முன்னோருக்கான முதல் கடமை!

தமிழர் வாழ்வியலில் இறந்துபட்ட முன்னோரை தெய்வமாக்கி வழிபடுவது ஒரு முக்கிய சடங்காகவே இருந்துள்ளது.
முன்னோருக்கான முதல் கடமை!

தமிழர் வாழ்வியலில் இறந்துபட்ட முன்னோரை தெய்வமாக்கி வழிபடுவது ஒரு முக்கிய சடங்காகவே இருந்துள்ளது. தமிழகத்தில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக அவர்கள் உருவம் பொறித்த நடுகற்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. மன்னனோ அல்லது உயர்ந்த நிலையில் உள்ளவர்களோ இறந்தால் அவர்களைப் பள்ளிப்படுத்திய இடத்தில் ஒரு கோயில் கட்டி வழிபடும் பழக்கம் இருந்துள்ளது.  

இந்து மதத்தில்  பிண்டம் வைத்துப்  படைப்பது  மிகவும் முக்கியமான சடங்காகப் போற்றப்படுகிறது. இறந்த முன்னோர்கள் தென் திசையில் தனியுலகில் இருந்து கொண்டு  தம் வாரிசுகள் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நம் கரங்களால் எள்ளும் சாதமும் பெற்று உண்டு நம்மை ஆசீர்வதித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் தென் திசையில் இருப்பதால்தான் அவர்களை தென்னவர், தென்புலத்தார் , தென்புலம் வாழ்நர் எனவும் குறிப்பிடுகின்றனர்.

முன்னோர் வழிபாட்டை, திருக்குறளும் பிற இலக்கியங்களும் "நீத்தார் கடன்' என்று போற்றுகின்றன. இப்படி நம் முன்னோர்களை வழிபடுவதை வள்ளுவர், "தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை' என்று வழிபாட்டில் அவர்களை வழிபடுவதையே முதன்மையாக வைத்து குறளை இயற்றியுள்ளார்.   

இலக்கியங்களில் மட்டுமில்லாமல் இதிகாசங்களிலும் நம் முன்னோர்களுக்கு கடன் செலுத்தும் கடமை குறிப்பிடப்படுகிறது. "திலதர்ப்பணபுரி' என்ற தேவாரபாடல் பெற்ற தலம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ளது. அங்கு இருக்கும் இறைவன் பெயர் முக்தீஸ்வரர் என்பதாகும்.

தசரதனுக்கும், ஜடாயுவிற்கும் ராமன் திலதர்ப்பணம் செய்த இடம் என்ற புராணப் பெருமை உடையது இத்தலம்.  ராமர் இங்கு தர்ப்பணம் செய்து வழிபட்டதால் தசரதனுக்கு முக்தி அளித்தார் சிவபெருமான் என்று இவ்வாலயத்தின் தலபுராணம் கூறுகிறது. ராமர் தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார். இந்த சாத உருண்டைகள்  லிங்கங்களாக மாறின. தனி சந்நிதியில் இந்த லிங்கங்களையும், ராமர்,  தர்ப்பணம் செய்யும் கோலத்தில் உள்ளதையும் தரிசிக்கலாம்.   ராமர் தர்ப்பணம் செய்யும் பாவனையில்  வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார். 

நற்சோதி என்ற மன்னன்  தன் தந்தைக்கு பிதுர் காரியங்கள் செய்ய வேண்டி வந்தது. எந்த ஊரிலும்  பித்ருக்கள் நேரடியாக வந்து அன்னத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. எங்கு வந்து நேரடியாகப் பிண்டங்களைப் பெற்றுக் கொண்டு என்னை ஆசிர்வதிக்கிறார்களோ அதுவரை ஓயமாட்டேன் என்று ஊர் ஊராகச் சென்று பித்ரு காரியங்கள் செய்தான் மன்னன். கடைசியில் திலதர்ப்பணபுரி வந்தபோது பித்ருக்கள் பிண்டத்தை கைநீட்டி வாங்கிக் கொண்டார்களாம். அவனது விக்ரகமும்  பிண்டம் கொடுக்கும் வகையில் ராமர் சந்நிதியிலேயே அமைந்துள்ளது. 

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (செதலபதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய  7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது. இவ்வூர்களில் நம்  முன்னோர்களுக்கு கொடுக்கப்படும் அர்க்கியம் மற்றும் பிண்டங்கள் அவர்களிடம் நேரிடையாக சென்று சேர்ந்து நம்மை ஆசிர்வதிக்கிறார்கள் என்று  சொல்லப்படுகிறது. 

தூல சரீரத்தை விட்டுப் பிரிந்த பிறகு மனிதனின் ஆன்மா குறிப்பிட்ட காலம் வரை  நம்மையே கவனித்துக் கொண்டு பிதுர்லோகம் என்னும் தென்புலத்தில் வாழ்ந்து  இருக்கும் . ஆன்மா மோட்சம் அடைந்து விட்டாலோ அல்லது மறுபிறவி பெற்று விட்டாலோ நாம் அளிப்பவை ஆன்மா ஐக்கியப்பட்டுள்ள  இடத்திற்கு தானே சென்று சேர்ந்து விடும். ஓர் ஆன்மா மறு பிறவியில்லாத மோட்சத்தை அடைந்தால் இறைவனிடம் சேர்ந்து விட்டால்  நாம் செய்யும் முன்னோர் கடன் இறைவனைச் சென்று சேர்ந்து விடும் எனப்படுகிறது. 

தமிழ் மாதப்பிறப்பு, அமாவாசை மற்றும் தங்கள் தாய் தந்தையர் இறந்த நாள்களிலும் தங்கள் முன்னோர்களை வேண்டி பிண்டதானம் செய்வது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதைத் தவிர, மகாளய அமாவாசையும் மகாளய பட்சமும் நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு உகந்த நாள்களாகும்.

"மறந்தவனுக்கு மகாளயபட்சம்'  என்பது பழமொழி. அதாவது முன்னோர்களுக்கு ஒரு வருடம் திதி  கொடுக்காமல் மறந்து இருந்தாலும்  புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட திதி கொடுத்த பலன் வந்து சேரும் என்பது இதன் பொருளாகும். தென்புலத்தில் இருக்கும் மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாள்கள் அவ்வுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாள்கள் நம்மோடு தங்கிச் செல்லும் காலமே மகாளயபட்சம் ஆகும்.  இது புரட்டாசி மாதத்து பெளர்ணமி திதிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும்.

அந்நாள்களில் புனிதத் தலங்கள் புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக வேண்டுதல் செய்யலாம். அவரவர் சக்திக்கு தகுந்தவாறு வஸ்திரதானம், அன்னதானம்,  சிரமப்படும் மாணவர்களின் கல்விக்கு வித்யாதானம் செய்யலாம். இவ்வாறு செய்வதால் நம்முடன் இருக்கும் நம் முன்னோர்கள் மகிழ்வுடன் நம்மையும் நம் வாரிசுகளையும் ஆசீர்வதிப்பார்கள்.

இவ்வாண்டு, செப்டம்பர் 25 -ஆம் தேதிதுவங்கி, அக்டோபர் 7-ஆம் தேதி வரை மகாளய பட்சமும்;  தொடர்ந்து அக்டோபர் 8 -ஆம் தேதி மகாளய அமாவாசையும் வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com