கார்த்திகையில் கண் திறக்கும் கடிகாசலன்!

"கடிகை' என்றால் ஒரு முகூர்த்த நேரம்; அதாவது 24 நிமிடம் என்பதாகும். "அசலம்' என்றால் மலை என்பது பொருள். இங்கு ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து அக்காரக்கனி என்னும்
கார்த்திகையில் கண் திறக்கும் கடிகாசலன்!

"கடிகை' என்றால் ஒரு முகூர்த்த நேரம்; அதாவது 24 நிமிடம் என்பதாகும். "அசலம்' என்றால் மலை என்பது பொருள். இங்கு ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து அக்காரக்கனி என்னும் நரசிம்மனை தரிசித்தால் அனைத்தும் கிடைக்கும் என நூல்கள் சொல்லுகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து நரசிம்மரைச் சிந்தித்தாலே பலன் உண்டு என்கிறார் அஷ்டப்பிரபந்தம் பாடிய பிள்ளைப் பெருமாளையங்கார்.

"வண்பூங்கடிகை இளங்குமரன்' என பேயாழ்வாராலும் "தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை' என திருமங்கையாழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. கடிகாசலம் இன்று சோளிங்கர் என வழங்கப்படுகிறது. நரசிம்மர் குடிகொண்டுள்ளதால் சிம்மபுரம் எனவும் சோழர்கள் நாட்டின் எல்லையாக ஒரு காலத்தில் இது இருந்ததால் சோழசிம்மபுரம் என அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெரிய மலை என்னும் மலைக்கோயிலில் "யோக நரசிம்மர்' வீற்றிருந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் காட்சி தருகிறார். உற்சவர் "பக்தவத்ஸல பெருமாள்'. பக்தர்களை அன்போடு (வாத்சல்யத்தோடு) அரவணைத்துச் செல்வதால் "பக்தவத்ஸலன்' எனப்படுகிறது. உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவராதலால் "பக்தோசிதப்பெருமாள்' எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் "தக்கான்' எனவும் அழைக்கப்படுகிறார். தனிக்கோயில் நாச்சியாராக "அம்ருதவல்லித் தாயார்' என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார். உலக உயிர்களைக் காப்பதற்கு உரியமுறையில் பெருமாளுக்கு உதவுவதால் அம்ருதவல்லி என வழங்கப்படுகிறாள்.

தீர்த்தம் தாயார் பெயரால் அம்ருத தீர்த்தம் என்றும்; பெருமாள் பெயரால் தக்கான் குளம் மற்றும் பாண்டவ தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.

விசுவாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் (ஒரு நாழிகை நேரத்தில்) நரசிம்மனைக் குறித்து துதித்து பிரம்மரிஷி பட்டம் பெற்றார். ஆதலால் சப்தரிஷிகளும், வாமதேவர் என்னும் முனிவரும் பிரஹலாதனுக்காக பெருமாள் காட்டிய நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க வேண்டுமென்ற ஆசையால் இம்மலையில் வந்து தவமியற்றத் தொடங்கினர்.

ஸ்ரீராமவதாரம் முடிந்து திருமால் வைகுண்டத்திற்கு புறப்படத் தயாரானார். அதுவரை, அனுக்கனாக இருந்த ஆஞ்சநேயர் உடன் வருவதாகக் கூறினார். ஒருகணம் சிந்தித்த ராமர், ""கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் ஸப்த ரிஷிகட்கு, இன்னல்கள் உண்டாகின்றன. அவைகளைக் களைந்து பின்னர் வைகுண்டம் வருக!'' என அருளினார்.

காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் இம்மலை வந்து நாராயணன் குறித்து தவஞ்செய்யும் ரிஷிகளுக்கு அல்லல் விளைவித்து வந்ததைக் கண்டார். அவர்களோடு நேரில் சண்டையிட்டுக் களைத்துப்போன ஆஞ்சநேயர் ஸ்ரீராமனைத் துதித்தார். ஸ்ரீராமன் அனுமனுக்கு நாராயண உருவில் காட்சி தந்து சங்கு சக்கரங்களை வழங்கினார். இரு அரக்கர்களின் தலையையும் சுதர்சனத்தை ஏவி கொய்து ரிஷிகளுக்கு உதவினார். ரிஷிகளின் தீவிர தவத்தை மெச்சிய பகவான் தவம் செய்த முனிவர்களுக்கு யோக பட்டம் கட்டிய யோக நரசிம்ம மூர்த்தியாகக் காட்சி கொடுத்தார். அத்திருவுருவத்தை தரிசித்த ரிஷிகளும் மிக மகிழ்ந்து, தங்களை இந்த திருக்கோலத்திலேயே எப்போதும் இங்கு வந்து தரிசிக்கும் பேற்றினை எங்களுக்கு அருள வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நரசிம்மப்பெருமாளும் ஒப்புக்கொண்டு அங்கே நிஷ்டையில் யோக நரசிம்மராக அருள் செய்து வருகிறார்.

சப்த ரிஷிகளும் வணங்கிய யோக நரசிம்ம அவதாரத்தைக் கண்டு உகந்து களித்த ஆஞ்சநேயர் மகிழ்ந்து போற்றி பஜனை செய்தார். மீண்டும் வைகுண்டம் வருவது குறித்து வற்புறுத்திய ஆஞ்சநேயருக்கு "இம்மலையில் நீயும் என்னுடன் இங்கிருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து கலியுகம் முடியும் தறுவாயில் எம்மை வந்தடைவாயாக!'' என்றருளினார்.

நரசிம்மர் உத்தரவுப்படி, யோக நிலையில் சங்கு சக்கரத்துடன் அமர்ந்து வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லாதவகையில் அனுமன் அருள்வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இந்திரத்யும்னன் என்னும் மன்னன் , சத்திரிய தர்மத்தில் இருந்து விலகி, ஆயுதங்களை தியாகம் செய்து, நரசிம்மரை வணங்கி முக்தி பெற நினைத்து, பக்தி மார்க்கத்தில் இணைந்தான். மன்னன் இல்லாத நிலையில் ரிஷிகளை நிகும்பன் என்னும் அரக்கன் துன்புறுத்தத் துவங்கினான். மன்னன் தான் ஆயுதப் பிரயோகத்தை கைவிட்டபடியால் அக்காரக்கனியான நரசிம்மரிடம் இதுகுறித்து அருள்புரிய வேண்டினார். அவனது வேண்டுதலை ஏற்ற நரசிம்மர், யோகத்தில் இருந்த சிறிய திருவடியை கார்த்திகை வெள்ளிக்கிழமை அழைத்து தான் அளித்த சக்கராயுதத்தால் வென்று வரும்படி கூறினார். மன்னனுக்கு ஆதரவாக சக்கராயுதத்தால் நிகும்பனை கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை அழித்து வந்து சிறிய மலை என்னும் அனுமார் மலையில் உள்ள புஷ்கரணியில் ஸ்ரீசுதர்சனத்தைத் திருமஞ்சனம் செய்தார். அன்று முதல் அதற்கு சக்கர தீர்த்தம் எனப் பெயர் வழங்குகிறது. அதன் படிக்கட்டில் படுத்து விரதம் இருந்தால் எண்ணியது கிடைக்கும் என குறிப்பிடப்படுகிறது.
 அதனால் இது ஒரு விசேஷமான பிரார்த்தனைத் தலமாக பேய், பிசாசு, பில்லி சூனியம் என்று சொல்லப்படும் அதீத நோய்கள் தீர, இங்கே வந்து கார்த்திகை மாதம் மட்டுமில்லாமல் எப்போதும் விரதம் கடைப்பிடித்து தக்கான் குளத்தில் நீராடி, மலையேறி தரிசனம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

அதன்படி, இவ்வாண்டு கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு வெள்ளி, ஞாயிறுகளில் (நவம்பர் 18, 23, 25, ,30, மற்றும் டிசம்பர் 2,7,9,14 ,16, 21 ஆகிய தேதிகளில்) இரண்டு மலைகளிலும் பெருமாள் தாயார் ஆஞ்சநேயருக்கு சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் விசேஷ அலங்காரம் அர்ச்சனைகள் நடைபெறும். காலை 5.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். மாலை 4 மணிக்குத் தாயார் தங்கத்தேரில் புறப்பாடு நடைபெறும்.

அரக்கோணம் , வாலாஜா , திருத்தணியில் இருந்து பேருந்துகள் மூலம் சோளிங்கரைஅடையலாம்.
 தொடர்புக்கு : 041722 63515 / 96269 50507.
 - இரா.இரகுநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com