வெள்ளிமணி

சௌபாக்கியம் தரும் சங்காபிஷேகம்!

தினமணி

அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து மகாலட்சுமியுடன் தோன்றிய பெருமை பெற்றது சங்கு. இதில் வலம்புரிச் சங்கு, இடம்புரிச் சங்கு, சலஞ்சலம், பாஞ்ச ஜன்யம் என பல வகையுண்டு. போர் சங்கு, ஊது சங்கு, பால் சங்கு, இளஞ்சிவப்பு சங்கு, கீற்றுச்சங்கு, சிலந்தி சங்கு எனப் பலவகையுன்டு. வலம்புரிச் சங்கிற்கு அதிக பெருமையுண்டு. மகாவிஷ்ணு தன் இடது கரத்தில் தரித்திருப்பது வலம்புரிச் சங்காகும். சில தலங்களில் கணபதி, முருகன், ஆஞ்சநேயரும் சங்கை ஏந்தி காட்சியளிக்கின்றனர்.
 ஆலய வழிபாடுகளில் சங்கநாதம் எழுப்புவதும் ஒன்றாகும். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போதும் சங்கினை ஒலிக்க வைப்பார்கள். பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சங்கை வைத்திருந்ததாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. கிருஷ்ணனன் வைத்திருந்த சங்கு "பாஞ்சஜன்யம்'; தர்மனிடம் "அநந்த விஜயம்', பீமனிடம் "பெளண்டரம்', அர்ஜுனனிடம் "தேவதத்தம்', நகுலனிடம் "சுகோஷம்' மற்றும் சகாதேவனிடம் "மணிபுஷ்பகம்' என்று பெயர் பெற்ற சங்குகள் இருந்தன. சங்கின் குணம் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் குழந்தைகளுக்கு பால் புகட்ட சங்கை பழங்காலத்தில் உபயோகித்தனர்.
 பெளத்தர்களும் சங்கை புனிதமாகக் கருதுகின்றனர். அவர்களுடைய எட்டு மங்கலச் சின்னங்களில் இதுவும் ஒன்று. வங்காளிகள் இன்றும் கூட திருமணத்தில் சங்கு வளையல்கள் கொடுக்கின்றனர். வாழ்நாள் முழுதும் அணியும் புனிதப் பொருள் என்று கருதுகின்றனர். சங்குகளில் வளையல், மோதிரம், மாலை முதலியன செய்து அணிவது இந்துக்களிடையே அதிகம் காணப்படுகிறது.
 வலம்புரிச் சங்கு கொண்டு அபிஷேகம் செய்தால் ஏழு பிறவிகளில் செய்த வினைகளையும் நீக்கலாம் என்று ஸ்காந்தம் கூறும்.
 ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். அந்த சங்கின் அமைப்பு, பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். இந்த சங்கை காதில் வைத்தால் அதிலிருந்து எழும் ஓசை "ஓம்' என்பதாகும். வைதீக சைவர்கள் ஆத்மார்த்தமாகவோ பரமார்த்தமாகவோ செய்யும் பூஜைகளில் சங்கு பூஜை முக்கிய இடத்தைப் பெறுகிறது.
 திருக்கோயில்களில் விசேஷ காலங்களில் இறைவனுக்கு சங்காபிஷேகம் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் பெரும்பாலும் சிவாலயங்களில் சிவனுக்குகந்த கார்த்திகை சோமவாரத்தில் நடைபெறும் சங்காபிஷேகம் மிகவும் பெருமை வாய்ந்தது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது.
 கார்த்திகை மாதத்தில், சிவாலயங்களில், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானை தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு. திங்கள் என்றால் சந்திரன். சந்திரனே நம் மனதை ஆள்பவன். ஆனால் அந்த சந்திரனை தன் தலையில் சூடிக் கொண்டுள்ளார் சிவபெருமான். கார்த்திகை திங்கட்கிழமை நாளில், சிவபெருமானுக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்து வழிபட்டால் மனோபலத்தையும் தெளிவையும் பெறலாம். ஆக, சந்திர பலம் கிடைக்க வேண்டுமெனில், கார்த்திகை சோம வாரத்தில் வழிபாடு மிகுந்த பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.
 ஒருமுறை சாபத்தினால் ஷயரோகம் பீடிக்கப்பெற்று, மிகவும் துன்புற்ற சந்திரன் சாபத்திலிருந்து விடுபட, கடும் தவமிருந்து, கார்த்திகையின் சோம வார நன்னாளில் விரதம் மேற்கொண்டு, சிவபூஜை செய்தான். அவனுடைய தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனது துன்பத்தை நீக்கி விமோசனம் தந்தருளினார். அதுமட்டுமின்றி, சந்திரகலையில் ஒன்றைப் பிறையாக்கி, தன் தலையில் சூடி சந்திரனுக்குப் பெருமை சேர்த்தருளினார். இதனால்தான் பெருமானுக்கு, சந்திரசேகரர் எனும் திருநாமமே அமைந்ததாகச் சொல்கிறது சிவபுராணம்.
 அத்தகு பெருமை பெற்ற சோமவாரத்தன்று சிவன் சந்நிதிக்கு முன்பாக 54, 60, 64, 108, மற்றும் 1008 சங்குகளை வரிசையாக வைத்து, அவற்றிற்கு சந்தனம், குங்குமம் இட்டு பின்னர் தண்ணீர் நிரப்பி அதில் வாசனை திரவியங்களைப் போட்டு, பூஜை செய்து, பின்னர் எல்லாவற்றையும் இறைவனுக்கு அபிஷேகிப்பர்.
 சோமவாரத்தில் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும், தீராத நோய்களும் தீரும்.
 துர்சக்திகள் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.
 இந்த சங்காபிஷேகம் கார்த்திகை சோமவாரத்தில் பலத் திருத்தலங்களிலும் நடைபெறுகின்றன. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சை பெரிய கோயில், நாகை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட பல சிவாலயங்களில் சங்காபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சங்காபிஷேகம் கண்குளிரக் கண்டு இறைவனைத் தரிசித்து வழிபடுவதால் மனமகிழ்வு கூடும். சகல செல்வங்களும் வந்து சேரும். சங்காபிஷேகத்தன்று சிவ தரிசனம் செய்யுங்கள். வாழ்வில் இழந்ததைப் பெறுவீர்கள். சகல செளபாக்கியங்களும் கிட்டும்.
 - ரஞ்சனா பாலசுப்ரமணியன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT