வேண்டியதைக் கொடுக்கும் திருவேங்கைநாதர்!

காமதேனு பசு இந்திரனின் சபைக்கு காலதாமதமாக வந்ததால் கோபமடைந்த இந்திரன் பூலோகத்தில் காட்டுப்பசுவாக பிறக்கும்படி சபித்தான்.
வேண்டியதைக் கொடுக்கும் திருவேங்கைநாதர்!

காமதேனு பசு இந்திரனின் சபைக்கு காலதாமதமாக வந்ததால் கோபமடைந்த இந்திரன் பூலோகத்தில் காட்டுப்பசுவாக பிறக்கும்படி சபித்தான். அதன்படி, காமதேனு பசு பூலோகத்தில் கபில முனிவர் தங்கியிருந்த கபில வனத்தை அடைந்தது. கபில முனிவரின் உபதேசப்படி சாப விமோசனம் பெற தினந்தோறும் கங்கை நீரைக் காதுகளில் நிரம்பிக்கொண்டு வந்து மகிழவனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தது. கோ-பசு-கர்ணம்-காது இதுவே,  "திருக்கோகர்ணம்' என்று ஆனது.   

காமதேனு பசு இவ்வாறு வழிபட்டுக் கொண்டிருக்கும் நாளில் அதன் பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் புலியின் உருவத்தில் பசுவை வழிமறித்துக் கொல்ல முயன்றது. உடன் தேவ பசுவானது தான் சிவபெருமானுக்கு செய்யும் வழிபாட்டை முடித்து விட்டு தனக்காக காத்திருக்கும் கன்றுக்கு பால் கொடுத்து விட்டு திரும்பி வருவதாகவும் சத்தியம் செய்து விட்டு சென்றது. அங்கு தன் கடமைகளை நிறைவேற்றி விட்டு தான் கூறியபடி புலி இருக்கும் இடம் வந்தது. பசுவின் நியம உறுதியையும், வாக்கு தவறாத செயல்பாட்டையும் கண்டபுலி (சிவபெருமான் பார்வதி தேவியுடன்) ரிஷப வாகனத்தில் தோன்றி பசுவுக்கு காட்சி கொடுத்து மோட்சம் அளித்தார். புலி (வேங்கை) உருவத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்து மோட்சம் அளித்ததால் திருவேங்கைவாசல் என்றும் இத்திருத்தலம் இன்றும் மோட்ச ஸ்தலமாக விளங்குகிறது. 

கோயிலின் தென் புறத்தில் திருக்குளம் உள்ளது. திருக்கோயில் உள்ளே நுழைந்ததும் முதலில்  காட்சியளிப்பது அம்மன் திருமுகங்கள்! இரண்டுமே பிரஹன்நாயகி, பெரியநாயகி, பிரஹதாம்பாள் என்ற திரு நாமங்களை கொண்ட புதுக்கோட்டை மன்னர்களின் குலதெய்வமான அம்பாள்தான். இரண்டு அம்பாள் இருப்பதன் காரணம் தொண்டைமான் மன்னர் ராஜா ராமச்சந்திர தொண்டைமான் திருப்பணி செய்யும் போது அம்மனின் கையில் சிதிலம் ஏற்பட்டுவிடுகிறது. உடனே மன்னர் அதை குளத்தில் போட்டுவிட உத்தரவு விடுகிறார். அன்று இரவே, அம்மன் மன்னர் கனவில்  "உன் மனைவிக்கு கை ஒடிந்தால் தள்ளி விடுவாயா?' என்று கேட்க, உடனே மன்னர் மந்திரிகள், குருக்கள் ஆலோசனைப்படி தனி சந்நிதியை அமைத்து மண்டபத்தை சற்று சாய்வாகக் கட்டினார். ஏனெனில் கோயிலில் நுழைந்த உடனேயே இரு அம்பாளும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவ்வாறு செய்தார்.   

கடைசியாக புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட மாட்சிமை தங்கிய ஸ்ரீராஜகோபால தொண்டைமான் தன்னுடைய பெயருக்கு முன் ஸ்ரீபிரஹதாம்பாள் போட்டுக்கொள்வார். இதிலிருந்தே தொண்டைமான் மன்னர்கள் அம்பாளிடம் கொண்டிருந்த பக்தியின் பெருமையை அறியலாம். இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் ஏராளம். அவற்றில் கண்டறியப்பட்டவை பதினைந்து. அதில் 6 கல்வெட்டுகள், சோழர் காலத்தவை;  7 கல்வெட்டுகள் பாண்டியர் காலத்தவை; விஜயநகர மன்னர்களின் கல்வெட்டு ஒன்றும்; பல்லவராயர் காலத்து ஒன்றுமாகும். அதில், விக்கிரம சோழன் காலம் முதல், சித்ரா பெüர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதை கல்வெட்டொன்று 
தெவிக்கிறது. 

கருவறையில் மூலவர் புலி முகத்துடன் கூடிய சிவலிங்கமாக இருப்பதால் வியாக்ரபுரீஸ்வரர் என்று வடமொழியிலும், திருவேங்கைநாதர் என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார். இந்த லிங்க திருமேனியை சுயம்புவாகவும், சோழர்களின் சின்னமான புலியை குறிப்பதாகவும் கூறுவோர் உண்டு. உள்பிரகாரத்திலே திருச்சுற்று மண்டபத்தில் பிராம்மி, வைஷ்ணவி, கெüமாரி, வராகி, மகேஸ்வரி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர்  அமைந்துள்ளனர். திருச்சுற்று மண்டபத்தில் வலதுபுறமாக கிருஷ்ணதேவராயர் மற்றும் கம்பண்ணராஜா முதலியோர் திருவுருவங்களை தூணிலே வடிவமைக்கப்பட்ட மண்டபத்தில் காணமுடியும். அந்த மண்டபத்தில் பல்வவர்கால முருகப்பெருமான் 5 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான திருமேனி உள்ளது. 

தட்சிணாமூர்த்தி சிவசக்தியாக அர்த்தநாரீஸ்வரர்  திருக்கோலத்தில் சதுர பீடத்தில் அமர்ந்து ஒற்றைக்காலில் நின்று கொண்டு அருள்பாலிக்கும் காட்சி அலாதியானது. திருச்சுற்றில் வடபுறத்தில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், பின்புறம் விஷ்ணு, பைரவர், சூரியன், சனிபகவான் உள்ளனர்.  இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில் நவக்கிரங்களுக்கு  பதிலாக 9 விநாயகர்கள் அமைந்துள்ளனர்.  

புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல், இலுப்பூர் செல்லும் நகரப்பேருந்துகளில் இக்கோயிலை அடையலாம்.   

தொடர்புக்கு: 97888 40290 / 97512 39014.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com