தட்சிணாயன புண்ணியகாலம்!

நம் முன்னோர் பருவ காலத்தைக் கருத்தில் கொண்டு காலத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்தனர்.
தட்சிணாயன புண்ணியகாலம்!

நம் முன்னோர் பருவ காலத்தைக் கருத்தில் கொண்டு காலத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்தனர். பதினைந்து நிமிஷம் கொண்டது ஒரு காஷ்டை. முப்பது காஷ்டை கொண்டது ஒரு கலை. முப்பது கலை கொண்டது ஒரு முகூர்த்தம். முகூர்த்தத்தை இரண்டு நாழிகையாகக் கொண்டனர். முப்பது முகூர்த்தம் கொண்டது பகலும் இரவும் கூடியது ஒரு நாள். அதாவது அறுபது நாழிகை. பதினைந்து நாள் கொண்டது ஒரு பட்சம். இரண்டு பட்சம் கொண்டது ஒரு மாதம். ஆறு மாதம் கொண்டது ஒரு அயனம். இரண்டு அயனம் கொண்டது நமக்கு ஒரு வருடம். இதுவே தட்சிணாயனம் மற்றும் உத்தராயனம் எனப்படும். இவ்வாறு இரு அயனங்கள் கொண்டது தேவர்களுக்கு ஒரு நாள்.
பூமியின் சுழற்சியின் விளைவாக சூரியன் வடக்காகவும் தெற்காகவும் நகர்வதாக நமக்குத் தோன்றுகிறது. ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் தொடக்க காலம். இதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். ஆண்டு முழுவதும் உற்சவங்கள் திருக்கோயில்களில் கொண்டாடப் பட்டாலும், வீட்டில் நடைபெறும் பண்டிகைகள் தட்சிணாயனத்திலேயே அதிகம் கொண்டாடப்படுகின்றன.
தட்சிணாயனத்தின் தொடக்க நாளே பண்டிகைதான் (17.7.2018). இது ஒரு பண்டிகை மாதம். இம்மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியுமே புனிதமான கிழமைகள். ஆடி வெள்ளியில் பாம்பு புற்றுக்கு பூஜைசெய்து நாகம்மனுக்கு பால் ஊற்றினால், பிள்ளைகளுக்கு படிப்பும் ஆயுளும், விருத்தியாகும் என்பது ஆண்டாண்டுகால உண்மையாகும். ஆடிப் பூரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். பொதுவாக எல்லா திருக்கோயில்களிலும் அம்பிகை அன்று வளைகாப்பில் ஜொலிப்பாள்.
வரலட்சுமி விரதத்தை சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்து அனுஷ்டிக்கின்றனர். சகல செüபாக்கியங்களையும் தரும் லட்சுமியை (அஷ்டலட்சுமி) வணங்குவதால் வரலட்சுமி விரதம் (வரம் தரும் லட்சுமி விரதம்) என்றழைக்கப்பெறுகின்றது.
முழுமுதற் கடவுளான ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக நாடெங்கும் இல்லந்தோறும் நடக்கும் இனிய பூஜையாகும்!
கிருஷ்ண ஜெயந்தி, ஜன்மாஷ்டமி என்றெல்லாம் அழைக்கப்படும் கிருஷ்ணரின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நாள் ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்வது சக்தியை வழிபடும் நவராத்திரி. உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். இத்திருநாளில் சக்தியை பல ரூபங்களில் வழிபடுகிறோம்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி, பல நாடுகளில் அரசாங்க விடுமுறையாக விடப்பட்டுள்ளது. தீமையை ஒழித்து மக்களைக் காக்கும் திருவிழா இது. ஈசன், திருமாலுக்கும் பிரம்மனுக்கும் வானுக்கும் மண்ணுக்கும் ஜோதிப் பிழம்பாகக் காட்சி கொடுத்த திருநாள் திருக்கார்த்திகை. எங்கும் ஒளி வெள்ளமாக காணப்படும் இந்த நாள் தமிழ் கடவுளான முருகனுக்கும் உகந்த நாளாகும். தன் பக்தையான ஏழை பெண் இட்ட பிட்டுக்கு மண் சுமந்து, மாணிக்கவாசகரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றிய திருநாளான திருவாதிரையை மார்கழி மாதத்தில் கொண்டாடுகிறோம்.
கோலாகலமாக பல பண்டிகைகளை தட்சிணாயனத்தில் கொண்டாடிவிட்டு தை முதல்நாள் தித்திக்கும் பொங்கலுடன் உத்தராயனத்தில் கால் வைக்கிறோம். இந்த தட்சிணாயன காலத்தில் தான் நம் முன்னோர்களுக்கு விசேஷமாக திதி கொடுக்கும் நாளான மஹாளய பட்சம் வருகிறது. மஹாளய பட்சம் என்பது ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை முதல் அமாவாசை வரை 15 தினங்களுக்கு இறந்த பித்ருக்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது. இறந்து போனவரின் திதி தெரிந்தால் அந்த திதி தினத்தன்றும், தெரியாவிட்டால் மஹாளய அமாவாசை தினத்தன்றும் பித்ருக்கள் நற்கதி அடைய திதி கொடுக்கவேண்டும் என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது. இதைச் செய்வதன் மூலம் பித்ருக்களின் ஆசி நமக்குக் கிடைக்கும்.
சில வைணவத் திருத்தலங்களில் இறைவனை வழிபட உத்தராயன வாசல் என்றும் தட்சிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயன வாசல் வழியாகவும், ஆணி முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.
- என். பாலசுப்ரமணியன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com