கோமான் நபிகளின் கொடிகள்!

இஸ்லாமிய வரலாற்றில் கொடி நம்பிக்கையின் அடையாளமாக அமைந்துள்ளது; வெற்றியின் ஆதாரமாக விளங்குகிறது; இணையில்லா இறைவனின் நிறைவை நினைவூட்டுகிறது;
கோமான் நபிகளின் கொடிகள்!

இஸ்லாமிய வரலாற்றில் கொடி நம்பிக்கையின் அடையாளமாக அமைந்துள்ளது; வெற்றியின் ஆதாரமாக விளங்குகிறது; இணையில்லா இறைவனின் நிறைவை நினைவூட்டுகிறது; ஈமானை உறுதிபடுத்துகிறது; உற்சாகம் ஊட்டுகிறது; உத்வேகம் உணர்வூக்கியாக உள்ளது; ஊக்கத்தின் வேராக சீரான வளர்ச்சிக்கு வித்திடுகிறது; எளிமையின் தெளிவைத் தெரிவிக்கிறது; ஏற்றத்தை ஏற்புடன் எடுத்துரைக்கிறது; ஒழுக்க ஓம்பலின் சான்றாக சாட்சி கூறுகிறது.
 காருண்ய நபி (ஸல்) அவர்கள் கருப்பு, வெள்ளை வண்ண இரு கொடிகளை வைத்திருந்தார்கள். கருப்பு கொடி பெரியது. வெள்ளை கொடி சிறியது என்று செப்புகிறார் இப்னு அப்பாஸ் (ரலி). பத்ரு போரில் அலி இப்னு அபீதாலிப் (ரலி) ஸஅது இப்னு உபாதா (ரலி) ஆகியோர் கோமான் நபி (ஸல்) அவர்கள் கொடுத்த கொடியினைப் பிடித்து இருந்தனர். இதனை உமறுபுலவர் சீறா புராணம் பதுறு படலத்தில்
 "வெண் கதிர் வெள்ளை வெற்றி கொடியை முன் விரித்திட்டாரால் என்றும் மிடலுறும் வெற்றி யுக்கா பெறுங் கொடி மிசாஃபு கைக்கொண்டடனபி முன்பு செல்ல வலிமுனம் கொடியொன் றேகத் தடமுறு மதீனா வேந்தர் தம்முனம் கொடியொன் றேக விடனறக் கவிகை வெள்ள மெங்கனும் பரந்த தன்றே''
 என்றும் பாடினார்.
 பத்ரு போரில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் துப்பட்டியைத் தூயநபி (ஸல்) அவர்கள் கொடிக்குப் பயன்படுத்தினார்கள். உஹது போரில் முஸ்அப்பின் உமைர் (ரலி) பிறை கொடியைத் தாங்கிமுன்னால் நடந்தார்கள்.
 கைபர் போர் துவங்குவதற்கு முதல் நாள்முஹம்மது நபி (ஸல்) அவர்கள் "நாளை நான் யார் கையில் கொடியைக் கொடுப்பேனோ அவரின் கையில் அல்லாஹ் வெற்றியைக் கொடுப்பான்'' என்று கூறினார்கள். மறுநாள் போர் துவங்குவதற்கு முன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அலி இப்னு அபீதாலிப் (ரலி) கையில் வெள்ளை கொடியைக் கொடுத்தார்கள். அந்த போரில் அலி இப்னு அபீதாலிப் (ரலி) தலைமையில் இஸ்லாமியர்கள் பெரும் வெற்றி பெற்றனர்.
 மூத்தா போருக்குச் சென்ற ஜைது இப்னு ஹாரிதா (ரலி) அவர்களிடம் வெள்ளை கொடியைக் கொடுத்த கோமான் நபி(ஸல்) அவர்கள் ஜைது இப்னு ஹாரிதா சஹீதாக்கப்பட்டால் (வீர மரணம் அடைந்தால்) ஜ அபர் இப்னு அபீதாலிப் (ரலி) கொடியைப் பிடித்து போரை நடத்தவும் அவரும் சஹீதாக்கப்பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) கொடியை ஏந்தி போரை நடத்திடவும் அவரும் வீர மரணம் அடைந்தால் படையினர் தங்களுக்குள்ஒரு தளபதியைத் தேர்ந்து எடுத்து கொள்ளவும் தெளிவு படுத்தி அனுப்பினார்கள். விழுப்புண் பட்டு வீர தியானம் புரிந்து பூமியில் விழுந்து உயிர் நீத்த அம்மூவரும் பிடித்த பிடியை விடாது கொடி விழாது காத்தனர். அறிவிப்பவர் அனஸ் (ரலி) நூல்- புகாரி, நஸஈ.
 ஹீஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமலான் பிறை 20 இல் (1-1-630) மக்காவிற்குள் பத்தாயிரத்திற்கும் அதிகமான தோழர்களுடன் முத்து நபி (ஸல்) அவர்கள் முந்தி சென்று வெற்றி கண்ட பொழுது அவர்களைத் தொடர்ந்து வந்த குழுக்களைக் குழப்பம் இன்றி அறிந்து கொள்வதற்காக குதைத் என்ற இடத்தில் நிறுத்தி வைத்து ஆறு வெள்ளை கொடிகள் ஐந்து கருப்பு கொடிகள் ஆறு பச்சை கொடிகள் என்று பதினேழு கொடிகளைத் தோழர்களிடம் கொடுத்தார்கள்.
 இன்றும் ஹஜ் புனித பயணத்தில் ஒரே சீருடையில் உள்ளவர்களை அறிவதற்காக உலகின் பல நாடுகளிலும் இருந்து பல்வேறு பயண குழுக்கள் மூலம் வரும் ஒவ்வொரு குழுவினரும் பிரிந்து விடாமல் அடையாளம் அறிந்து சேர்ந்து செல்வதற்காக கொடி பிடித்து கூட்டம் கூட்டமாக வருவதை 2002 -இல் ஹஜ்ஜுக்குச் சென்றபொழுது கண்டேன். இன்றும் இப்பழக்கம் தொடர்கிறது. ஒவ்வொரு இஸ்லாமிய நாடுகளும் அந்நாடுகளின் தன்மையையும் அவற்றின் நன்மையையும் வெளிப்படுத்தும் விதமாக கொடிகளை வடிவமைத்து கொண்டுள்ளன.
 மறுமை நாளில் இறுதிதூதர் நபி (ஸல்) அவர்களின் கைகளில் "லிவாவுல் ஹம்து' (அபய அருள் கொடி) என்னும் கொடி கொடுக்கப்படும். அக்கொடி நிழலில் ஆதிநபி ஆதம் முதல் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்திய ஈசா நபி வரை அனைவரும் நிற்பர் என்று அபூஸயீது (ரலி) அறிவிக்கிறார்.
 கோமான் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளாம் மீலாது நபி (21.11.2018) விழாவில் கொடிகளைப் பிடித்து முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முத்தான மொழிகளை முழக்கமிட்டு செல்லும் நாம் அந்த சத்திய மொழிகளை நித்திய வாழ்வில் நீதர் நபி (ஸல்) அவர்கள் கடைபிடித்ததைக் கவனமாக நடைமுறை படுத்தி நல்லிணக்கம் பேணி நல்வாழ்வு வாழ்வோம். வல்லோன் அல்லாஹ்வின் அருளைப்பெறுவோம்.
 - மு.அ.அபுல் அமீன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com