தேவனுடைய செயல்!

தேவனை விசுவாசிக்கிற அனைவருக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் நேரிடுகின்ற ஒவ்வொரு சம்பவத்திலும் அது உயர்வானாலும் தாழ்வானாலும்,  இன்பமானாலும் துன்பமானாலும்,  நன்மையானாலும் தீமையானாலும்

தேவனை விசுவாசிக்கிற அனைவருக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் நேரிடுகின்ற ஒவ்வொரு சம்பவத்திலும் அது உயர்வானாலும் தாழ்வானாலும்,  இன்பமானாலும் துன்பமானாலும்,  நன்மையானாலும் தீமையானாலும் தேவன் ஒரு நோக்கத்திற்காகவே இதை அனுமதிக்கிறார், செய்திருக்கிறார் என்று அறியலாம். இதை ஆதியாகமத்தில் யோசேப்புக்கு நேரிட்ட சம்பவத்தை உதாரணமாக பார்க்கலாம். 
யோசேப்பு தன்னுடைய வாழ்க்கையில் தன் சொந்த சகோதரர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு, எகிப்துக்கு போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்டார்கள். ஆனால் ""கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்'' என்று ஆதியாகமம் 39:2-இல் பார்க்கலாம். யோசேப்பின் சகோதரர்கள் மற்றும் தாய் தந்தையர் இவனை வணங்குவார்கள் என்று முன்னமே தேவன் சொப்பனம் மூலம் தெரியப்படுத்தியிருந்தார்.  
நாட்கள் சென்றது, யோசேப்பு செய்யாத குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டான். சிறைச்சாலையில், ""கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை'' ஆதியாகமம் 39:23 என்று வாசிக்கிறோம்.
தேவன் யோசேப்புக்கு சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கும் சக்தியை கொடுத்திருந்தார். அங்கு சிறைச்சாலையில் யோசேப்போடு  பானபாத்திரக்காரரின் தலைவனும்,  சுயம்பாகிகளின் தலைவனும் அடைக்கப்பட்டனர். ஒரு நாள் அந்த இருவரும் சொப்பனம் கண்டனர். அதன் அர்த்தத்தை யோசேப்பு கூறினான். அதாவது, பானபாத்திரக்காரரின் தலைவனுக்கு, விடுதலையும், மீண்டும் அதே வேலையும் கிடைக்கும் எனவும், சுயம்பாகிகளின் தலைவனுக்கு, மரண 
தண்டனையும் கிடைக்கும் என்று யோசேப்பு கூறினான். அதன்படியே ஆனது. 
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பார்வோன் ராஜா ஒரு சொப்பனம் கண்டான். இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று கலக்கத்துடன் காணப்பட்டான். உடனே பார்வோன் ராஜா எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான்; ஒருவராலும் அதன் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக் கூடாமற்போயிற்று.
அப்போது, பார்வோனின் உடன் இருந்த பானபாத்திரக்காரரின் தலைவன் ராஜாவிடம் தனக்கும் சுயம்பாகிகளின் தலைவனுக்கும் சிறைச்சாலையில் கண்ட சொப்பனம் குறித்தும் அதன் அர்த்தத்தை யோசேப்பு கூறியதையும் சொன்னான். உடனே ராஜா, யோசேப்பை சிறையில் இருந்து அழைப்பித்து, தன்னுடைய சொப்பனத்தைக் கூறினார். யோசேப்பு அதன் அர்த்தத்தைத் தெளிவாகக் கூறினான். 
அதன் விவரமாவது: "பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார்.  எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும். அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; 
அப்பொழுது எகிப்து தேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும். வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம். இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது. ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக' (ஆதியாகமம் 41:28-31) என்று சொல்லி முடித்தான். 
இதைக்கேட்ட பார்வோன் ராஜா யோசேப்பையே அதிகாரியாக நியமித்தார். அந்த நேரத்தில் தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரர்கள் வசிக்கும் கானான் தேசத்திலும் பஞ்சம் உண்டாயிற்று, அவர்கள் உணவு பெற்றுக்கொள்ள எகிப்துக்கு வந்தனர். 
அப்போது யோசேப்பு தன் சகோதரர்களைப்பார்த்துச் சொன்னான், "நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால் நீங்கள் சஞ்சலப்படவேண்டாம், ஜீவரட்சனை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும் பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடு காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.' (ஆதியாகமம் 45:4,5,7) 
ஆகவே, தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு ஒருபோதும் தீமை செய்யார்.  "தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதென்று நான் நிச்சயத்திருக்கிறேன்'  என்று பரிசுத்த வேதாகமத்தில் கூறியிருக்கிறபடி நாம் கலங்க வேண்டாம், திகைக்க வேண்டாம். தேவன் அனைத்தையும் நமக்கு நன்மையாக செய்து முடிப்பார்  என்று விசுவாசிப்போம். தேவ ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com