வெள்ளிமணி

சித்தர்கள் வழிபட்ட மேலைத்திருப்பதி!

இரா. இரகுநாதன்

தன்னை திருமாலுக்கு அர்ப்பணித்துக் கொண்டு பெருமாளை வணங்கி பாசுரங்களை சேவித்து, பிட்சை ஏந்தி பகுத்துண்டு வாழும் முரட்டு பெருமாள் பக்தர்களை "மொண்டிகள்' என அழைப்பர்.  அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் மொண்டிப் பாளையம் எனவும் வழங்கப்பட்டது.

மொண்டிப் பாளையம் தலத்தில் திருப்பதி  வெங்கடாஜலபதி அரூபியாய், வேறு எந்த வைணவத்தலத்திலும் இல்லாத வகையில் நான்கு புறமும் பட்டையாக வேதங்களின் அம்சமாக  மத்தியில் கூர்மையாக, வாழைப்பூ போலவும் குவிந்த தாமரை வடிவைப் போலவும் சாளக்கிராம மூர்த்தியாக சுயம்புவாக எழுந்தருளினார்.  இவ்வுரு மயன் உருவாக்கிய வடிவமென அகத்தியர் கூறுகிறார். இந்த மூர்த்திக்கான பூஜை முறையை துர்வாச மகரிஷி வகுத்தார். திருமலை ஸ்ரீநிவாசனே அங்கு தோன்றியதால் அப்பகுதி ஸ்ரீநிவாசபுரம் என்ற பெயரோடு விளங்கத் தொடங்கியது. இத்தல மூலவர், சித்தர் பெருமக்களால் வணங்கப்பெற்ற சிறப்புடையவர். 

கொங்கு நாட்டு ஆலத்தூர் கிராமத்து கம்மவார் குல மேதளமிட்டார் மாதவநாயக்கர் மகன் கொண்டம நாயக்கர், ஆடு  மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது தமது பதினாறாம் வயதில் இறையருளால் சித்து வேலைகள் தானே வந்தடைந்தது.

கொண்டம நாயக்கர் பெருமாள் வாக்குப்படி, கொள்ளேகாலம் தாலூக்கா, காயல்பட்டினம் சென்று கடும் எதிர்ப்புகளுக்கிடையே நெருப்பு மூட்டையை தலையில் சுமந்தும் கடும் விஷத்தை உண்டும்  தன் பக்தியை மெய்ப்பித்தார். முன்பே தேவர்களால் வைக்கப்பட்ட செல்வத்தை  எடுத்துக் கொண்டும் அவ்வூரிலுள்ளோர், திருப்பதி வெங்கடாஜலபதிக்கு கட்டி வைத்த காணிக்கைகளுடன் சத்தியமங்கலத்தார்கள் கொடுத்த  காணிக்கையையும் கொண்டு கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம் கட்டி  பூஜை நடத்தத் தொடங்கினார். கொண்டமநாயக்கர் தமது 33 -ஆம் வயதில் வைகுண்டப் பதவியடைந்தார்.

காலப்போக்கில், காளாப்பட்டி, லட்சும நாயக்கர்  மீண்டும் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய பணத்திற்கு பெருமாளை வேண்டினார். அவரிடம் ஒருவர் ஆறு தலைமுறையாய் திருப்பதி வெங்கடாஜபதிக்கு காணிக்கை கட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம். நேற்று இரவு  கனவில் பெருமாள் வந்து கட்டி வைத்திருக்கும் காணிக்கையை மொண்டிபாளையம் பெருமாள் கோயில் கும்பாபிஷேக செலவிற்குக் கொடுக்கச் சொன்னார் எனக்கூறி தந்துவிட்டுப்போனார். அந்த திரவியத்தால் கும்பாபிஷேகத்தை வேத முறைப்படி சிறப்பாக மறுபடியும்  நடத்தினர். திருப்பதி போன்றே இங்கும் பூஜைகள் நடைபெறுகின்றன. திருப்பதி பெருமாளே இங்கு தமிழகத்தின் மேற்குப்பகுதியில் எழுந்தருளியிருப்பதால் "மேலைத் திருப்பதி' என்று அழைக்கப்படுகிறது.

சரும நோய்களை தீர்த்தருளும் இந்த வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வெள்ளெருக்கம் மொக்கு, வேப்பிலைக் கொழுந்து, துளசி, எலுமிச்சை ஆகிய மருத்துவ குணங்கள் அடங்கிய  மல்லிப்பொட்டு எனும் மூலிகைப் பொருட்கள்  கொண்ட  பிரசாதம் வழங்கப்படுகிறது.

திருக்கோயில் பிரகாரத்தில் ருக்மணி சத்யபாமா உடனுறை ஸ்ரீவேணுகோபாலர்,  ஸ்ரீசுதர்சனர், ஆழ்வார்கள்,  உடையவர்,  விஷ்வúக்ஷனர், விநாயகர், ஸ்ரீலட்சுமி சந்நிதி, ஆண்டாள் சந்நிதி,  ஸ்ரீபாதம்,  கருடன், துவார பாலகர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.  சனிபகவான், வீரஆஞ்சநேயர் மற்றும் சொர்க்கவாயில் அருகேயுள்ள வைகுண்ட நாராயண மூர்த்தி ஆகியோர் அருளுகின்றனர்.

இங்கு, புரட்டாசி சனிக்கிழமையன்று தரிசனம் செய்வதை சித்தர் நூல்கள் பெருமையாக கூறுகின்றன. காலை விரதமிருந்து நெய் தீபமேற்றி தொழுபவர்க்கு சுப பலன்கள் யாவும் சேரும் என்கிறார்கள். வடகிழக்கில் காக வாகனத்தில் உள்ள  சனிபகவானை புரட்டாசி மாதம் சனிக்கிழமை தொழுதால் செல்வம் கூடும். வழக்குகள் தவிடு பொடியாகும். சண்டை சச்சரவுகள் இல்லாத அமைதியான வாழ்வு நலமோடு கிட்டும். குடும்ப ஒற்றுமை மேம்படும். 

15.09.2018 (ஆவணி 30) சனிக்கிழமை முதல்  20.10.2018 முடிய 6 சனிவாரங்களிலும் அதிகாலை 4.00 மணிக்குத் திருமஞ்சனமும் இரவு 7.30 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடும்  நடைபெறும்.  

இத்தலத்திற்குச் செல்ல அன்னூர்,  அவிநாசியில் இருந்து பேருந்து மூலமும் மொண்டிப்பாளையம் செல்லலாம்.  

தொடர்புக்கு: 04296 289270 ; 9629111099.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT