சாபங்கள் தீர்க்கும் அத்தீஸ்வரர்!

மாபெரும் வெற்றிகளை தம் வசமாக்கிக் கொண்ட மன்னர் பெருந்தகைகள் அதற்கெனவே பல திருக்கோயில்களை உருவாக்கி தாங்கள் வழிபட்டதோடல்லாமல் மக்களும் வழிபட வழிவகை செய்திருந்தனர்.
சாபங்கள் தீர்க்கும் அத்தீஸ்வரர்!

மாபெரும் வெற்றிகளை தம் வசமாக்கிக் கொண்ட மன்னர் பெருந்தகைகள் அதற்கெனவே பல திருக்கோயில்களை உருவாக்கி தாங்கள் வழிபட்டதோடல்லாமல் மக்களும் வழிபட வழிவகை செய்திருந்தனர். பிற்காலத்தில் வழிபாடுகள் குறைந்து பல கோயில்கள் மண்ணில் புதைந்து மண்மேடாகிப் போயின.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், வு.அத்திப்பாக்கம் என்ற கிராமத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் மிகவும் சிறப்புற வழிபாடுகள் நடைபெற்று அருள்பாலித்து வந்த சிவன்கோயில் அந்நிய படையெடுப்புகளால் சிதைக்கப்பட்டு இருந்தது. மண்மேடு மூடியிருந்த கிணற்றுமேட்டில் தோண்டும்போது எம்பெருமான் சிவனின் திருமேனி கிடைக்கப்பெற்றது.
திருவண்ணாமலையிலிருந்து  திருக்கோவிலூர் செல்லும் வழியில் 10 கி.மீ. தூரத்தில் இடபுறமுள்ள வு. அத்திப்பாக்கம் கூட்டு சாலையிலிருந்து 1 கி.மீ, தூரம் உள்ளே சென்றால் வு.அத்திப்பாக்கம் கிராமம் உள்ளது.

வு.அத்திப்பாக்கத்தில் உள்ள ஆரோக்கிய அன்னை மருத்துவமனைக்கு வடதிசையில் வயல்வெளியில் இடதுபுறத்தில் ஒரு கிணறு ஒன்று பாழடைந்து முட்புதர்கள் மூடியிருந்த பகுதியின் மத்தியில் தரையில் லிங்கத்தின் அடிப்பாகமும் பீடத்தின் அடிப்பகுதியில் சாய்ந்த நிலையிலும் காணப்பட்டது. அங்கு கோயில் அமைந்ததற்கான அடிச்சுவடுகள் ஏதுமில்லை. தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இவ்வூரில் உள்ள வயல்களின் நடுவில் ஒரு பெரிய உருண்டை வடிவமான பாறை ஒன்றுள்ளது. இதை இவ்வூர் மக்கள் "கோட்டாங்கல்லு' என்று அழைக்கின்றனர். இக்கல்லில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்றுள்ளது. இந்தக் கல்வெட்டு குறித்த செய்தி, கல்வெட்டு ஆண்டறிக்கை எண். 381-1937-38 -ஆம் ஆண்டில் பதியப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு இறையூரான் ராஜராஜ சேதிராயன் பல்லவராயன் வன்னியராயன் என்பவரின் மகன் பெரியுடையான் ராஜராஜ கோவனராயன் பல்லவராயன் என்பவன் ஒரு குளத்தை வெட்டினான் என்ற செய்தி காணப்படுகிறது.

கோட்டாங்கல்லு பாறையின் தொடர்ச்சி சற்று முன்னோக்கி சென்றால்  வு.அத்திப்பாக்கம் பெரிய ஏரியின் வாய்க்கால் பகுதியின் பக்கம் வறண்டு தூர்ந்த நிலையில் ஒரு பெரிய குளம் உள்ளது. இவ்வூர் மக்கள் இக்குளத்தை பார்வதி குளம் என்று அழைக்கின்றனர். கல்வெட்டில் குறிக்கப்பெறும் குளம் இதுவாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

இக்குளத்தினுள் இறங்கும் வழியில் தரையில் தலையும், பாதத்தின் பீடமும் உடைந்த நிலையில் ஒரு சிலை காணப்படுகிறது. இது பூதேவியின் சிற்பம் என்று தொல்லியல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சிலை 12-13 -ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

முற்காலத்தில் சுவாமியின் பெயர் ஸ்ரீநாகராஜன் என்றும் அம்பிகையின் பெயர் ஸ்ரீபரிமள சுகந்த நாயகி என்றிருந்தது தற்போது மருவி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அத்தீஸ்வரர் என்றழைக்கப்படுகிறது. அத்திக் காடுகள் சூழ்ந்த இடத்தில் இத்திருக்கோயில் அமைந்திருந்தது என்று தெய்வ பிரசன்னம் மூலம் தெரிய வருகிறது. மேலும் இக்கோயில் ஊருக்கு வடமேற்கிலோ அல்லது தென்மேற்கிலோ அமைந்திருந்ததாகவும், இருநிலை விமானமாக அமைந்த கோயிலாகவும் இருந்திருக்கும் என்றும் கோயிலுக்குள் சர்ப்பங்கள் அதிகமாக இருந்ததால் பூஜைகளின்றி கோயில் ஷீனமாகி விட்டதாகவும், சுமார் 450 ஆண்டுகளாக பூஜைகளின்றி கோயில் இருந்ததாகவும் தெய்வ பிரசன்னம் தெரிவிக்கிறது.

சில ஆண்டுகளாக இந்த சிவலிங்கத்தை கிணற்று மேட்டியிலிருந்து கொண்டு வந்து ஒரு கொட்டகை அமைத்து, ஊர் மக்களால்  பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

ஊர் மக்கள் முயற்சி எடுத்து தற்போது திருப்பணி வேலைகள் துவக்கப்பட்டு கடைகால் போடப்பட்டுள்ளது. கருங்கல் கோயிலாக கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிராமண சாபம் பெற்றவர்கள் இத்தலத்தில் வழிபட பிராமண சாபம் நீங்கும், கணவன் மனைவிக்குள் தாம்பத்திய சுகம் குறைந்திருந்தால் இங்குள்ள அம்பிகையை வழிபட தாம்பத்தியத்தில் சுகம் கிடைக்கும்.

திருவண்ணாமலையிலிருந்து 24 கி.மீ. தூரத்திலும், திருக்கோவிலூரிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் வு.அத்திப்பாக்கம் அமைந்துள்ளது. அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இயங்குகின்றன.

இவ்வாலய திருப்பணியில் பக்த கோடிகள் மனமுவந்து ஈடுபட்டு செய்யும் உதவிகள் அவர்களது பல தலைமுறைகளுக்கும் புண்ணியம் சேர்க்கும்.              
தொடர்புக்கு  :  99623 20614/  73972 66006.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com