பொருநை போற்றுதும்! - 14

வீரவநல்லூருக்கு அருகிலிருக்கும் மற்றுமொரு சிற்றூர், காருகுறிச்சி. இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர், பலகாலம் மைசூருவை இருப்பிடமாகக் கொண்டதால், இவருடைய பெயரோடு "மைசூரு' ஒட்டிக்கொண்டது
பொருநை போற்றுதும்! - 14


வீரவநல்லூருக்கு அருகிலிருக்கும் மற்றுமொரு சிற்றூர், காருகுறிச்சி. இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர், பலகாலம் மைசூருவை இருப்பிடமாகக் கொண்டதால், இவருடைய பெயரோடு "மைசூரு' ஒட்டிக்கொண்டது காருகுறிச்சி கோட்டுவாத்தியம் கே.எஸ். நாராயண ஐயங்கார் (மைசூரு நாராயண ஐயங்கார் என்றால்தான் பலருக்கும் புரியும்). 

ஸ்ரீனிவாச ஐயங்கார் "சீவரமங்கை ஆகியோரின் தவப்புதல்வனாக 1903 -ஆம் ஆண்டு ஜனவரி 25 -ஆம் நாள் தோன்றிய இவருக்கு, இவர்தம் பெற்றோரின் இசை ஆர்வம் இளமையிலேயே பற்றிக் கொண்டது. பத்தமடை பள்ளிக்கூடத்தில் பயின்றார். இருப்பினும், இசை ஈடுபாடு, பொதுக் கல்வியைப் பின்னுக்குத் தள்ளியது. ஓவியத்திலும் புகைப்படக் கலையிலும் திறன் பெற்றார். எனினும், சில காலத்திற்குள்ளாகவே அவற்றையும் விடுத்து முழுநேர இசைக் கலைஞர் ஆனார். 

கோடகநல்லூர் சுப்பையா பாகவதரிடம் இசை பயின்றபோது, வாய்ப்பாட்டோடுகூட, கோட்டு வாத்தியத்திலும் பயிற்சி பெற்றார். கோட்டுவாத்தியத்தின் இசையெழிலும் கமகமுடிச்சுகளும் தோற்றுவித்த வசீகரத்தில் கட்டுண்டு, திருவிடைமருதூர் சகா ராமராவ் அவர்களின் சீடரானார் (அதே சமயத்தில், சகா ராமராவிடம் இசை பயின்றவர் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்). 
25 வயதிற்குள்ளாகவே பெரும் புகழ் பெற்ற இவருடைய இசை, திருவனந்தபுரம், மைசூரு சமஸ்தான அதிபதிகளையும் ஜெய்பூர், குவாலியர் மகாராஜாக்களையும், ஹைதராபாத் நிஜாமையும், தேசத் தலைவர் பலரையும் வசப்படுத்தியது. மகாத்மாவும் நேருஜியும் தாகூரும் சுவாமி சிவானந்தரும் நாராயண ஐயங்காரின் சங்கீதச் சுவைஞர்கள் ஆனார்கள். 

கச்சேரி ஒன்றைக் கேட்க நேர்ந்த வெலிங்டன் பிரபுவும் அவருடைய மனைவியும், பிற வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு அங்கேயே அமர்ந்தார்கள். இவருடைய கையில் கோட்டு வாத்தியம் ஒரு கருவியன்று; மனித உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் குரலாகவே அது மாறிவிட்டது' என்று பாராட்டினார் சரோஜினி நாயுடு. 

இவர் வாசிக்கும் அழகில் மயங்கி, இந்த வாத்தியத்தைச் சிலகாலம் இவரிடம் கற்றுக் கொண்டார் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர். வி.வி. சடகோபன் இவரிடம் வாய்ப்பாட்டு கற்றார். 

மைசூரு ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்ட நாராயண ஐயங்காருக்கு, "நாதபிரம்ம வித்யா வாரிதி',  'கோட்டு வாத்தியக் கலாநிதி', "கோட்டு வாத்திய சாம்ராட்' போன்ற பட்டங்கள் ஆபரணங்களாயின. 

நாராயண ஐயங்காரைப் பார்த்துப் பரவசமாகி கோட்டு வாத்தியத்தைப் பயின்றவர்கள் பலருண்டு. இருப்பினும், இவருடைய பிரதான சீடர், இவருடைய மகன் திரு. நரசிம்மன் எனலாம். 

நரசிம்மன் அவர்களின் புதல்வர், திரு ரவிகிரண், பிறவி இசை மேதை. கோட்டு வாத்தியம் என்று பின்னாட்களில் அழைக்கப்பட்டாலும், இக்கருவியின் ஆதிநாமம் "விபஞ்சி' அல்லது "சித்ரவீணை' என்றே நரசிம்மனும் ரவிகிரணும் கருதுகிறார்கள். ஆகவே, சித்ரவீணை என்றே கூறிவருகின்றனர். நாராயண ஐயங்காரின் பேரக்குழந்தைகளான ரவிகிரண், சசிகிரண், கிரணாவளி, கணேஷ் ஆகியோரின் வழியாக காருகுறிச்சி வம்சாவளி தொடர்கிறது. 

காருகுறிச்சி என்றவுடனே பளிச்சிடுகிற மற்றொரு பெயர், காருகுறிச்சி அருணாசலம். தொடக்கத்தில் களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் சுத்தமல்லி சுப்பையாக் கம்பரிடம் நாகஸ்வரமும் பயின்ற அருணாசலம், பின்னர், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களிடம் குருகுலவாசம் செய்தார். குருகுலவாசத்தின்போது, சீடரை அமரவைத்து ஆசான் சொல்லித்தரமாட்டாராம். குருவை ஊன்றி கவனித்து, அவரோடேயே கச்சேரிகளுக்குச் சென்று, தம்முடைய இசைத் திறமையை அருணாசலம் வளர்த்துக் கொண்டார். 

சுத்தமான சாஸ்த்ரிய இசை வழங்கத் தெரிந்த இந்த வித்தகரின் புகழ், கொஞ்சும் சலங்கை திரைப்படத்திற்கு இவர் செய்த பங்களிப்பால், குறிப்பாக, "சிங்காரவேலனே தேவா' என்னும் பாடலால் மேலும் உயர்ந்தது. கரகரப்ரியா, ஷண்முகப்ரியா, நாட்டை, நடபைரவி போன்றவை இவருக்கு விருப்பமான ராகங்கள்; சந்திரஜ்யோதி போன்ற அபூர்வ ராகங்களிலும் கொடி கட்டிப் பறந்தார். 

காருகுறிச்சி அருணாசலத்தின் அபாரமான வாசிப்பைப் பற்றிய தகவலொன்று உலவுகிறது. சென்னையில், கோயில் புறப்பாடு ஒன்றில் வாசித்துக் கொண்டிருந்தாராம் அருணாசலம். 

அந்தப் பக்கமாகப் போக நேர்ந்த ராஜரத்தினம் பிள்ளை, இவரின் அற்புதமான ஹுசேனி ராக ஆலாபனையைச் செவிமடுத்துவிட்டு, அப்படியே சாலையில் அமர்ந்து விட்டாராம். முழுக் கச்சேரியையும் சாலையில் உட்கார்ந்தபடியே கேட்டாராம். 

40 வயதிற்குள்ளாகவே புகழின் உச்சியைத் தொட்ட அருணாசலம், காருகுறிச்சியை விட்டு இடம்பெயர்ந்து கோவில்பட்டியில் குடியமர்ந்தார். நாற்பத்து ஏழே வயதில், 1964, ஏப்ரல் மாதம், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் காருகுறிச்சி பலவேசம் அருணாசலம் இறைவனடி சேர்ந்தபோது, பொருநைத் தாய் எவ்வளவு துடித்தாளோ!

தொடரும்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com