வெள்ளிமணி

வைகறை- சுபுஹ் தொழுகை

மு. அ. அபுல் அமீன்

இஸ்லாமியர்களின் இரண்டாவது கடமையான ஐங்கால தொழுகையில் ஒரு நாளின் முதல் தொழுகை வைகறையில் தொழும் பஜ்ர் அல்லது சுபுஹ் தொழுகை. பஜ்ர் என்னும் அரபி சொல்லின் பொருள் வைகறை. வைகறை இரு வகைப்படும். 1. அடிவானிலிருந்து வானை நோக்கி வெண்மை தோன்றுவது. இது பொய் வெள்ளை, வெண்மை மறைந்து மீண்டும் இருள் கவ்வும். இதற்குப் பஜ்ர் காதிப் என்று பெயர். 2. பின் தென் வடலாக வெண்ணிற கோடு தென்படும். இதற்கு பஜ்ர் சாதிக் என்று பெயர். இதுவே மெய் வெண்மை. இதுவே பொழுது புலர்வதின் துவக்கம். இவ்வேளை தொழப்படும் இரு ரக் அத்துகள் பஜ்ர் அல்லது சுபுஹு தொழுகை. இத்தொழுகையை முதன் முதலில் ஆதம் நபி தொழுததாக கூறப்படுகிறது. மனிதனின் ஐம்புலன்களில் ஒன்றான முகர்ந்தறிதல் மூலம் துர்நாற்றத்தைத் தவிர்த்து நறுமணத்தை விரும்பி முகரும் இரண்டு தன்மைகளைத் தந்த அல்லாஹ்விற்கு நன்றி நவிலும் முகத்தான் சுபுஹு தொழுகையில் இரு ரக் அத்துகள் தொழப்படுகிறது.

பகலில் இரு முனைகளிலும் இரவிலிருந்து ஒரு பகுதியிலும் தொழுகையை நிலைநிறுத்துமாறு அறிவுறுத்துகிறது அருமறை குர்ஆனின் 11-114 ஆவது வசனம். பகலில் இரு முனைகள் என்பது காலை மாலை பொழுதுகளைக் குறிக்கிறது. முதல்முனை பஜ்ரு தொழுகை. சூரியன் உதிப்பதற்கு முன்னும் மறையும் முன்னும் இறைவனைத் துதி செய்ய செப்பும் 50-39 ஆவது வசனத்தில் சூரியன் உதிப்பதற்கு முன் என்பது பஜ்ர் தொழுகையை குறிக்கிறது.
நீங்கள் காலையில் அல்லாஹ்விடம் தூய்மையை தொடங்குங்கள் என்ற 30-17 ஆவது வசனம் பஜ்ர் தொழுது தூயவன் அல்லாஹ்விடம் தூய வாழ்வைத் தொடர துணைபுரிய தூண்டுமாறு இறைவனை இறைஞ்ச இயம்புகிறது. இவ்வசனத்தில் வரும் துஸ்பிஹுன என்ற அரபி சொல் பஜ்ர் தொழுகையை குறிக்கிறது. சுபுஹ் தொழுகையை இரவின் இருட்டு மறைந்து வெளிச்சம் பரவும் பொழுது தொழுங்கள். அதில் நிச்சயமாக பெரும் நன்மை இருக்கிறது என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததைத் தெரிவிக்கிறார் நாபிஃ இப்னு கதீஜ் (ரலி) நூல் - ஸýனன். 20-130 ஆவது வசனத்தில் வரும் கப்ல துலூயிஷ்ஷம்ஸி என்ற அரபி சொற்றொடர் சூரிய உதயத்திற்கு முன் தொழும் பஜ்ர் தொழுகையை குறிக்கிறது.

பஜ்ரு தொழுகையில் குர்ஆனில் உள்ள ஆயத்துகளில் நீளமான ஆயத்தை இனிய குரலில் ஓதவேண்டும் என்பதை 17-78 ஆவது வசனத்தில் இருமுறை இயம்பப்படும் குர்ஆன் என்னும் சொல் குறிப்பிடுவதாக குர்ஆன் விரிவுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர். தொழுகையில் குர்ஆனை இரைந்து ஓத வேண்டாம் என்றும் இரண்டிற்கும் இடைப்பட்ட இனிய ஈர்க்கும் மென்மை குரிலில் குர்ஆனை ஓத போதிக்கும் 17-110 ஆவது வசனம் மக்காவில் தூது பெற்ற துவக்க காலத்தில் தூதர் நபி (ஸல்) அவர்கள் எதிரிகளின் எண்ணற்ற இடையூறுகளுக்கு இடையே அக இறை கொள்கையை எடுத்துரைத்த காலத்தில் இறக்கப்பட்டதாக இயம்புகிறார் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸஈ. இந்த வசனம் அருளப்பட்டதும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மிக மெதுவாக ஓதிய அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களைச் சற்று குரலை உயர்த்தி ஓதுமாறும் உரத்த குரலில் ஓதிய உமர் (ரலி) அவர்களைச் சற்று குரலைக் குறைத்து ஓதுமாறும் கூறியதை அறிவிக்கிறார் அபூகதாதா (ரலி) நூல்- திர்மிதீ.

ஸýப்ஹு தொழுகையில் நீண்ட குர்ஆன் ஆயத்துகளை ஓதுவது சிறப்பு. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சுபுஹு தொழுகைகளில் 81 ஆவது அத்தியாயத்தை ஓதியதைச் செவியுற்றதாக செப்புகிறார் அம்ருப்னு ஹுரைஸ் (ரலி) நூல் - முஸ்லிம், அபூதாவூத், நஸஈ. சுந்தர நபி (ஸல்) அவர்கள் சுபுஹு தொழுகையில் 50 ஆவது அத்தியாயத்தை அது போன்ற அத்தியாயங்களை ஓதி வந்ததை நினைவூட்டுகிறார் ஹாபீர் இப்னு ஸமுரத் (ரலி நூல்- முஸ்லிம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஸýப்ஹு தொழுகையில் 32, 76 ஆகிய அத்தியாயங்களை ஓதியதாக இயம்புகிறார் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸஈ. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சுபுஹு தொழுகையில் 60 முதல் 100 வசனங்கள் வரை ஓதியதை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல் -நஸஈ. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் லுஹர் அசர் தொழுகைகளில் ஓதுவதை விட நீளமான ஆயத்தை சுபுஹு தொழுகையில் ஓதியதை ஒப்பிக்கிறார் ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) நூல்- முஸ்லிம், அபூதாவூத், முஅத்தா.

முதல் கலீபா அபூபக்கர் சித்தீக் (ரலி)  அவர்கள் சுபுஹு தொழுகையில் இரண்டு ரக் அத்துகளிலும் இரண்டாவது அத்தியாயத்தை ஓதியதாக உரைக்கிறார் உர்வா (ரலி) நூல் - முஅத்தா. இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் சுபுஹு தொழுகையில் 12 ஆவது அத்தியாயத்தையும் 22 ஆவது அத்தியாயத்தையும் நிறுத்தி நிதானமாக ஓதியதாக கூறுகிறார் ஆமீர் இப்னு ரபீஆ. நூல் -முஅத்தா.  மூன்றாம் கலீபா உதுமான் (ரலி) அவர்கள் சுபுஹு தொழுகையில் அதிகமாக 12 ஆவது அத்தியாயத்தை ஓதியதால் அவர்களின் பின் நின்று தொழுது அந்த அத்தியாயத்தை மனனம் செய்ததாக செப்புகிறார் பராஃபின் பிஸதுப்னு உமைரில் ஹனபி. நூல்- மு அத்தா. நாளின் முதல் தொழுகையான சுபுஹு தொழுகையை தவறாது தொழுது விடியும் பொழுது நன்மை பயக்கும் நற்செயல்களின் விடியலாக அமைய அல்லாஹ் அருள்புரிவானாக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT