சாதனை பெற வைக்கும் சந்திரசூடேஸ்வரர்!

முற்காலத்தில் தென்பெண்ணை நதிக்கரையில் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார்  தர்மதேவன்.
சாதனை பெற வைக்கும் சந்திரசூடேஸ்வரர்!

முற்காலத்தில் தென்பெண்ணை நதிக்கரையில் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார்  தர்மதேவன். அப்போது காட்சியளித்த  ஈசனிடம் தன்னை வாகனமாக ஏற்று கொள்ள வேண்டினார் தர்மதேவன். அதன்படி தர்மதேவனை கம்பீரமான காளை வடிவமாக மாற்றி, தன் வாகனமாக ஏற்றருளினார் எம்பெருமான். இதனால் மிகமகிழ்வடைந்த தர்மதேவன், கைலாயத்தைப் போன்று மலையை உருவாக்கி இறைவன் இங்கு  நீங்காது தங்கியிருக்க வேண்டினார். 

அவ்வாறே, ரிஷப வாகனத்தில் விருஷபாசலத்தை உருவாக்கிய இறைவன், தான் சில காலம் அங்கே தங்கியிருப்பதாக   திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி, பத்ராசலத்தில் தங்கிய சிவபெருமான் பார்வதிதேவியை அங்கு அழைத்துவர திருவுளம் கொண்டார். ஒரு நாள் கைலாயத்தில் கெளரி அம்மையுடன் வனங்களில் சஞ்சரித்த போது ஓரிடத்தில் அடர்த்தியான செடிகளுக்கிடையில் சென்று மறைந்தார். சில நிமிடங்களுக்கு கெளரியின் கண்களுக்கு தென்படுவதும் பின்னர் மறைவதுமாக ஈசன் விளையாடினார். கெளரி தன்னை அடையாளம் காண இயலாத வண்ணம்,  உடல் முழுவதும் நவரத்தினங்கள் மின்னும் படியான உடும்பின் வடிவம் எடுத்தார் ஈசன். 

அதிசயமான அவ்வுடும்பை பிடிக்கும் நோக்குடன் தன் தோழிகளுடன் காடு, மேடுகளை கடந்து சென்றாள் கெளரி அம்மை. அம்மை நின்றால், நின்றும், தொடர்ந்தால் ஓடியும் சென்றது மரகத நிற உடும்பு. அதைப் பிடிக்க யத்தனித்து தீண்ட, தேவியும் அம்மரகத நிறம் ஆயினள். அம்மையின் தோழிகள் களைப்பும், தாகமும் அடைந்ததால், நீர் வேண்டி கானகம் முழுதும் அலைந்தனர். தண்ணீர் எங்கும் காணக் கிடைக்காததால்,  அவர்கள் தாகம் தீர்க்க வாவியை உருவாக்கினாள். அக் குளத்தில் தேவி நீராட இறங்கினாள். அவளது ஸ்பரிசம் பட்டதும் குளத்து நீர் பசுமை நிறங்கொண்டதாக மாறியது. இதனால் அக்குளம்  பச்சைக்குளம் என அழைக்கப்பட்டது. அவர்கள் களைப்பு நீங்கிய பின்னர், உடும்பானது தன் மேனி மின்ன வெளிப்பட்டு, தேவியை தன்னைப் பின் தொடர வைத்து மலை உச்சிக்கு அழைத்துச் சென்றது. அம்மையானவள் அதனை பிடிக்க யத்தனிக்கும் போது, அங்கு தவம் இருந்த முனிவர்கள் முத்கலன்,  உச்சாயணன் ஆகிய இருவரும் உடும்பைப் பிடிக்க யத்தனித்தனர். உடனே உடும்பு மறைந்தது. 

உடும்பு மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேவியிடம் அவருடைய தோழிகள், அம்முனிவர்களின் கூச்சலினாலேயே உடும்பு மறைந்தது என்று தெரிவித்தனர். இதனால் கோபம் கொண்ட தேவி, அம்முனிவர்களில் ஒருவரை ஊமையாகும்படியும், மற்றவரை செவிடாகும்படியும் சாபம் அளித்தாள். பின்னர், தன்னை அறியாமல் சிவபக்தர்களை சினந்து, சாபமளித்ததற்காக வருந்த, அப்போது ஈசன் அங்கு லிங்க வடிவில் எழுந்தருளினார். கெளரியும், முனிவர்களும் ஈசனை வணங்கினர். அப்போது தர்மதேவனுக்கு அளித்த வாக்குப்படி, சிலகாலம் இப்பத்ராசலத்தில் கெளரியுடன் வசிக்கும் பொருட்டே அம்மையை அங்கே உடும்பு வடிவில் அழைத்து வந்ததாக இறைவன் தெரிவித்தார். 

முனிவர்கள் அவரை சாபவிமோசனம் அளிக்கும்படி வேண்ட,  இம்மலையின் மீது  உடும்பு  வடிவில் தன்னைக் கண்ணுறும் போது சாபவிமோசனம் கிடைக்கும் என்றருளினார். அதன்படி,  மார்க்கணன் என்ற வேட்டுவருக்கு இரட்டை மக்களாக பிறந்தனர் இம்முனிவர்கள். இவர்கள் பிறவி ஊமையும் செவிடுமாக இருந்தனர்.  இரட்டையர்களான இவ்வேட்டுவர்கள் ஒரு நாள் கானகத்தில் வேட்டையாடச் செல்லும்போது பத்ரகிரியில் உடும்பு வடிவில் இறைவன் காட்சியளிக்க, தங்கள் சாபம் நீங்கப் பெற்றனர்.  

அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் திருக்கோயிலின் தல புராணம் வடமொழியில் உள்ள ஸ்ரீபிரமாண்ட புராணத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது. இவ்வாலயத்தில் அஷ்டதிக்கு பாலகர்கள் தங்கள் வாகனங்களுடன் பிரகாரத்தின் எட்டு மூலைகளிலும் அமைந்திருப்பது இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும். இத்திருக்கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஜலகண்டேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. பக்தர்கள் தோல் நோய்கள் குணமாக வேண்டிக்கொண்டு வேண்டுதல் நிறைவேறியதும் உப்பும், மிளகும் இட்டு பிரார்த்தனை செலுத்துகிறார்கள்.  இத்தல இறைவன் சந்திரசூடேஸ்வரரை வழிபடுவதால் ஒவ்வொரு மனிதரையும் சாதனை பெற வைப்பார் என்பது ஜதீகம். 

"திருப்புவனமல்ல பர்வதராஜ அத்தியாழ்வார்' என்னும் ஒய்சாள மன்னர், இக் கோயிலை நிர்மாணித்தாகவும்;  கி.பி. 1261 -இல் கோயில் திருப்பணி நடைபெற்றுள்ளது என்றும் இவ்வாலய கல்வெட்டு தெரிவிக்கிறது. அழகிய பெருமாள் அத்திமல்லன்காரு இத் திருக்கோயிலை நவீனப்படுத்தினான் என்ற செய்தியும் உள்ளது. மேலும் இவ்வாலயம், கி.பி. 1261- ஆம் ஆண்டுக்கு முன்பே கோபுரங்களோடு கூடிய கோயிலாக இருந்திருக்கிறது என்பதும் தெரியவருகிறது. 

சோமவார பூஜைகள், பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, பெளர்ணமி, ஆடியில் நவசண்டி யாகம்,  மார்கழி தனூர் பூஜைகளும் நடைபெறுகின்றன. மாசி மாதம் இங்கு நடைபெறும் தேர்த்திருவிழா சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  

வழித்தடம்:  ஓசூர் நகரிலிந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் 1 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. 

தொடர்புக்கு:  97150 37810/ 04344-293311.             

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com