் செல்வார்கள். தாங்கள் கொண்டு செல்லும் துணிகளை சந்தையில் விற்று விடுவார்கள்.
ஒரு சமயம் தொடர்ந்து மூன்று செவ்வாய்க்கிழமைகளில் குழவி உருவமுள்ள கல் ஒன்று நடைபாதையில் தடுக்கியது. இவர்கள் அந்தக்கல்லை கைகளால் எடுத்து வேலி ஒரத்தில் போட்டு விடுவார்கள். நான்காவது வாரத்தில் அப்படியே செய்து சந்தையிலிருந்து மாலையில் திரும்பும்போது அதே கல் மீண்டும் தடுக்கியதால் அந்தக் கல்லை தலையில் சுமந்து கொண்டு வந்து தற்போது கோயில் உள்ள இடத்தில் போட்டு விட்டார்கள். அந்த இடத்தில் வேப்பமரம் ஒன்று இருந்தது. அன்று இரவு நல்ல மழை! இவர்கள் கைலாந்தர் விளக்கு எடுத்துக் கொண்டு நான்கு புறங்களில் குச்சிகள் நட்டு குழவி கல் நனையாமல் இருக்க துணி ஒன்றை கட்டியதாகச் சொல்லப்படுகிறது.
அன்றிரவு தெய்வ சிந்தனை மிக்க மூதாட்டி ஒருவருக்கு கனவு தோன்றி தான் மாரியம்மன் என்றும், அங்குள்ள நிழலில் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று அன்னை பராசக்தி தெரிவித்திருருக்கிறாள். அந்த மூதாட்டி மூலம் இந்த அருள் வாக்கை பலர் அறிந்தார்கள். கிராம தேவதையாக அம்மன் சக்தி வெளிப்பட்டிருக்கிறது. 1850 -ஆம் ஆண்டு அந்த கல் சிலை இருந்த பாகம் சுற்றிலும் நான்கு பக்க சுவர்கள் எழுப்பி, மாடம் உண்டாக்கி அம்மனை எழுந்தருளச் செய்து அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை மேன்மை அடைய, திருவிழா நடத்தி வழிபடத் தொடங்கினார்கள்.
சேலம் நகராட்சி ஆனபிறகு 1875-76- ஆம் ஆண்டில் கோட்டை செவ்வாய்ப்பேட்டையில் பிரதான சாலை போட அப்பொழுது இருந்த மாவட்ட ஆட்சியர் லாங்கி உத்தரவிட்டு வேலையை தொடங்கினார். வேப்பரமரத்தடியில் அம்மன் கோயில் கொண்ட இடமும், சுற்று புறமும் அரசாங்க நிலமாக இருந்தபடியால் பாதையை அவ்வழியில் கொண்டு செல்லவும், இருந்த பாதையை அகலப்படுத்தவும் இந்த இடம் தேவைப்படுகிறதென்று கோயிலை அப்பால் தள்ளி வைத்து விடலாமென்றும் அதிகாரிகள் தீர்மானித்தார்கள்.
அப்பொழுது பிரபலமாக இருந்த சுந்தரம்செட்டி என்பவரும் மற்றும் சில முக்கியஸ்தர்களும் விஷயமறிந்து அம்மன் இருக்கும் இடம் சுற்றிலும் அரசாங்க வசமாகிவிட்டால் வழிபாட்டுக்கு தடை வரும் என்று எண்ணி இரவோடு இரவாக தாங்களே கோயில் சுவரை இடித்து தள்ளி அருகில் கிடந்த கருங்கல் படிகளைக் கொண்டு சிறு பிரகாரமாக நிலையாக செய்து விட்டார்கள். சுற்றிலும் வியாபாரிகள் கடைகளைக் கட்டி வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
அதிகாரிகள் வந்து பார்த்தபோது கருங்கல் கட்டடத்திற்குள் அம்மன் குடிகொண்டு விட்டதை அறிந்து சினமுற்று மாவட்ட ஆட்சியாளரிடமும் தெரியப்படுத்த, அவர் சுந்தரம் செட்டி மீதும் அவருடன் ஒத்துழைத்தவர்கள் பேரிலும் வழக்கு போட்டார்கள். சுந்தரம் செட்டி தலைமறைவாகி விட்டதால் அவர் பேரில் வாரண்ட் பிறப்பிக்க, அதிகாரிகள் கையில் அகப்படாது கோர்ட்டில் அவர் சரணடைந்தார். தான் சுயநலத்துக்காக கோயில் கட்டவில்லை என்றும் அம்மன் குடி கொண்டிருக்கிற இடமும் சுற்றுப்புறமும் பொது இடமென்றும் தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாத்தியம் இல்லை என்றும் வட்டார மக்களின் நன்மைக்குத்தான் கோயில் அமைக்கப்பட்டதென்றும் கூறினார். அப்போது அம்பிகை மாரியம்மன் சிறு பெண் உருவத்தில் மஞ்சள் உடைகள் அணிந்து கோர்ட்டிலே குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் குற்றிவாளிகள் அல்ல என்றும் சாட்சியம் அளித்ததாக கோயில் வரலாறு சொல்லுகிறது. இதனால் சுந்தரம் செட்டி உட்பட அனைவரும் விடுதலையானார்கள் என்றும் கூறப்படுகிறது.
நாளடைவில் பாதை வேறு பக்கம் தள்ளி போடப்பட்டது. கோயில் சுற்றிலும் குடியிருப்புகளும், கடைகளும் தோன்றலாயின. பிற்காலத்தில் அம்மன் சிலை நன்கு வடிமைக்கப்பட்டு முன்பு இருந்த அம்மன் குழவி இருந்த இடத்தின் அருகில் வைக்கப்பட்டது. இப்போது இந்த பங்காரு மாரியம்மன் ஆளுகைக்குட்பட்டு இருக்கும் செவ்வை நகர் எங்கும் தெய்வீக மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது.
அம்மை நோய் போன்றவற்றால் அவதியுறுவோர், அம்மனிடம் வேண்டிக்கொண்டு புனிதநீர் வாங்கிச் சென்று உடலில் தெளித்துக் கொண்டால் குணமடைவர். அம்மன் அருளால் நோய் நீங்கப் பெற்றபின் உருவாரங்கள் ஒப்படைப்பர். உருள்தண்டம் நேர்த்திக்கடன் சகஜமாக நடைபெறுகிறது. எட்டுப்பேட்டை என்று அழைக்கப்படும் சேலம் மாநகரில் உள்ள எட்டு மாரியம்மன் திருக்கோயில்களில், திருத்தேர் கொண்டுள்ளது செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் திருக்கோயில் தான். இக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு வரும் 24-07-2018 பூச்சாட்டல், 26-07-2018 கம்பம் நடுதல், 30-07-2018 கொடியேற்றம், 07-08-2018 அலகு குத்துதல், சக்தி அழைப்பு, உருள் தண்டம், 08-08-2018 பொங்கல் வைத்தல், 10-08-2018 திருத்தேரோட்டம், 14-08-2018 சத்தாபரணம்-18-08-2018 விடையாற்றி ஊஞ்சல் விழா ஆகியவை நடைபெறுகிறது.
சேலம் மாநகரின் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் செவ்வாய்ப்பேட்டையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
தொடர்புக்கு: 99446 81065.
- பொ.ஜெயச்சந்திரன்

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT