நீர் பருகலில் நிறைவு

நில உலகில் வாழும் மனிதர்கள் உண்ணும் உணவு விளைய உறுதுணையாகும் நீர் உண்பவருக்கு உணவாகவும் அமைகிறது. நீரின் பயன்கள் பல. நீரின் பல பயன்களையும் பயனுற பெற நீரைப் பருகும் முறை பாங்காக அமைய

நில உலகில் வாழும் மனிதர்கள் உண்ணும் உணவு விளைய உறுதுணையாகும் நீர் உண்பவருக்கு உணவாகவும் அமைகிறது. நீரின் பயன்கள் பல. நீரின் பல பயன்களையும் பயனுற பெற நீரைப் பருகும் முறை பாங்காக அமைய வேண்டும்.
உங்களின் நீர் பூமிக்குள் போய்விட்டால் அப்பொழுது ஒலித்தோடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ் என்பதை அறிவிக்கிறது அருமறை குர்ஆனின் 67-30 ஆவது வசனம். இயந்திரங்களைப் பூமிக்குள் செலுத்தி எத்தனை காலத்திற்கு  எத்தனை அடிமட்ட நீரை உறிஞ்ச வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க ஏவுகிறது இந்த வசனம். இஸ்ர வேலர்கள் செங்கடலைக் கடந்து ஸினாய் திடலில் தங்கிய பொழுது அல்லாஹ் ஊற்றுகளை உண்டாக்கி பருக நீர் கொடுத்ததைப் பகர்கிறது 2-60 ஆவது வசனம். வானத்திலிருந்து தூய நீரை நாம் இறக்கினோம் என்று இறைவன் 25- 48 ஆவது வசனத்தில் இயம்புகிறான். மழைநீர் மற்ற நீரினும் தூயது என்பதை அழுத்திச் சொல்கிறது இவ்வசனத்தில் வரும் மாஅன்தஹூரன் என்னும் அரபி சொல். இளநீர் மற்ற பொருள்களைச் சுத்தப்படுத்தாது. தூயநீர்  மனிதர்கள் குடிக்கவும் பொருள்களைக் கழுவி சுத்தப் படுத்துவதற்கும் பயன்படும்.
பாத்திரத்தில் வாய் வைத்து ஓசையின்றி மெதுவாக நீரை உறிஞ்சி குடிப்பார்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள். மண், செம்பு, மரம், பளிங்கு பாத்திரங்களில் நீர் அருந்துவார்கள் நீதர் நபி (ஸல்) அவர்கள். பாத்திரங்களை மூடி வைக்கவும் நீர் பைகளைக் கட்டி வைக்கவும் கருணை நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டதை இயம்புகிறார் ஜாபிர் (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம்,  அபூதாவூத். இது தூசு பாத்திரத்தில் பையில் விழாமலும் நீர் மாசுறாமலும் இருப்பதற்காக இயம்பியது. நீரில் உள்ள தூசியைக் களைய நீரில் வாயால் ஊத கூடாது. தூசி படர்ந்த பகுதியை மட்டும் கீழே ஊற்றியபின் எஞ்சிய நீரைப் பருகி விஞ்சிய தாகத்தைத் தணித்தார்கள் தாஹா நபி (ஸல்) அவர்கள் என்று எடுத்துரைக்கிறார் அபூகதாதா (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸஈ.
நின்று நீர் அருந்துவதை நீதர் நபி (ஸல்) அவர்கள் தடை செய்த தகவலைத் தருகிறார் அனஸ் (ரலி) நூல்- முஸ்லிம், திர்மிதீ. இன்றைய மருத்துவம் நின்று கொண்டு நீர் அருந்துவதால் குடல் இறக்கம், விதை வீக்கம் ஏற்படுவதாக கூறுகிறது. 
ஒட்டகம் ஓர் இழுப்பில் ஒரே மூச்சில் நீர் குடிக்கும். அவ்வாறு குடிப்பது கூடாது. மூச்சுவிட்டு மூன்று முறையில் நீர் குடிக்க கூறினார்கள் குவலயம் திருத்த வந்த திருநபி (ஸல்) அவர்கள் என்று அறிவிக்கிறார் அனஸ் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ. அவ்வாறு மூச்சுவிடும் பொழுது நீருள்ள பாத்திரத்தில் மூச்சு விடாது பாத்திரத்தை வாயிலிருந்து நகர்த்தி கொண்டு மூச்சுவிட முத்து நபி (ஸல்) அவர்கள் மொழிந்ததை அறிவிக்கிறார் அபூதர்தா (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸஈ. ஒரே இழுப்பில் ஒரு மூச்சில் நீர் குடிப்பது விலங்குகளின் பழக்கம்.  மனிதர்கள் விலங்கினும் வேறுபட்டு மேலான ஆறறிவு படைத்தவர்கள். அதற்கேற்ப ஆரோக்கியமான பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். நீர் பாத்திரத்தில் மூச்சு விடுவதால் கரியமில வாயு நீரில் கலக்கும்.
கோபம் கொண்டவர் குளிர்ந்த நீர் பருகினால் கோபத்திற்குக் காரணமான கழுத்து நரம்புகள் முறுக்கேறி சூடான உடல் கட்டுக்குள் அடங்கி கோபம் குறையும். படுத்தவாறு நீர் பருகுவது நரம்பு தளர்ச்சியை உண்டாக்கும். பாலில் நீர் கலந்து பருகினார்கள் அருமை நபி (ஸல்) அவர்கள். அவ்வாறு பருகுவது உடல் நலத்திற்கு உகந்தது என்று உரைத்ததை அறிவிக்கிறார் ஜாபிர் (ரலி) நூல்- புகாரி. பருகும் பானங்களில் மேலானது இனிப்பு உள்ளதும் குளிர்ந்து உள்ளதும் என்று கூறியதைக் கூறுகிறார் அன்னை ஆயிஷா (ரலி) நூல்- திர்மிதீ.
மக்காவில் சிறப்புமிக்க புனித ஹரம் ஷரீபில் உள்ள ஜம் ஜம் கிணறு உருவாகி 4863 ஆண்டுகள் ஆவதாக ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர். இந்த ஜம் ஜம் நீர் தாகம் தீர்ப்பதோடு பசியாளிகளின் பசியையும் தீர்க்கும். எல்லா நோய்களுக்கும் நல்மருந்து என்பது உறுதியான உண்மை. உள்ளம் ஒன்றி ஒன்றான இறைவனை இறைஞ்சி நிறையவே இந்நீரைக் குடித்து பயன் பெற்றோர் பலர்.
முறையோடு நீர் பருகி நிறைவு பெறுவோம். இறைவன் அருளால் நிம்மதியாக வாழ்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com